காலாபானி பிராந்திய விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்பும் நேபாளம்.

(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில், இந்தியா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் முக்கோண சந்திப்பிலும், நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள தார்ச்சுலா மாவட்டத்திலும்  உள்ள காலாபானி பிராந்தியத் தகராறு குறித்து நேபாளம், முதன்முறையாக, ஒரு வன்மையான போக்கை வெளிப்படுத்தியுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் மே 20 அன்று வெளியிடப்பட்ட புதிய அரசியல் மற்றும் நிர்வாக வரைபடம், சமீபத்திய சர்ச்சையை எழுப்பியுள்ளது. பிரதமர் கே. பி. ஷர்மா ஓலியின் அமைச்சரவை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்த இப்புதிய வரைபடம், காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் பகுதிகளை நேபாளப் பிரதேசமாகக் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைத்த பின்னர், இந்தியா 2019 நவம்பர் 2 ஆம் தேதி வெளியிட்ட வரைபடத்தில் இந்தப் பகுதிகள் இறையாண்மை கொண்ட இந்தியப் பிரதேசத்தின் பகுதிகள்.

இந்தியாவும், நேபாளமும் வலுவான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார பிணைப்புகளைக் கொண்ட நெருங்கிய நட்பு அண்டை நாடுகளாகும். இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள காலாபானி பகுதியிலிருந்து தோன்றும் காளி நதிக்கு அருகாமையில், ஒரு சிறிய ஆனால் மூலோபாய நிலம் இருப்பதாக நேபாளத்தின் கூற்றுக்கள் தொடர்பான சர்ச்சை பதட்டங்களை அதிகரித்துள்ளது. 1816 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த நேபாள இராஜ்ஜியத்திற்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட சாகோலி ஒப்பந்தத்தின் 5 வது பிரிவின்படி, காளி நதிக்கு மேற்கே உள்ள அனைத்து பிரதேசங்களும் இந்தியாவின் பகுதி என்றும், கிழக்கு பக்கத்தில் உள்ள பகுதி நேபாளத்தின் பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. எனவே, இந்தியா-நேபாளம்-சீனா முத்தரப்பு சந்திக்கு அருகிலுள்ள காளி நதி, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான எல்லையாக மாறியது. மேலும், தனக்பூர் தடுப்பணையை அபிவிருத்தி செய்வதற்காக, 1996 பிப்ரவரி 12 ஆம் தேதி இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட மகாகாளி ஒப்பந்தம் மற்றும் பஞ்சேஷ்வர் நீர்மின் திட்டத்தின் முன்னுரையில், மகாகாளி நதி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு எல்லை நதி என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நேபாள காங்கிரஸ் நேபாளத்தில் ஆட்சியில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இந்த மகாகாளி ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியாவின் வசம் சர்ச்சைக்குரிய பகுதிகள் எதுவும் இல்லை. இந்திய மாநில மற்றும் மத்திய அரசுகள் நில வருவாய் மற்றும் பிற வரிகளை வசூலிக்கின்றன. முக்கோண சந்திப்பின் எல்லையை இந்திய பாதுகாப்புப் படையினர் நிர்வகிக்கின்றனர். இந்தியா 2019 நவம்பரில் வெளியிட்ட வரைபடத்திற்கு நேபாளம் ஆட்சேபனை தெரிவித்தது. இந்தியா அதிகாரப்பூர்வமாக, இந்த வரைபடம் இந்தியாவின் இறையாண்மையை துல்லியமாக சித்தரிப்பதாகத் தெளிவுபடுத்தியது. புதிய வரைபடம் நேபாளத்துடனான இந்தியாவின் எல்லையை எந்த வகையிலும் திருத்தவில்லை. இருப்பினும், இந்தியாவுடனான பிரச்சினையை இராஜதந்திர ரீதியாகவும், இணக்கமாகவும் தீர்க்க நேபாள நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெளியுறவு செயலாளர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. ஆனால் அது நிறைவேறவில்லை.

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா நகரத்துடன் லிபுலேக்கை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள சாலையை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் அவர்கள் இம்மாதம் 8 ஆம் தேதி திறந்து வைத்தார். திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்தில், கைலாஷ்-மானசரோவருக்கு வர்த்தகம் மற்றும் யாத்திரை செல்வதை எளிதாக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டது. இதற்கு, நேபாளத்தில், எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவுடன், நேபாளம் இராஜதந்திர மட்டத்திலும் இந்தப் பிரச்சினையை எழுப்பியது. கோவிட் -19 தொற்று நோய் முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. இரு நாடுகளும் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நேபாளத்திற்கு நிவாரண உதவி, மருத்துப் பொருட்கள் வழங்கியதுடன், ஒரு மருத்துவக் குழுவையும் நேபாளத்திற்கு அனுப்பியது.

ஆச்சரியம் என்னவென்றால், நேபாளப் பிரதமர் கே பி ஷர்மா ஓலி, நேபாள நாடாளுமன்றத்தில், லிம்பியாதுரா, காலாபானி மற்றும் லிபுலேக் ஆகியவை நேபாளத்தின் பகுதிகள் என்றும் அவை எந்த விலை கொடுத்தாவது திரும்பப் பெறப்படும் என்றும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுடன் தனது அரசாங்கம் தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நேபாளத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா, நேபாளத்தின் வரைபடம் வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பிராந்திய உரிமைக் கோரல்களின் இத்தகைய செயற்கை விரிவாக்கம் இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சீனா அல்லது இத்தாலியை விட, இந்தியாவில் இருந்து திரும்பும் மக்கள் மூலம் நேபாளத்தில் பரவிய இந்த வைரஸ் மிகவும் கடுமையானது என்று திரு. ஓலி குற்றம் சாட்டினார். இது தேவையில்லாத, ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எனினும், நேபாள பிரதமரின் வார்த்தைகளை இந்தியா இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், இது சீனாவின் பக்கம் அவர் சாய்வதைக் குறிக்கிறது. மேலும், இது நேபாளத்தில், தீவிர, தேசியவாத சொல்லாட்சியை உயர்த்தும் நோக்கம் கொண்டது. இது தனது சொந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உள் அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, பிரதமர் ஓலி கையாண்ட உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.

இரு நாடுகளும் பல நூற்றாண்டுகளாக நட்புறவுகளைப் பகிர்ந்து கொள்வதால், இப்பிரச்சினையை விரைவில் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

Pin It