ஓமன் – ஒரு சகாப்தத்தின் முடிவு

(பாதுகாப்புத் துறை ஆய்வு மைய ஆய்வாளர் டாக்டர் லக்ஷ்மி பிரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ராஜ்குமார் பாலா.)

ஓமன் நாட்டை ஐம்பது ஆண்டுகாலத்துக்கு ஆட்சி செய்த அந்நாட்டு மன்னர் கபூஸ் பின் சையித் அல் சையித் ஜனவரி 10 ஆம் தேதி மறைந்தது ஒரு சகாப்தத்தின் முடிவாகக் கருதப்படுகிறது. நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவரின் மறைவு முக்கியமான இந்த வளைகுடா நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. உலக அளவில் மதிக்கப்படும் மிகப்பெரிய தலைவராக மன்னர் கபூஸ் விளங்கினார். அந்தப் பிராந்தியத்தின் வலிமை வாய்ந்த நாடுகளான சௌதி அரேபியா மற்றும் ஈரானுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓமனில் நிலைத்தன்மையும் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கையும் கொண்டிருக்க 79 வயதான ஓமன் மன்னர் வித்திட்டார். 1970 ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாமல் நடந்த புரட்சியில், பழைமைவாத மரபில் ஊறிய தமது தந்தையைப் பதவியிலிருந்து நீக்கிய மன்னர் கபூஸ், தோஃபர் கிளர்ச்சியை ஒடுக்கினார். அடிமைத்தனத்தை ஒழித்தார். ஓமன் நாட்டை நவீனத்துவ பாதைக்கு இட்டுச் சென்றார்; 1996 ஆம் ஆண்டில் எழுத்துவடிவில் முதலாவது அரசியல் சாசனத்தை சமர்ப்பித்தார். அரசியல், வர்த்தகம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்து அவர்களின் மேம்பாட்டுக்கு ஊக்கம் கொடுத்தார். நவீன ஓமனின் தந்தை என்று பரவலாக அறியப்பட்ட  அவர், இரானுடன் முக்கிய அணுவாயுத ஒப்பந்தத்தை 2015 ஆம் ஆண்டில் கையெழுத்திட மத்தியஸ்தம் செய்து முக்கியப் பணியாற்றினார். யேமனில் சண்டையிட்ட குழுக்களிடையே சமாதானம் செய்து ஒன்றுபடுத்தியதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.

நேரடி வாரிசு இல்லாத நிலையில் ஓமனில் அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கும் என்ற யூகங்களுக்கு மத்தியில், மன்னரின் குடும்ப சபை, மறைந்த மன்னர் கபூஸின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹைதம் பின் தாரிக் அல் சையித் -ஐ அடுத்த மன்னராக்க முடிவு செய்துள்ளது. சுல்தானகத்தில் கலாச்சார மற்றும் பராம்பரியத் துறைக்குத் தலைமையேற்றுள்ள தாரிக் அல் சையீத், முன்னாள் மன்னரின் விருப்பத்துக்கு உரிய தெரிவு ஆவார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், நிதித்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுனர் என பல பொறுப்புகளுடன் தனித்தன்மையுடன்  செயல்பட்ட கபூஸின் வழியில் புதிய மன்னர் ஆட்சியை ஏற்கவுள்ளார். முன்னாள் மன்னரைப் போன்று அதே அளவு மதிப்பையும் மரியாதையையும் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. சற்று சிரமமான நிலையில் உள்ள நிதி நிலைமை, வேலைவாய்ப்பற்ற தன்மை, ஆகியன புதிய ஆட்சியாளரின் முன் உள்ள சவால்கள். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வெளிப்புற நெருக்குதல், பிரதேச பகைமை, ஆகியவற்றை சமாளித்து நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பராமரிப்பதில் அவரது ஆளுமை சோதிக்கப்படும். ஓமன் மன்னராகப் பதவியேற்ற பிறகு, மேலும் அந்நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவதற்கு முன்னாள் மன்னரின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றப்போவதாக ஹைதம் பின் தாரிக் உறுதிகூறியுள்ளார்.

மன்னர் கபூஸ் பின் சையீத் மறைவையடுத்து, அரசுமுறைத் துக்கம் மூன்று நாட்களுக்கு அனுசரிக்கப்படும் என்றும், அடுத்த 40 நாட்களுக்குக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மஸ்கட் அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஈரான், சௌதி அரேபியா, துருக்கி, ஜோர்டன், எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் ஓமன் மன்னரின் மறைவுக்கு வருத்தமும் இரங்கலும் தெரிவித்துள்ளன. மறைந்த ஓமன் தலைவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோதி, நமது வட்டாரம் மற்றும் உலகத்தின் கலங்கரை விளக்கமாக அவர் திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டினார். இந்தியாவின் உண்மையான நண்பர் மறைந்த மன்னர் கபூஸ் என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், வட்டாரத்திலும் உலகத்திலும் அமைதியை நிலைநிறுத்த அயராது பாடுபட்ட மாபெரும் தலைவரையும் இராஜதந்திரியையும் உலகம் இழந்துவிட்டதாகத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய ஓமன் மன்னரின் மறைவுக்கு மரியாதையும் அஞ்சலியும் செலுத்தும் வகையில், ஜனவரி 13 ஆம் தேதி, நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அன்றைய தினம் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இந்திய அரசு மற்றும் மக்களின் சார்பாக மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, இந்தியக் குழு ஒன்றுக்குத் தலைமையேற்று சிறுபான்மையினர் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள் ஜனவரி 14 ஆம் தேதி மஸ்கட் புறப்பட்டுச் சென்றார். ஓமன் சுல்தான் கபூஸின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் மோதி, இந்தியா-ஓமன் இடையே சிறப்பான செயல்நோக்குக் கூட்டாளித்துவம் அமைய வலுவான தலைமை அவர் வழங்கியதாகக் குறிப்பிட்டார். புதிய மன்னருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், மன்னர் ஹைதமுடன் கைகோர்த்து செயல்பட்டு செயல்நோக்குக் கூட்டாளித்துவத்தை மேலும் பலப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகச் சொன்னார். நட்புறவுகளையும் செயல்நோக்கு உறவுகளையும் இரு நாடுகளும் பகிர்ந்துகொண்டுள்ளன. பழங்காலம் தொட்டே இருநாடுகளும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஓமனில் பணிபுரிந்து வரும் 8 லட்சம் இந்தியர்கள் நமது நாட்டுக்கு வருவாயை ஈட்டித் தந்து வருகின்றனர். சுல்தானகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக முக்கியப் பங்களிப்பை இந்தியத் தொழிலாளர்கள் வழங்கி வருகின்றனர். புதிய ஓமன் மன்னரின் கீழ், முன்னர் இருந்ததைப் போன்று நெருங்கிய உறவுகளைப் பராமரிப்பதை  இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.

Pin It