காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகளின் அபார சாதனை.

(மூத்த விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் ராகுல் பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

ஆஸ்திரேலியாவிலுள்ள கோல்டு கோஸ்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற 21 ஆவது காமன்வெல்த் போட்டிகளில், இந்திய வீராங்கனைகளின் சக்தி, பலரும் பாராட்டும் வண்ணம் பரிமளித்துள்ளது. 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

மகளிருக்கான பாட்மின்டன் ஒற்றையர் இறுதிச் சுற்றில் நுழைந்த இரண்டு இந்திய வீராங்கனைகளில், சாய்னா நேவால், 21-18, 23-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்துவை வென்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியில், 43 கிலோ எடைப் பிரிவில் முதன்முதலாக காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற மேரிகோம், தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் ஏற்கனவே, ஐந்து முறை உலக சேம்பியன் பட்டத்தை வென்றவர் என்பதும், ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பதும், தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில், போட்டியின் முதல்நாளே, காமன்வெல்த் போட்டிகளின் முந்தைய சாதனைகளை முறியடித்து, தங்கப் பதக்கத்தை வென்று,  அபார சாதனை படைத்து, பதக்க மழையைத் துவக்கி வைத்தவர் மீராபாய் சானு. அவரைத் தொடர்ந்து, மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த சஞ்சிதா சானுவும், 69 கிலோ எடைப் பிரிவில் பூனம் யாதவும் தங்கப் பதக்கங்கள் வென்றனர்.

ஆடவர் பளு தூக்கும் போட்டியிலும் இந்திய வீரர்கள் சளைக்கவில்லை. 77 கிலோ எடைப் பிரிவில், தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கமும், 85 கிலோ எடைப் பிரிவில் வெங்கட் ராகுல் ரகாலாவும் தங்கப் பதக்கங்கள் வென்றனர். 56 கிலோ எடைப் பிரிவில் பி. குருராஜா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவ்வாறாக, பளு தூக்கும் போட்டியில் மட்டுமே 9 பதக்கங்களைத் தட்டிச் சென்று, காமன்வெல்த் போட்டிகளின் மிகச் சிறந்த சாதனைகளை இந்திய வீரர், வீராங்கனைகள் படைத்தனர்.

துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் இந்திய வீராங்கனைகளின் கை ஓங்கியிருந்தது. 16 வயதே நிரம்பிய மனு பேக்கர், 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மிக இள வயது வீராங்கனை என்ற பெயர் பெற்றார். அதே போட்டியில், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால், 25 மீ. துப்பாக்கிச் சுடும் போட்டியில், ஹீனா சித்து தங்கப் பதக்கத்தைத் தவற விடவில்லை. ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பரிமளித்தனர். உலக சேம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜிது ராய், 25 மீ. துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். மெஹூலி கோஷ், ஓம் மித்ரவால், அபூர்வி சன்டேலா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

பாட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் முதன்முறையாக, காமன்வெல்த் தங்கப் பதக்கங்கள் வென்று வரலாறு படைத்தனர். ஆடவர் பிரிவிலும் டேபிள் டென்னிஸ் தங்கப் பதக்கத்தை இந்திய வீரர்கள் பெற்றுத் தந்தனர்.

போட்டிகளின் இரண்டாவது வாரத்திலும் இந்தியாவுக்குத் தங்க மழை தொடர்ந்தது. மகளிர் பிரிவு டபுள் ட்ராப் போட்டியில், ஷ்ரேயாஸி சிங் தனது வாழ்நாள் சாதனையாக தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் பிரிவில், ஓம் மிதர்வால் மற்றும் அங்கூர் மித்தல் முறையே, 50 மீ. ஏர் பிஸ்டல் மற்றும் டபுள் ட்ராப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

குத்துச் சண்டைப் போட்டியில் மகளிர் பிரிவில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமின் ஆளுமை நிலைநாட்டப்பட்டது. அவரது தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து, ஆடவரும் 8 பதக்கங்களை வென்று, முன்னதாக புது தில்லியில் தாங்கள் பெற்ற 7 பதக்க சாதனையை முறியடித்தனர்.

மல்யுத்தப் போட்டியில் புகழ் பெற்ற, இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார், 74 கிலோ எடைப் பிரிவில் தனது தங்கப் பதக்கத்தைத் தக்க வைத்துள்ளார். பளு தூக்கும் போட்டி வீரர்கள் பெற்ற பதக்கங்களை விட அதிகமாக 9 பதக்கங்களை மல்யுத்தப் போட்டியில் இந்தியா பெற்றது.

2014 ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளில், இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்றது. இந்திய மல்யுத்த அணியில், சுஷில் குமார், ராகுல் அவாரே, ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், ஃபோகத் சகோதரிகள் ஆகியோர், புகழ் பெற்ற கனடா, நைஜீரியா போட்டியாளர்களையும் வெற்றி கொண்டு, பயிற்சியாளர் குல்தீப் சிங்கைப் பெருமிதம் கொள்ள வைத்தனர் என்பது சிறப்பு.

 

Pin It