கரிகாம் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா

(பத்திரிகையாளர் தனுபநீ சென்குப்தா ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம் )

15 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய கரிகாம் என்னும் கரீபியன் நாடுகளின் கூட்டமைப்புடன் இந்தியா நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து விடுபட்ட இந்நாடுகளின் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு என்ற நோக்குடன் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தக் கூட்டமைப்பு. கயானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, சுரிநாம் போன்ற நாடுகளில் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்தக் கூட்டமைப்புக்கு இந்தியா வலுவான ஆதரவை அளித்து வருகிறது. கரீபியப் பிராந்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் வரலாறு மற்றும் கலாச்சார அடிப்படையிலானது. காலனி ஆட்சிக்காலத்தில், அடிமை கலாச்சாரம் ஒழிக்கப்பட்ட பின் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கரீபியப் பிராந்தியத்தில் உள்ள பிரிட்டனின் ஆளுமைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளை அடைந்தனர். அவர்களுள் பலர் புதிய சூழலை ஏற்று வாழத்தொடங்கினர். பலர், தங்கள் பழக்க வழக்கங்களைத் தக்க வைத்துக் கொண்டு, அதன் மூலம் இந்தியாவுக்கும் கரீபியப் பிராந்தியத்துக்கும் இடையிலான கலாச்சாரத் தொடர்புகளை உறுதிப்படுத்தினர்.

இந்தியாவிற்கும் காரிகாம்முக்கும் இடையிலான சமீபத்திய சந்திப்பு 72ஆவது ஐ.நா. பொதுச் சபையை ஒட்டி நியூயார்க்கில் நடைபெற்றது. காரிகாம்மின் தலைவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். பல்வேறு விதமான விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். வெளியுறவுத்துறை அமைச்சர் அவசரகால உதவி நிதியாக 2 இலட்சம் அமெரிக்க டாலர்களை இர்மா சூறாவளியால்  மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அளித்துள்ளார். இந்தியாவின் ஆதரவின் உறுதியை உணர்த்தும் விதமாக இந்த உதவி அமைந்துள்ளது. ஐ.நா.விற்கான இந்தியப் பிரதிநிதிகளை ஆன்டிகுவா மற்றும் பார்புடா, டொமினிகா ஆகியற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார். காரிகாம்மில் மறுசீரமைப்புத் திட்டடங்களுக்காக தெற்கு தெற்கு கூட்டுறவுக்கான இந்திய ஐ.நா. பங்குதாரத்துவ நிதியத்தில் இருந்து 20 இலட்சம் அமெரிக்க டாலர்கள் அளிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். செயிண்ட் மார்ட்டனிலிருந்து மக்களை வெளியேற்றும்போது இந்தியர்களுக்கு மட்டுமல்ல 9 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் இந்தியா உதவியது. இந்தியர்களின் மனதில் கரீபியர்களுக்கு ஒரு இடம் உண்டு என்றும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது கரீபிய பங்குதார்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது ஆண்டுதோறும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவும் காரிகாம்மும் காமன்வெல்த், ஜி 77 மற்றும் அணிசேரா இயக்கத்தின்  உறுப்பு நாடுகள். பல்வேறு விதமான அமைப்புகளில் இருநாடுகளும் ஒருவரை ஒருவர் ஆதரிக்கும் நீண்ட பாரம்பரியம் உள்ளது. திறன் வளர்ப்பில் கூட்டுறவை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. வணிகம் மற்றும் வர்த்தகத்தை வளர்ப்பது, மக்களோடு மக்களுக்கு உள்ள தொடர்பை அதிகரிப்பது, பல்வேறு துறைகளில் பயிற்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, வணிக நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் கலாச்சார திருவிழாக்களின்போது நிகழ்ச்சி நடத்துவது, விசாக்கள் வழங்குவது என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.

காரிகாம் செயலகத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை இந்த ஆண்டு நவம்பருக்குள் முடிக்க இந்தியா உதவி செய்யும். காரிகாம் ஊழியர்களின்  திறன் வளர்ப்பில் இந்தியா உதவும். இதில் இந்தியாவில் உள்ள கரீபிய நாடுகளின் இளம் தூதர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதும் உள்ளடக்கம். அத்தகைய அடுத்த நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும்.

விலங்கு மற்றும் பால்வளத் துறைகளில்  பயிற்சி நிகழ்ச்சிகளை கரீபிய நாடுகளுக்காக இந்திய விவசாயத்துறை அமைச்சகம் வழங்கும். தரமான மருந்தியல் பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா உள்ளது. அது இந்திய மருந்தோ அல்லது சிறப்பு மருந்தோ, எதுவாக இருந்தாலும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் இந்தியா உற்பத்தி செய்யும். காரிகாம் உறுப்பு நாடுகளின் மருந்தியல் தேவைகளை சந்திக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது. எதிர்காலத் தேவைகளைக் கணிக்க மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளை ஒருங்கிணைக்க காரிக்காம் ஒரு பயிற்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா முன்மொழிந்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களை வளர்க்க இந்தியா நிபுணத்துவம் கொண்டுள்ளது. காரிகாம்முடன் கூட்டுறவுக்கான வரைவுத் திட்டத்தை உருவாக்க இது உதவும்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களில் ஒன்றாக தீவிரவாதம் உள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். தீவிரவாதத்தை அழிக்க சர்வதேச சமூகத்தால் வலுவான கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வலுவான சட்ட வலை பின்னல் தேவைப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபையின் சர்வதேச தீவிரவாதம் குறித்த ஒருங்கிணைந்த மாநாட்டை நாம் விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான வரைவு 1996ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. தீவிரவாதம் என்னும் போரைச் சமாளிக்க இது மிகவும் அவசியம்.

நம் அனைவருக்கும் கவலை தரக்கூடிய ஒரு முக்கியமான விவகாரம் காலநிலை மாற்றம். 1992ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. வலைபின்னல் வடிவாக ஒரு சர்வதேச அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியா வெளியிடும் புகையானது வளர்ந்த மற்றும் பல வளரும் நாடுகள் வெளியிடும் புகையிலிருந்து மிகவும் குறைவானது. சிறிய தீவு நாடுகளும் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ள நாடுகளும் காலநிலை மாற்றத்தால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது குறித்த  அக்கறை புதுதில்லிக்கு உள்ளது.

கால நிலை மாற்றத்தின் விளைவுகள் அவர்களைப் பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு ஆதரவாக புதுதில்லி இருக்கும். பிரான்சுடன் இணைந்து இந்தியா சர்வதேச சூரிய சக்திக் கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இந்த சோலார் உச்சிமாநாட்டில் பங்கேற்று இதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு காரிகாம் உறுப்பு நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். காரிகாம்முடன் வலுவான உறவுகள் வைத்துக்கொள்ள தன் அர்ப்பணிப்புணர்வை இந்தியா உறுதி செய்துள்ளது.

Pin It