கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22- ஆக அதிகரிப்பு.

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22- ஆக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் அம்மாநிலத்தில் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வட மாவட்டங்கள் அதிக அளவில் சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில், 22 நீர்த் தேக்கங்களின் பாதுகாப்பு கருதி  தண்ணீர் திறந்து  விடப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் அதிக அளவாக 11 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மலைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வயநாடு மாவட்டத்திற்கு சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வடமாவட்டங்களான இடுக்கி, கண்ணு}ர், வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரளா முதலமைச்சர் திரு பினராயி விஜயன்  தலைமையில் நேற்று உயர்மட்டக்  கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, கேரள முதலமைச்சருடன் தொடர்பு கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்யவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2.

Pin It