சமையல் எரிவாயு இறக்குமதிக்கான இந்தியா – பங்களாதேஷ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

(தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கையின் சிறப்புப் பிரதிநிதி, திபங்கர் சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

பங்களாதேஷில் இருந்து சமையல் எரிவாயு, எல்பிஜி,  அதாவது,  திரவ பெட்ரோலிய எரிவாயுவைப் பெருமளவில் இறக்குமதி செய்வதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையில் அண்மையில் புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இரு  அண்டை நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை  மேலும் உறுதிப் படுத்துவதில் இது முக்கியமான மைல்கல்லாக விளங்குகிறது.

வடகிழக்கு மாநிலம் திரிபுராவுக்கு எல்பிஜி சுமுகமாக வழங்கப்படுவதை  உறுதி செய்வதில் சந்திக்கும் பிரத்யேகமான  சவாலை எதிர்கொள்வதற்காக  பங்களாதேஷுடன் புரிந்துணர்வை இந்தியா மேற்கொண்டுள்ளது.   மேம்பட்டு வரும் நல்லுறவுக்குச் சான்றாக, இருநாடுகளும் பரஸ்பரம் சிரமங்களைப் புரிந்து கொண்டு, அவற்றைத் திறம்படக் கையாள்வதில் நெருக்கத்துடனும், புரிதல்களுடனும் அணுகுவதை இது எடுத்துக் காட்டுகிறது. பங்களாதேஷில்  இருந்து, அந்நாட்டின் எல்லையிலுள்ள  இந்திய  மாநிலத்திற்கு  எல்பிஜி  மொத்தமாக  இறக்குமதி  செய்யப்படுவதால், ஆண்டு முழுவதும் அப்பகுதிக்கு எல்பிஜி வழங்குவது உறுதி செய்யப்படும் என்பதோடு, போக்குவரத்துச் செலவுகளும் நேரமும் கணிசமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது..

தற்போது, குவஹாத்தியிலிருந்து மேகாலயா அல்லது சில்ச்சர்  வழியாக, எல்பிஜி திரிபுராவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குவாஹத்தியில்  இருந்து 600 கிலோமீட்டர் மலைப்பாங்கான, நிலச்சரிவு ஏற்படக்கூடிய  சாலைகள் வழியாக, நீண்ட பயணத்தை மேற்கொண்டு  எல்பிஜி டேங்கர்கள் அங்கு சென்றடைய வேண்டும்.  இதனால் மழைக்காலத்தில்   எல்பிஜி  போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பல நாட்கள் வரை தடைபடுகின்றன.  பங்களாதேஷின் இரண்டு தனியார் லாரி சப்ளையர்கள் மூலம், இந்தியா, எல்பிஜி  இறக்குமதி  செய்யத்  தொடங்கும். பங்களாதேஷ்  துறைமுகமான  மோங்லாவிலிருந்து, மேற்கு திரிபுராவில் உள்ள   இந்தியன்  ஆயில்  கார்ப்பரேஷனின் எரிவாயு  நிரப்பும் ஆலைக்கு எடுத்துச் செல்லப்படும் தூரம், வெறும் 120 கிலோமீட்டராகக் குறைந்துவிடும்.

அவ்வப்போது ஏற்படும் சவால்களைத் தாண்டி, இருநாடுகளுக்கும் இடையே, நெருக்கமான  மற்றும்  பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவுகள் தொடர்வது அவசியம் என்பதை இருநாட்டுப் பிரதமர்களும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

பங்களாதேஷின் இரண்டு எல்பிஜி நிறுவனங்களின் ஏற்றுமதியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எரிவாயு நிரப்பல் மற்றும் விநியோகமும், இந்திய எல்லை மாநிலங்களுக்கு எல்பிஜி வழங்கலை உறுதி செய்யும். பங்களாதேஷில்  இருந்து,  மொத்தமாக  எல்பிஜி  இறக்குமதி செய்வதற்கான  புரிந்துணர்வு  ஒப்பந்தம்,  இந்தியாவின்  கிழக்குப் பிராந்தியத்திற்கான  நீண்டகால  எரிசக்தி விநியோகத் திட்டங்களில் அதிமுக்கியத்துவத்தைப்  பெறுகிறது. இந்தியாவின் மேற்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை,  எண்ணெய்  மற்றும்  எரிவாயு  இறக்குமதிக்கான  உறுதியான உள்கட்டமைப்பு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய எரிபொருள் தேவைகளுக்காக இதுவரை ஏங்கிக் கொண்டிருந்த வடகிழக்குப் பிராந்தியத்திற்குத் தேவையான  எரிவாயு கிடைக்க, நம்பகமான விநியோகத்தை இந்தியா-பங்களாதேஷ்  ஒப்பந்தம் உறுதி செய்யும்.

எல்பிஜி ஏற்றுமதியானது, இரு நாடுகளிலும் வாழ்க்கையை சுலபமாக்குவதை உறுதி  செய்வதோடு,  பங்களாதேஷில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்திற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்று, ஷேக் ஹசீனா அவர்களின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு எல்பிஜி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை எளிமையாக்க, பங்களாதேஷ் முன்வந்துள்ளது. இதற்காக, சிட்டகாங் கடல்  துறைமுகத்திற்கு அருகிலுள்ள மிர்ஷராய் பொருளாதார மண்டலத்தில் 1000 ஏக்கர் நிலத்தை இந்திய முதலீட்டாளர்களுக்காக பங்களாதேஷ்  ஒதுக்கியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக  உறவுகளை வலுப்படுத்த, ஆஷுகஞ்ச் மற்றும் மோங்லா துறைமுகங்களை நீண்ட காலத்திற்கு, குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பயன்படுத்துவதற்கும் இந்தியாவுக்கு பங்களாதேஷ் அனுமதி  அளித்துள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்புடன், பங்களாதேஷுக்கும் வடகிழக்கு இந்தியாவிற்கும் இடையிலான ரயில் இணைப்பு அகவுரா (Akhaura) வழியாக மீண்டும் நிறுவப்படும். ஃபெனி ஆற்றின் மீது நடைபெறும் பாலத்தின்  கட்டுமானப் பணிகள் நிறைவுற்றதும், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர  வளர்ச்சி  மற்றும்  செழிப்புக்கு வித்திடப்படும்.

மொத்த அளவில்  எல்பிஜி  இறக்குமதியில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு,  ஒரு  ‘நல்ல  அண்டை  நாட்டு உறவுகளின்  மாதிரி’ என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள்  குறிப்பிட்டார்.  இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் மூலம், பங்களாதேஷில்  எண்ணெய்  உள்கட்டமைப்பை  அமைப்பதற்கான  நிபுணத்துவத்தை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

பங்களாதேஷின் கடல்சார் பிரத்தியேக பொருளாதார மண்டலம், ஆசியா-பசிபிக்  பிராந்தியத்தின் மிகப்பெரிய  எண்ணெய்  மற்றும் எரிவாயு இருப்புக்களைக் கொண்டுள்ளதாக புவியியலாளர்கள் கருதுகின்றனர். உலகளாவிய  பெரிய  ஹைட்ரோகார்பன்  உற்பத்தியாளராக பங்களாதேஷ்  உருவெடுப்பததற்கு,  தொழில்நுட்ப  நிபுணத்துவத்தை  வழங்குவதில்  இந்தியா  ஒரு  முக்கியப்  பங்காளியாக  இருக்க முடியும்.

இன்று, பங்களாதேஷுடனான இந்தியாவின் உறவுகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளன.  மனிதநேயம்,  பாரம்பரியம், மாறும் கூட்டாண்மை மற்றும் பரிமாற்றம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. இரு  நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகமானது, 2018-19 ஆம் ஆண்டில், 900 கோடி டாலரிலிருந்து, 1,046 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எரிவாயு கிரிட் ஒன்றை அமைக்க இந்தியாவும் பங்களாதேஷும் இணைந்து  செயல்படுகின்றன.

வடகிழக்கு இந்தியாவுக்குக் குழாய் வழியாக, பங்களாதேஷிலிருந்து  எல்.என்.ஜி இறக்குமதி  செய்வது நோக்கமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளாக, இந்தியாவின்  எரிசக்தி நுகர்வு விகிதம் மிக விரைவாக அதிகரித்துள்ளது. இது 2040 க்குள் இரட்டிப்பாகும். இந்த முன்னேற்றங்கள் இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கும் என்பது உறுதி.

 

Pin It