கர்தார்பூர் வழித்தடம் திறப்பு.

(தெற்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – சத்யா அசோகன்.)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றம் நிறைந்த சூழலுக்கு இடையே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நரோவால் மாவட்டத்திலிருக்கும் குருத்வாரா தர்பார் சாஹிப் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் சீக்கியர்களுக்காக, கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தைத் திறப்பது என்று இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவெடுத்துள்ளன. கர்தார்பூர் சாஹிப், சீக்கிய மதத்தை ஸ்தாபித்த   புனிதர் குரு நானக் தேவ் அவர்களின் கோவிலாகும். இங்கு அவர் 18 ஆண்டுகள் தங்கியிருந்து போதித்தார். இதுவே சீக்கிய மதகுரு இறுதி மூச்சு வரை வாழ்ந்த புனிதத் தலமாகும். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குருநானக் தேவின் 550 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது, இந்த வழித்தடத்தைத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு நவம்பரில்,  இந்தியாவின் குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள தேரா பாபா நானக்கிலிருந்து சர்வதேச எல்லை வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.

பாகிஸ்தானில் ஏறத்தாழ 173 சீக்கிய மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றில் சில புனிதத் தலங்களுக்கு மட்டுமே இந்திய சீக்கியர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், இருநாடுகளுக்குமிடையே, பரஸ்பரம்  பக்தர்கள் புனிதத் தலங்களுக்குச் செல்ல, 1974 இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தின் கீழ், அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, எல்லையில் அமைந்துள்ள தேரா பாபா நானக் புனிதத் தலத்திலிருந்து, பைனாகுலர் வழியாக மட்டுமே, இந்தியா சீக்கியர்கள் குருத்வாரா தர்பார் சாஹிபை தரிசிக்க முடிந்தது. பைசாகி பண்டிகை, குரு அர்ஜூன் தேவ்ஜி தியாக தினம்,  மஹாராஜா ரஞ்சித் சிங் நினைவு நாள் மற்றும் குரு நானக் தேவ்ஜியின் பிறந்த தினம் என்று, வருடத்திற்கு நான்கு முக்கிய தினங்களில் மட்டுமே பாகிஸ்தான் சொற்ப எண்ணிக்கையிலான இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு அங்கு செல்ல அனுமதி அளித்து வந்தது.

தர்பார் சாஹிப் புனிதத்தலத்தை நெடுவழிச் சாலை மூலம் இணைத்து, இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்ரீகர்கள் செல்ல வழி வகுக்கும் திட்டம் முன்பே முன்மொழியப்பட்ட திட்டமாகும். இந்த நெடுவழிச் சாலை அமைக்கும் திட்டம் குறித்து, அப்போதைய பிரதமர் வாஜ்பேயி அவர்களின் புகழ் பெற்ற லாகூர் பேருந்துப் பயணத்தின் போது, இந்தியா முன்மொழிந்தது. 1999 ஆம் ஆண்டு கர்தார்பூர் சாஹிபில் மறு சீரமைப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், அதே ஆண்டில், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முன்னாள் இயக்குனர் லெப்டினண்ட் ஜெனரல் ஜாவீத் நாசீர் தலைமையின் கீழ், பாகிஸ்தானிய சீக்கியர்களுக்குத் தங்களது வழிபாட்டுத் தலங்களைத் தாங்களே நிர்வகிக்கும் தன்னாட்சியை வழங்குவதற்காக, பாகிஸ்தான் குருத்வாரா பிரபந்தக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த அமைப்பானது, பாகிஸ்தானின் இடம் பெயர்ந்தோர் சொத்து வாரியத்தின்கீழ் இயங்குவதால், இந்த அமைப்பின் தன்னாட்சி என்பது வெறும் பெயரளவில்தான் உள்ளது.

சீக்கிய யாத்ரீகர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப் செல்வதற்கு ஏதுவாக, கர்தார்பூர் வழித்தடத்தைத் திறக்கத் தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்த பின்னர், இரு நாடுகளும் நடப்பாண்டு மார்ச் மாதம், அட்டாரியில் முதல்முறையாக சந்தித்து, இந்த வழித்தடத்தை செயல்படுத்துவதற்கான முறைகள் குறித்து விவாதித்தன. ஆனால் இரண்டு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. வழிபாட்டுத் தலத்திற்கு வரும் யாத்ரீகர்களிடம் தலா 20 டாலர் கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது.  இந்த கட்டண வசூல் மூலம் திரட்டப்படும் நிதி, வழித்தடத்தைப் பராமரிக்க உதவும்  என்பது பாகிஸ்தானின் முக்கிய வாதமாக உள்ளது. ஆனால் இந்தக் கட்டணம், ஏழை யாத்ரீகர்களுக்குப் பாரமாக இருக்கும் என்றும், யாத்ரீகர்கள் தொடர்ந்து இலவசமாகச் சென்றுவர பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா வற்புறுத்தி வருகிறது. தவிர, இந்தியாவிலிருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுடன், இந்தியத் துணை தூதரக மற்றும் நெறிமுறை அதிகாரிகள் உடன் செல்ல அனுமதிக்குமாறு இந்தியா வலியுறுத்தி வருவதிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடந்த காலங்களில், பாகிஸ்தானிலுள்ள பாஞ்சா சாஹிப் மற்றும் நானாகானா சாஹிப் குருத்வாராக்களுக்கு வழிபடச் சென்ற இந்திய யாத்ரீகர்களை, இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கு, பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து, பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.

இரு நாடுகளும், யாத்ரீகர்களுக்கு விசா அவசியமில்லை என்றும்,  ஆனால் கணினி மூலம் பதிவு செய்வதும், தங்களது கடவுச் சீட்டை யாத்திரீகர்கள் கையில் வைத்திருப்பதும் அவசியம் என்றும் ஏற்றுக் கொண்டுள்ளன. நாளொன்றுக்குப் பத்தாயிரம் யாத்ரீகர்களை அனுமதிக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டது. இருப்பினும், இறுதியாக, 5000 யாத்ரீகர்களை அனுமதிக்க ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு தினங்களில் இந்த எண்ணிக்கையைக் கூட்டுவதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவிற்கு எதிரான சில தீய சக்திகள், பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவிற்கு எதிராக நிகழ்த்தப்படும் நாசவேலைகளுக்கு, கர்தார்பூர் வரும் யாத்ரீகர்களை உபயோகப்படுத்தி, அவர்களது ஆதரவைத் திரட்ட விரும்புகின்றன.  இது இந்தியாவுக்கு மிகப் பெரும் கவலையளிக்ககூடிய விஷயமாக உள்ளது. கடந்த காலத்தில் பஞ்சாப் தீவிரவாதத்திற்கு ஊக்கமளித்த பாகிஸ்தான், மீண்டும் தீவிரவாத நெருப்பை ஊதிப் பற்ற வைக்கக் கூடும் என இந்தியா கவலை கொண்டுள்ளது. கர்தார்பூர் திட்டக் குழுவில் உறுப்பினராக, இந்திய அரசிற்கு எதிரான கோபால் சிங் சாவ்லாவை பாகிஸ்தான் நியமித்ததன் மூலம், இந்த கர்தார்பூர் வழித்தடத் திட்டமானது, சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கோபால் சிங் சாவ்லா தீவிரவாதிகளுக்கு அமைப்பாளராக இருந்து வருபவர் என்பதால், பல நாடுகள் அவருக்குத் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கியர்களின் மிக முக்கிய புனித வழிபாட்டுத் தலமான கர்தார்பூர் சாஹிபுடன் யாத்ரீகர்களை இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படுவது மிக முக்கியமான நிகழ்வாகும்.  இந்த வழித்தடம், இருநாடுகளுக்கும் இடையே அமைதிக்கான வழித்தடமாகவும் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை இத்திட்டம் விதைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.

 

 

 

 

Pin It