ஐ நா மனித உரிமை ஆணையருக்கு இந்தியாவின் வலுவான பதில்

(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி. குருமூர்த்தி)

ஐ நா  மனித உரிமை ஆணையர், சயீது ராத் அல் ஹுசைன் அவர்கள் ரோஹிங்கியா இனத்தவர் மீது இனப்படுகொலை செய்ததாக மியான்மர் அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார். தவிர, இந்தியாவுக்குள் நுழைந்த ரோஹிங்கியா இனத்தவரைத் திரும்ப அனுப்ப இந்தியா எடுத்த முடிவுக்குக் கண்டனமும் தெரிவித்தார். இதனை இந்தியா தீவிரமாக மறுத்துள்ளது.

பல ஆண்டுகளாக மியான்மரில் வசித்து வந்த போதிலும், 1982 ஆம் ஆண்டு முதல், 10 லட்சம் ரோஹிங்கியா இனத்தவர்கள்,  நாடு இல்லாச் சமுதாயமாகக் கருதப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். பௌத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மியான்மர், இவர்களை பெங்காலிகள் என்று முத்திரை குத்தி, வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒதுக்கி வந்துள்ளது. உலகில் மிக அதிக ஜனத்தொகை கொண்ட நாடு இல்லாச் சமுதாயமாக ரோஹிங்கியா இனத்தவர் விளங்குகின்றனர். மியான்மர் அரசு, ரோஹிங்கியா இனத்தவரைத் தங்கள் நாட்டின் சட்டப்பூர்வப் பிரஜைகளாகக் கருதாததால், இந்த இனத்தினர், சட்ட ரீதியாகவே  துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்குக் கல்வி, சுகாதாரம், பொருளாதாரத்தில் பங்கு, போக்குவரத்து ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏழ்மைத் துன்பத்தில் ஆழ்ந்த வண்ணம் உள்ளனர்.

ரோஹிங்கியா இனத்தவருக்கு எதிராக, வங்கதேச எல்லையில் உள்ள ரக்கைன் நகரில்  ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்ட போது, சுமார் 400 ரோஹிங்கியா இனத்தவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ரோஹிங்கியா இனத்தவரிடையே, செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுத்ததாக மியான்மர் ராணுவம் கூறுகிறது. இது நடந்த ஒரு வாரத்திற்குள் சுமார் 30,000 ரோஹிங்கியர்கள் வங்க தேச எல்லைக்குள் நுழைந்தனர். அங்கு ஏற்கெனவே 40,000 ரோஹிங்கியர்கள் அகதிகளாக இருப்பதாக வங்கதேசம் கூறுகிறது. இந்தியாவில், சுமார் 40,000 ரோஹிங்கியர்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களுள் 16,000 பேருக்கு அகதிகளுக்கான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறுபான்மையின ரோஹிங்கியர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் மூலம் ரக்கைன் நகரின் மேற்குப் பகுதியில் கிளர்ச்சி வெடிக்கும் என்று ஐ நா கருதுகிறது.

ஐ நா மனித உரிமை ஆணையரின் கருத்துக்கள், இந்தியாவிற்கு மிகுந்த குழப்பத்தை அளித்துள்ளன. இது குறித்துக் கருத்து தெரிவித்த ஐ நா வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தவறான அறிக்கைகள் மற்றும் தனிப்பட்ட போக்குகளின் மூலம் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள், மனித உரிமைகள் பற்றிய புரிதலை மேலெடுத்துச் செல்ல உதவாது என்று கூறினார்.

சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்கள் மூலம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று இந்தியா கவலை கொண்டுள்ளது. சட்டத்தை நிலை நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை மனிதாபிமானமற்ற செயல்களாகத் தவறாக எடை போடப்படக் கூடாது என்று இந்தியா கூறுகிறது. ரக்கைன் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமை, அதனால் வெளியேறும் ரோஹிங்கியா அகதிகள் கூட்டம் ஆகியவை குறித்து, இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மியான்மரில் வசிக்கும் ரோஹிங்கியர்கள்,  பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் நலன்கள் மீது அக்கறை கொண்டு செயல்படுமாறு இந்தியா மியான்மர் அரசைக்  கேட்டுக்கொண்டுள்ளது. வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து அந்நாட்டில் அமைதியை விரைவில் நிலை நாட்டுவது மிக அவசியம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடியைக் கட்டுப்பாட்டுடனும் முதிர்ச்சியுடனும் அணுகி, மியான்மரில் பதற்றம் நிலவும் ரக்கைன் பகுதியில் வன்முறையைக் குறைக்க வழி தேட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. முன்னதாக, ரக்கைன் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

எக்காரணத்தைக் கொண்டும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்றும் பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம் என்றும் இந்தியாவும் மியான்மரும் அறிவித்துள்ளன. பிரதமர் மோதி அவர்கள் அண்மையில் மியான்மருக்குப் பயணம் செய்த போது, அந்நாட்டுப்  பொது மக்களும் பாதுகாப்புப் படையினரும் வன்முறையில் இறந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். அமைதி, மத நல்லிணக்கம், நீதி, கண்ணியம் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்துத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பிரதமர் மோதி அவர்கள் வலியுறுத்தினார். அவரது மியான்மர் பயணத்தின் போது, ரக்கைன் மாநில மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மியான்மர் அரசுடன் இணைந்து இந்தியா உதவிட ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கைகளில் முக்கியப் பங்கு தாரராக விளங்குவதோடு, இந்தியாவின் கடல் சார்ந்த ராஜீய நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்ற நாடாகவும் மியான்மர் விளங்குகிறது. உள் கட்டமைப்பு  மற்றும் சமூக, பொருளாதாரத் திட்டங்கள் மூலம் ரக்கைன் மாநில மேம்பாட்டுக்கு இந்தியா துணைபுரியும்.

ஐ நா வின் 1951 ஆம் ஆண்டின் அகதிகள் சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. அகதிகளின் நிலை குறித்து, 1967 ஆம் ஆண்டு ஐ நா வெளியிட்ட விதிமுறைகளும்  இந்தியாவைக் கட்டுப்படுத்தவில்லை. இருப்பினும், மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் இந்தியா பதித்துள்ள தடம் அப்பழுக்கற்றது. கடந்த காலத்தில், மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, திபெத், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா  அடைக்கலம் கொடுத்துள்ளது. ரோஹிங்கியா இன்னல்களுக்குத் தீர்வு காண அனைத்து நாடுகளும் முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. மியான்மர் அரசு, நீண்ட நாட்களாக நிலவி வரும் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பது அவசியம்.

Pin It