கர்நாடக முதலமைச்சராக திரு பி எஸ் எடியூரப்பா நேற்று பதவியேற்பு – சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என திரு பி எஸ் எடியூரப்பா உறுதி.

கர்நாடக முதலமைச்சராக திரு பி எஸ் எடியூரப்பா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில ஆளுநர் திரு வாஜுபாய்வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பாஜக வின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்திற்குச் சென்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் திரு எடியூரப்பா பேசினார்.தமக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதை சட்டப்பேரவையில் நிரூபிப்பேன் என்று அவர் தெரிவித்தார். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திரு எடியூரப்பா அறிவித்தார்.

முன்னதாக, பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவினை நேற்று அதிகாலை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு ஏ கே சிக்ரி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், பதவியேற்புக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்தது. இருப்பினும், முதலமைச்சராகப் பதவியேற்பது இவ்வழக்கின் முடிவுக்கு உட்பட்டது என்று கூறிய டிவிஷன் பெஞ்ச், விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே, திரு எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Pin It