காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தமிழகம், கேரளாவில் மழை வாய்ப்பு

இந்தியப் பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. இது லட்சத்தீவை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. கடலில் காற்றின் வேகம் 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அதன் பலனாகப் பெய்யக்கூடிய பலத்த மழை காரணமாக, கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அம்மாநில முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடலோரக் காவல் படையின் கப்பல்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஆலப்புழா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கேரளா அரசு வலியுறுத்தியுள்ளது.

Pin It