சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு, பாகிஸ்தான் நீதித் துறைக்குக் கடுமையான சாடல் – ஜேட்லி.

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, பாகிஸ்தான் நீதித் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள கடுமையான சாடல் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு,  இந்தியா, இவ்வழக்கில் எடுத்த நிலைப்பாட்டிற்கு அங்கீகாரமாக விளங்குவதாக, இரு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்குகொள்ள ஸ்ரீநகர் வந்துள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். திரைமறைவில், இரகசியமாக நடத்தப்படும் எந்த ஒரு விசாரணையும் நீதி வழங்கும் நடவடிக்கையாக இருக்க முடியாது என்று அவர் கூறினார். இந்த உத்தரவு, சர்வதேச நீதித் துறையிலேயே, இதுவரை, வரலாறு காணாத நீதித்துறை வெற்றியாக விளங்குகிறது என்று ஜேட்லி அவர்கள் கூறினார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கும், இவ்வழக்கில் வாதாடிய திரு.ஹரீஷ் சால்வே அவர்களுக்கும் ஜேட்லி அவர்கள் பாராட்டு தெரிவித்தார். இந்த வழக்கின் முதல் சுற்று வெற்றி  ஊக்கமளிப்பதாக, திரு.ஹரீஷ் சால்வே கூறினார். வியன்னா சாசனத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன என்றும், அதன்படி, தூதரக வசதியளிக்க, இந்தியாவுக்கு, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே அனுமதியளிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், சரியாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, வழக்கை மீண்டும் சரியாக விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தின் அடிப்படையில் இந்தியா இந்த வழக்கை எடுத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Pin It