கொரிய தீபகற்பத்தில் ஒரு புதிய சகாப்தம்.

(தென் கொரியாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர், ஸ்கந்த் ரஞ்சன் தயால் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கிடையே சிங்கப்பூரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தில் ஒரு புதிய சகாப்தம் துவங்கியுள்ளது. உலகின் பெரிய சக்திகளின் திணிப்பால் கொரிய மக்கள் இரண்டுபட்ட பின், 1950 முதல் 53 ஆம் வருடம் வரை நடைபெற்ற கொரியப் போரினால் பேரழிவு ஏற்பட்டது. தொடர்ந்து, 1953 ஆம் வருடம் ஜுலை மாதம், ஐ.நா தலைமையிலான படை, சீன தன்னார்வ இராணுவம் மற்றும் வட கொரிய இராணுவத்திற்கு இடையே, காலவரையறையற்ற, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், அமைதி பிரகடனம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

கடந்த ஒரு வருட காலமாக, வட, தென் கொரிய மக்கள் ரோலர் கோஸ்டர் சவாரி போல் அவதிபட்டனர். சிலசமயம் அமெரிக்காவால் போர் தொடுப்பு அச்சுறுத்தல், சிலசமயம் சமாதானத்தை நோக்கிச் செல்லுதல் என இருநிலைப்பாட்டை கொரிய தீபகற்ப மக்கள் எதிர்கொண்டனர். தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அவர்களின் அயராத சமரச முயற்சியாலும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆச்சரியம் அளிக்கும் நேர்மறை பதில் அணுகுமுறையாலும் இவ்வாண்டு தொடக்கம் முதல், நிலைமை மாறியுள்ளது.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற சந்திப்பே, அந்நாடுகளின் உறவில் முதல் உறுதியான மைல்கல்லாக அமைந்தது. அப்போது வெளியிடப்பட்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க பான்முன் ஜோம் பிரகடனம்,  கொரிய தீபகற்பத்தின் அமைதி,செழிப்பு மற்றும் ஒருங்கிணைப்பினை வலியுறுத்தியது. இதுவே, பின்னர் அமெரிக்க, வடகொரிய அதிபர்களின் சந்திப்புக்கு வித்திட்டது.

செவ்வாய்க் கிழமை நடைபெற்ற சந்திப்புக்கு முன்னால், இருநாட்டு அதிகாரிகளும் விரிவான மற்றும் ஆழமான பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டனர். சென்ற மாதம் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் சந்திப்பை ரத்து செய்வதாக அறிவித்த போது, இந்த உச்சி மாநாடு நடைபெறாது என்று அனைவருக்கும் தோன்றியது. ஆனால், புத்திசாலித்தனமாக, அவர் பேச்சுவார்த்தைக்கான கதவைத் திறந்து வைத்திருந்தார். தென் கொரிய அதிபர் மூன் அவர்கள் உடனே தனது இரண்டாவது சந்திப்பை அதிபர் கிம் அவர்களுடன் நடத்தியதோடு, டிரம்ப் அவர்களிடம் உச்சிமாநாட்டிற்காக மன்றாடினார்.

ஜுன் 12 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பு, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளது. உச்சி மாநாட்டின் முடிவில், வட கொரியாவிற்கு சமமான அதிகாரம் அளிக்கப்பட்டது, அந்நாட்டிற்குப் பெரும் சாதனையாக அமைந்துள்ளது. இருதலைவர்களுமே, நேர்மறையான, சிறப்பான அணுகுமுறையை மேற்கொண்டனர். அதிபர் கிம் அவர்களைச் சந்தித்தது மிகவும் கவுரவமாக உள்ளது என்று, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கூறிய டிரம்ப் அவர்கள், இரு தலைவர்களும் சிறப்பான பிணைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளோம் என்று  அறிவித்தார். கடந்த ஆண்டு நிலைபெற்றிருந்த எதிர்ப்புத்தன்மைக்கு முற்றிலும் மாறுபட்ட நேர்மறையான நிலைப்பாடு இதுவாகும்.

இரு தலைவர்களும் ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அது தற்போது கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை மாற்றி அமைக்கும். யாரும் எதிர்பார்த்ததைவிட, மிகவும் சிறப்பாக இந்த பேச்சுவார்த்தை அமைந்தது என்று அதிபர் டிரம்ப் அவர்கள் கூறினார். அணு ஆயுதங்களைக் கைவிடும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் விவரங்கள் அதிகமாக  இல்லாவிடினும், வருங்காலத்திற்கான தெளிவான திட்டங்களை அது உள்ளடக்கியுள்ளது.  அமைதி மற்றும் செழிப்புக்கான புதிய அமெரிக்க- வடகொரிய உறவுக்கு இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளன. இதற்கு அடுத்தகட்டமாக, கொரிய தீபகற்பத்தில் நீடித்த, நிலையான அமைதிக்காக, இருநாடுகளும் இணைந்து பணியாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வடகொரியாவின் பாதுகாப்புக்கான உத்தரவாதமும் அடங்கும். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது மூன்றாவது இலக்காகும். இருப்பினும், வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை  நீக்குவது பற்றி அந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நம்பகமான முறையில் வடகொரியாவின் அணு ஆயுதங்கள் ஒழிப்பு குறித்த தகவல் கிடைத்தபின், அந்நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று டிரம்ப் அவர்கள் கூறினார்.

1994 ஆம் ஆண்டு, அதிபர் கிளிண்டன் ஆட்சியின்போது, அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுதங்கள் ஒழிப்பது குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டதைப் போன்றே, தற்போதைய ஒப்பந்தமும் பல வழிகளில் ஒத்திருக்கிறது. ஆனால், பரஸ்பரம் நம்பகமற்ற நடவடிக்கை எடுத்ததற்கான குற்றச்சாட்டை முன்வைத்து, 1994 ஆம் ஆண்டு ஒப்பந்தம் முறிந்தது.

இந்த ஜூன் 12 ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு விரிவான வழிமுறைகளை வரையறுக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ அவர்களுக்கு அதிக உழைப்பு தேவைப்படும். தற்போது, அதிபர் டொனல்டு டிரம்ப் மற்றும் அதிபர் கிம் ஆகிய இருவரும் சிறந்த தலைமைப் பண்பையும், தீர்க்கமான முடிவெடுக்கும் திறனையும் வெளிபடுத்தியுள்ளனர், இருதலைவர்களுக்குள்ளும் ஏற்பட்டுள்ள சரியான புரிதல், இருநாட்டு வருங்கால உறவுக்கு நல்ல அடித்தளம் அமைத்துத் தரும்.

இந்த சந்திப்பை நல்ல நேர்மறையான முன்னேற்றம் என்று இந்தியா வரவேற்றுள்ளது. இந்த உச்சிமாநாட்டின் ஒப்பந்தங்கள் முழுமையாக  செயல்படுத்தப்படும் என்றும், அது கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை  நிலவ வழிவகுக்கும் என்றும் இந்தியா நம்புகிறது. கடந்த காலத்தில் பாகிஸ்தானுடன் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பம் தொடர்பாக வடகொரியா மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள், கொரியா தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டப்படுவதன் எதிரொலியாக, சரியான விதத்தில் கையாளப்படும் எனவும் இந்தியா நம்புகிறது.

மொத்தத்தில், கடந்த ஆண்டு கொரிய தீபகற்பத்தில் கூடிய போர் மேகங்கள் விலக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அணு ஆயுதங்களைத் தாங்கள் அழிக்க முற்படும்போது, தங்களுக்கு சரியான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கும்.

 

Pin It