சர்ச்சைக்குள்ளாகும் ஜெனரல் பாஜ்வாவின் பணிக்கால நீட்டிப்பு.

(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டூவின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்.)

 59 வயதான பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வா அவர்கள்,  நவம்பர் 28 அன்று நள்ளிரவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க, ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி,  பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டிருந்த அறிக்கை செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதே நேரத்தில், நிபந்தனைகளுடனான 6 மாத பணி நீட்டிப்பையும் அனுமதித்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்ட மசோதா நிறைவேற்றப்படவேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அனல் பறக்கும் விவாதங்களையும் உச்ச நீதி மன்றத்தில் ஒரு சட்டப் போராட்டத்தையும் துவக்கி வைத்தது. தலைமை நீதிபதி ஆசிஃப் சயீத் கோஸா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட  உச்ச நீதி மன்ற அமர்வு, சட்ட மற்றும் நிர்வாக அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மொத்த செயல்முறையும் தலைகீழாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததால், பிரதமர் இம்ரான் கான் மற்றும் அதிபர் ஆரிஃப் அல்வி ஆகிய இருவருக்குமே பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகே, பிரதமரும், அதிபரும் செயல்பட்டிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, பிரதமரின் 25 அம்ச அறிக்கையில், வெறும் 11 இல் மட்டுமே நீட்டிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், ராணுவத் தளபதியின் பதவிக் காலம் குறித்து எங்குமே குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிய வருகிறது..

அவப்பெயரைச் சரி செய்யும் ஒரு முயற்சியாக, இம்ரான் கான் ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, முதலில் வெளியிட்ட அறிக்கையைத் திரும்பப் பெற்றார். பாகிஸ்தான் பாதுகாப்புச் சேவை விதிமுறைகளில் நீட்டிப்பு என்ற ஒரு வார்த்தையைச் சேர்க்க வகை செய்யும்  ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். பாஜ்வா அவர்களின் பதவிக்கால நீட்டிப்பிற்கு, பிராந்திய பாதுகாப்புச்சூழல் என்பதைக் காரணமாக அரசு தரப்பு கூறியிருந்தது. ஆனால், ஒரு முழு மூன்றாண்டு நீட்டிப்புக்கு இது ஒன்றே உண்மையான காரணாமாக இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறி.

நாட்டின் ராணுவத்துக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் ஒரு போதும் முரண்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக, சிவில் அரசாங்கங்கள் தோல்வியடைந்ததாகக்  கூறி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய போதெல்லாம் அதை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்ததாக சரித்திரம் சொல்கிறது. 9/11 தாக்குதலுக்குப் பிறகு, ஜெனரல் முஷாரஃப்ஃபின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்ததுடன், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றவும் தேர்தல் நடத்தவும் அவருக்கு 3 ஆண்டுகள் அவகாசமும் கொடுத்தது. பாகிஸ்தான் உருவானதிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் அது வலுவான ராணுவ ஆட்சியின் கீழ் தான் இருந்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில், ராணுவம் ஆதிக்கம் செலுத்தியது. நீதிமன்ற உத்தரவைக் காட்டிலும், பிரதமரின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது தான் வலுவான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஐந்தாறு தளபதிகள் தங்களுக்குத் தாங்களே நீட்டிப்புக்களை வழங்கிக் கொண்டுள்ளனர் என்பது குறித்து நீதிமன்றம் கவலை வெளியிட்டுள்ளதுடன், இனி இது மீண்டும் நிகழக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக, பாகிஸ்தான் அதிபர் குறிப்பிட்டுள்ளதற்குப் பதிலடியாக, பிரதமர் அலுவலகத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோ என, பார்வையாளர்கள் கருதுகின்றனர். சட்ட வல்லுநர்கள், நீதிபதிகளின் நியமனங்களில் அரசின் தலையீடு குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டுனர். நீட்டிப்பை எதிர்த்து பாகிஸ்தான் பார் கவுன்சில் அடுத்த வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. பல அரசியல் கட்சிகளும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஜெனரல் முஷாரஃப்ஃபுக்கு எதிரான தேசத் துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அன்றாட விசாரணையை டிசம்பர் 5 முதல் தொடங்கவிருக்கிறது.

இம்ரான் கான் அரசு ராணுவத்திடம் விலை போய்விட்டதால் தான் இப்படியெல்லாம் நிகழ்வதாக ஒரு சிலர் நம்புகின்றனர். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதை விட, ராணுவத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அரசாகத் தான் இம்ரான்கான் அரசு பரவலாக அறியப்படுகிறது. பாஜ்வா அவர்களுக்கு மூன்றாண்டு பணி நீட்டிப்புக்கு அனுமதித்தது அதற்கான நன்றிக்கடன் தான் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.  அரசின் பிரதிநிதியாக இருக்கும் படி உச்ச நீதி மன்றம் உத்தரவு விடுத்த சில மணி  நேரங்களில், சட்ட அமைச்சர் ஃபரோக் நஸீம் பதவி விலகினார் என்பது இக்கருத்துக்கு வலு சேர்க்கிறது. எது எப்படியோ, இந்த நிகழ்வு நாட்டின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முதிர்ச்சி அரசுக்கு இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது பாகிஸ்தானில் அகமதியர்கள்  முஸ்லிம்கள் அல்லர் என்று கருதப்பட்டு, கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டு வருவதால், அகமதியா வகுப்பைச் சேர்ந்தவர் ஜெனரல் பாஜ்வா என்ற ஒரே காரணத்தால், அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதை எதிர்த்து, பெஷாவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சுவாரஸ்யமானது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

Pin It