காலாபானி விவகாரம். 

(அரசியல் ஆய்வாளர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  மாலதி தமிழ்ச்செல்வன்.)

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோர்கர் மாவட்டத்தின் இமயமலைப்  பகுதியில் இந்தியா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதிகள் சந்திக்கும் முச்சந்தியில்  அமைந்துள்ள  காலபானி பகுதியின் உரிமை  தொடர்பான  சர்ச்சை   மீண்டும்  தலைதூக்கியுள்ளது.  இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களை உருவாக்கிய பிறகு திருத்தப்பட்ட வரைபடத்தை இந்தியா வெளியிட்டதை அடுத்து, இந்தப் பிரச்சனை மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது. புதிய வரைபடத்தில் இந்திய எல்லைக்குள் காட்டப்பட்டுள்ள காலாபனியின்  ஒரு பகுதியையும் அதன்  அருகிலுள்ள பகுதிகளையும்  தனக்குச் சொந்தமானவை என்று  நேபாளம் உரிமை கோருகிறது.

காலபானி சர்ச்சையானது, நேபாள மன்னருக்கும் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் இடையே, 1816 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க  சாகுலி  உடன்படிக்கையை நோக்கிப் பின் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த    ஒப்பந்தம்,  மஹாகாளி நதியை  இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக வரையறுக்கிறது, அதில், மஹாகாளி நதி எங்கிருந்து தோன்றுகிறது என்பதும், அதன் துணை நதிகளில் எது முக்கிய மஹாகாளி நதி என்பதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு  பிரிட்டிஷ்  இந்தியாவின்  சர்வேயர்  ஜெனரல்  வெளியிட்ட  பிராந்திய  வரைபடங்களில்  காலபானி,  லிப்பு லேக்  மற்றும்  லிம்பியாதுரா பகுதிகள் இந்தியாவைச் சேர்ந்தது என்று  தெளிவாகக்  குறிப்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில், நேபாளம் இந்தப் பகுதிகளின் மீது இறையாண்மை உரிமையைக்

கோருகிறது. மஹாகாளி ஆறு உருவாகும் இடத்தை சர்ச்சைக்குரியதாக்கிய நேபாளம், தனது தொலைதூர  மேற்கு  தர்ச்சுலா மாவட்டத்தின், பிரச்சனை தீர்க்கப்படாத பிரதேசம் காலபானி என்று கூறுகிறது.

2019 நவம்பர் இரண்டாம் தேதியன்று  இந்தியா  வெளியிட்ட  வரைபடத்தை  திருத்தக் கோரி, நேபாளத்தின் தலைநகர் காட்மண்டுவில், அங்கொன்றும் இங்கொன்றுமாக, சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காலாபானி  தனது  பிரதேசத்தின்  ஒரு  பகுதி  என்று  நேபாளம்  உறுதியாக நம்புவதாக, அந்நாட்டு  வெளியுறவு  அமைச்சகம்  வெளியிட்ட  ஒரு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடம், இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட பகுதியை சித்தரிக்கிறது  என்றும்,  எந்த  வகையிலும் நேபாளத்துடனான எல்லையை மாற்றவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.

நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அவர்கள் அனைத்துக்  கட்சிக்  கூட்டத்தை  நடத்தினார்.   இந்தியாவுடனான  இந்தப்  பிரச்சினையை  ராஜதந்திர  அணுகல் மூலம் தீர்க்க,  பயனுள்ள  நடவடிக்கைகளை  எடுக்குமாறு அரசிடம் அனைவரும் கோரிக்கை வைத்தனர்.   நேபாளம்  தனது  பிரதேசத்தின்  ஒரு  அங்குலத்தைக் கூட விட்டுத்தராது என்று நேபாளப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.  மேலும்,  இருதரப்பு  விவாதங்கள்  மூலம்  இந்தியாவுடனான  பிரச்சினையைத்  தீர்ப்பதே  தனது அரசாங்கத்தின்  உறுதிப்பாடு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்து புனித யாத்திரைத் தலமான  மானசரோவருக்குச் செல்வதற்கான தூரத்தைப் பெருமளவில் குறைக்க உதவும்  லிபு லேக்  வழித்தடத்தை  அபிவிருத்தி  செய்ய, இந்தியாவிற்கும்  சீனாவிற்கும்  இடையிலான  ஒப்பந்தம்  ஒன்றை மேற்கொள்வதற்காக,  2015 ஆம்  ஆண்டில்,  பிரதமர்நரேந்திர மோதி பெய்ஜிங்கிற்குச் சென்ற போதும்,  நேபாளம்  இதேபோன்ற  ஆட்சேபணையை எழுப்பியது. லிபு லேக்  வழித்தடம்   தனது பிரதேசம் என நேபாளம்  கூறியது.  எனினும், அச்சமயம், பெரிதாக  எதுவும்  நடக்கவில்லை.  இந்திய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து இப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியாவும் நேபாளமும் பேச்சுவார்த்தைமூலம் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகின்றன. எல்லை வரையறுத்தல் என்பது தற்போதுள்ள விதி

முறைகளின் மூலம்  வழக்கமாகத் தொடரும் செயல்முறை என்றும், இது போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் அதன்மூலம், இணக்கமான தீர்வைக் காண முயற்சிக்கப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.  நட்பான  இரு  அண்டை  நாடுகளுக்கிடையில் வேறுபாடுகளை  உருவாக்கி அதில் குளிர் காய முயற்சிக்கும் சக்திகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என  நேபாளத்தை  இந்தியா  கேட்டுக் கொண்டுள்ளது.

உள்நாட்டு நிர்ப்பந்தங்கள், தீவிர தேசியவாதம் மற்றும் நேபாள உள்நாட்டு விவகாரங்களில் வெளி நாடுகளின் தலையீடு ஆகியவை,  இந்தியாவுடனான பிரச்சினைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க, நேபாளத்தை  நிர்பந்தித்திருக்கக் கூடும். எனினும், இரு நாடுகளின் உயர் தலைமைகளும்,  அனைத்துப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கமாகத் தீர்க்க விரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காலபானி பிரச்சினையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடவடிக்கைகள்  ஏற்கனவே  தொடங்கிவிட்டன.  புதுதில்லியில், வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலேவை சந்தித்த  இந்தியாவின் நேபாளத் தூதர் நிலம்பர் ஆச்சார்யா, இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடினார். இந்த

விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை  செயலாளர்  மட்ட  பேச்சுவார்த்தைகளை  நேபாளம்  கோரியுள்ளது.  காலாபானி பற்றிய வரலாற்று உண்மைகளை அறிய நேபாள அரசு நிபுணர்களின் பணிக்குழுவையும் உருவாக்கியுள்ளது. வெளியுறவு அமைச்சர்களின் நிலையிலான, நேபாள இந்தியா கூட்டு ஆணையம்,  கடந்த ஆகஸ்ட் மாதம் காத்மாண்டுவில் தனது ஐந்தாவது கூட்டத்தை நடத்தியபோது, அதில்,  இருதரப்பு  உறவுகளின்  முழு வரம்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. உண்மையில், இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும்  இடையிலான  வளர்ந்து  வரும்  உறவுகள்,  புதிய  உச்சங்களைத் தொட்டுள்ளன.  கடந்த ஆண்டில் இரு  நாடுகளும்  ஒத்துழைப்பிற்கான மூன்று புதிய துறைகளை அடையாளம்  கண்டுள்ளன.  ரக்ஸால்-காத்மாண்டு  மின்மயமாக்கப்பட்ட  இரயில் பாதை,  இதுவரை ஆராயப்படாத நீர்வழிகள், வேளாண்மை ஆகியவை இதில் அடங்கும்.

காலாபானி பிரச்சினை இந்தியா, நேபாளம் என இருநாடுகளுக்குமே உணர்ச்சிபூர்வமானது  என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், இரு நாடுகளையும்  சேர்ந்த  எல்லைக் க ணக்கெடுப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.எனவே,  இந்த பிரச்சினை விரைவில் இணக்கமாகத்

தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No doubt the Kalapani issue is sensitive to both India and Nepal. However, border survey teams from both the countries are on the job and the issue is expected to be resolved amicably soon.

 

____________

 

 

Pin It