கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள்  அறிவிப்பு – தொங்கு சட்டப்பேரவை நிலைமையில் கர்நாடகா.   

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொங்கு சட்டப்பேரவை நிலைமை ஏற்பட்டுள்ளது. 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. ஆனால் இக்கட்சிக்கு அரசு அமைப்பதற்கான 113 இடம் என்ற இலக்கில் 9 இடங்கள் குறைவாக உள்ளன. காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜேடிஎஸ் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை ஒரு இடத்திலும், கேபிஜேபி ஒரு இடத்திலும் வென்றுள்ளன. அரசு அமைப்பதற்கு ஜேடிஎஸ் ஸின் திரு எச் டி குமாரசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இருதரப்பினரும் ஆளுநரிடம் ஆட்சி அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். பாஜக வின் திரு எடியூரப்பா, கட்சியின் மூத்த தலைவர் திரு அனந்தகுமாருடன் ஆளுநர் திரு வாஜ்பாய் வாலாவை சந்தித்து,  பேரவையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

திரு குமாரசாமி, முதலமைச்சர் திரு சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத் ஆகியோர் ஆளுநரை சந்தித்து தங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கோரிக்கை விடுத்தனர். திரு சித்தராமையா, தங்களுக்கு ஆட்சி அமைக்கும் வகையில் 118 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக, அவர் ஆளுநரிடம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அளித்தார். இதனிடையே தேர்தல் ஆணையம் அனைத்து தொகுதிகளின் முடிவுகளையும் முறையாக அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு இருதரப்பினடமும்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பெங்களுருவில் இன்று நடைபெறும் பாஜக வின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மத்தியப் பார்வையாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் திரு ஜே பி நட்டா, திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்பார்கள். கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றி அசாதாரணமானது என்று பிரதமர் திரு நரேந்திர மோதி கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி, கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இதனிடையே, அரசு அமைப்பதில் இறுதி முடிவை ஆளுநர்தான் எடுக்கவேண்டும் என்று அரசியல் சட்ட நிபுணர் திரு சுபாஷ் காஷியப் கூறியுள்ளார்.

Pin It