காட்மண்டுவில் அமைச்சர்கள் நிலையிலான பிம்ஸ்டெக் கூட்டம்.

(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

வங்காள விரிகுடாவின் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதாரக் கூட்டுறவுக் கழகமான பிம்ஸ்டெக் அமைப்பின் 15 ஆவது வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம், நேபாளத் தலைநகர் காட்மண்டுவில் நடைபெற்றது. வங்காள விரிகுடா எல்லையை ஒட்டிய தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இடையே, பிராந்திய அளவிளான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. பிம்ஸ்டெக் அமைப்பிலுள்ள நாடுகள் வங்க தேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகும். இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் பங்கேற்றார். நேபாளத்தில் கடந்த ஜூன் மாதம், மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிராச்சந்தா என்கிற, புஷ்ப கமல் தஹல் அவர்களிடமிருந்து நேபாளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேர் பகதூர் டியூபா அவர்களுக்கு, உடன்படிக்கையின் பேரில், ஆட்சி கை மாறிய பின்னர், இந்தியாவிலிருந்து ஒரு மூத்த தலைவர் நேபாளம் செல்வது இதுவே முதல் தடவையாகும்.

கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய நேபாளப் பிரதமர் டியூபா அவர்கள், தங்களுக்குள் ஒத்துழைப்பை ஆழமாக்கி, பிராந்தியச் சவால்களை எதிர்கொள்ளுமாறு பிம்ஸ்டெக் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். உலகின் பிற பகுதிகளில் நிகழ்வது போல், இப்பிராந்தியத்திலும், சர்வதேசக் குற்றங்கள், பயங்கரவாதம், ஆள் கடத்தல், சட்ட விரோத ஆயுத வர்த்தகம் போன்றவை நிகழ்வதால், அவற்றை முறியடிக்க, இப்பிராந்தியத்திலுள்ள நாடுகளின் கூட்டான பெரும் முயற்சிகள் மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில், வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, சுற்றுலா, வேளாண்மை, வறுமை ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த பல தரப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. முன்னதாக, பிம்ஸ்டெக் நாடுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற 18 ஆவது கூட்டத்தில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

 

இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், நேபாள அரசின் தலைமையுடன் இருதரப்புப் பேச்சு வார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிருப்தியில் இருக்கும் மாதேசிக் குழுவினை அரவணைத்து, செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கும் மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்களில் அக்குழுவினைப் பங்கேற்கச் செய்தல், பின்னர், 2018ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதிக்குள், பிராந்திய மற்றும் மத்திய அரசுகளுக்கான தேர்தல் நடத்துதல் போன்ற சவால்கள் நிறைந்த சூழலில் டியூபா அவர்களின் அரசு இருக்கும் நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சரின் பயணம் அமைந்துள்ளது. ஆனால், இத்தேர்தல்கள் நடைபெறும் முன்னர், அரசியலமைப்பில் சீர்திருத்தம்  மற்றும் தங்கள் எல்லைப் பகுதிகளை மீண்டும் நிர்ணயித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைச் செயல்படுத்த, மாதேசிக்குழு, ஜன்ஜாதிகள், தாருக்கள் போன்ற சிறுபான்மைக் குழுக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

பூட்டான் எல்லைப் பகுதியில், டோக்லாம் முச்சந்திப்பில் இந்தியாவும் சீனாவும் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் நேபாளப் பயணம் அமைந்துள்ளது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவுடனும், சீனாவுடனும் திறந்த வெளி எல்லைப் பகுதிகள் கொண்டுள்ள நேபாளத்திற்கும் இதில் சம அளவு அக்கறை உண்டு. இது குறித்து, நேபாள நாடாளுமன்ற விவாதங்கள் போதும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இவ்விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்டப் படவேண்டும் என்பதில் நேபாளம் உறுதியாக உள்ளது. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் பயணத்தைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில், நான்கு சீனத் துணைப் பிரதமர்களில் ஒருவரான வாங்யாங் அடங்கிய, உயர்மட்டக் குழு ஒன்று, நேபாளத்திற்குப் பயணிக்கவிருக்கிறது. இப்பயணம், ராஜீய அளவில், சீனா, நேபாளத்துடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு அமையவுள்ளது. வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து போன்ற துறைகளில் நேபாளத்துடன் தனது பிடியை அதிகரிக்க சீனா முயற்சிக்கிறது.

நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி மற்றும் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா அவர்களை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். இரு தலைவர்களுடனும், கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி, இணைப்புகள் மற்றும் நீர்மின்சக்தித் திட்டங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுவாக்குவது குறித்து அவர் பேச்சு நடத்தினார். ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி தொடங்கவிருக்கும் நேபாளப் பிரதமர் டியூபா அவர்களின் இந்தியப் பயணம் குறித்தும் அவர் பேசினார். பிரதமாராகப் பதவியேற்ற பின்னர், டியூபா அவர்கள் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும். நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்தும், பிற பலதரப்பட்ட விஷயங்கள் குறித்தும் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான பகதூர் மஹாரா அவர்களுடன், சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் விரிவாகப் பேசினார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, அரசியலமைப்புத் திருத்தங்களை வலியுறுத்தி வரும் நேபாள ராஷ்டிரிய ஜனதாக் கட்சிப் பிரதிநிதிகளும் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களைச் சந்தித்தனர்.

நேபாளத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதால், அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் கொண்டு வரத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நாடளுமன்றத்தில் டியூபா அரசு பெறுவது கடினமாகும் என்று தெரிகிறது. இந்தியாவை பொறுத்தவரை, நேபாளத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சமூக, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

 

Pin It