சர்வதேச நீதி மன்றத்தின் உத்தரவு, இந்தியாவின் நிலைப்பாட்டை மெய்பித்துள்ளது.

(டாக்டர் அசோக் பெஹ்ரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் —ஆ வெங்கடேசன்.)

குல்பூஷன் ஜாதவின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கில், சர்வதேச நீதி மன்றம், தான் இறுதித் தீர்ப்புத் தரும் வரை, பாகிஸ்தான் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நிலைப்பாடு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இத்தீர்ப்பை செயல்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தும் படி பாகிஸ்தானை சர்வதேச நீதி மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏப்ரல் 10 ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவ நீதி மன்றத்தால் ஜாதவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, இந்தியா சர்வதேச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து வாதாடியது.  பாகிஸ்தான் பகிரங்கமாக, தூதரக உறவுகளில் உள்ள வியன்னா மரபை மீறியுள்ளது என இந்தியா குற்றம் சாட்டியது.  ஜாதவைக் காவலில் வைத்திருப்பதை இந்தியாவிற்குத் தெரிவிப்பது பாகிஸ்தானின் கடமையாகும். குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தூதரக அணுகல் இருக்க வேண்டும் தூதரக அணுகலுக்கான மரபுகளில் உள்ள உரிமைகளை குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரியப்படுத்துதலும் முக்கியக் கடமையாகும்.

ஜாதவை, பாகிஸ்தான் கைது செய்ததை அந்நாட்டு ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தி, அதன்பிறகு 22 நாட்கள் கழித்தே இந்தியாவிற்கு பாகிஸ்தான் தகவல் அளித்தது. உடனே இந்தியா, தூதரக அணுகலுக்கு முயற்சி செய்தது. சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்னால், 13 முறை தூதரக அணுகலுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்து அதில் தோல்வியடைந்தது. சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, பாகிஸ்தான் ஜாதவைத் தூக்கிலிட்டால் நீதி சாகும் என்று இந்தியா எடுத்துரைத்தது. பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகள், இந்தியரின் தூக்குத் தண்டனையை உடனே செயல்படுத்தி விடும் என்ற அச்சுறுத்தலினால், வாய்வழி விசாரணைக்குக் காத்திருக்காமல், நீதி மன்றத்தின் சட்ட விதி 41-ன் கீழ், தற்காலிக நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, தூக்குத் தண்டனைக்குத் தடை விதிக்கும்படி, நீதிமன்றத்தை இந்தியா கேட்டு கொண்டது.

வியன்னா மரபை பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது என்றும், மரபுகளில் இருக்கும் உரிமைகளைச் செயல்படுத்த, பாகிஸ்தான், இந்தியாவைத் தடுத்து விட்டது என்றும் இந்தியா வாதடியது,  ஜாதவிற்குத் தூக்கு தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றிவிடும் என்ற அச்சத்தில், இந்த விசாரணையில் நீதி மன்றத்தின் முடிவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.  தற்காலிக நடவடிக்கைகள் தேவை என்ற இந்தியாவின் கருத்தை எடுத்து கொண்டு, வழக்கின் தகுதியை நீதிமன்றம் ஆராய்ந்து ஒரு மனதாகத் தீர்ப்பை வழங்கியது.  ஜாதவின் தூக்குத் தண்டனையை பாகிஸ்தான் எந்த நேரமும் செயல்படுத்தக் கூடும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.  சர்வதேச நீதி மன்றத்தின் தலைவர் ரான்னி ஆப்ரஹாம் வாசித்த தற்காலிகத் தீர்ப்பில், தூக்குத் தண்டனைக்கு உத்தரவிட்ட பின்பு, 150 நாட்களுக்குள் அதை நிறைவேற்றாது என்ற பாகிஸ்தானின் அறிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டதுடன், நீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும் வரை, ஜாதவின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மாட்டோம் என்று பாகிஸ்தான் குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.

ஜாதவிற்காக இந்தியாவின் தூதரக உதவி குறித்து இருதரப்பிலும் மாறுபட்ட கருத்து இருந்ததால் சர்வதேச நீதி மன்றத்திற்கு அதிகார வரம்பு உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. வியன்னா சாசனம், பிரிவு 36(1) இன் கீழ், பாகிஸ்தான் வியன்னா மரபை மீறியுள்ளது என்றும், தனது தூதரக அணுகல் உரிமையை நிலைநாட்ட, பாகிஸ்தான் இடமளிக்கவில்லை என்றும் இந்தியா எடுத்த நிலைப்பாட்டை சாத்தியம் என நீதிமன்றம் ஒத்துக் கொண்டது. எனவே, இந்தியா கோரிய உரிமையும், அதை நிலைநாட்ட கேட்டுக் கொண்ட தற்காலிக நடவடிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை என்று நீதிமன்றம் கருதியது.

இந்தியாவுடன், பாகிஸ்தான் ராணுவம் கொண்டுள்ள பகைமையுணர்வு காரணமாக, குறிப்பிட்ட காலக்கெடுவான 40 நாட்களுக்குள், அதாவது மே மாதம் 19ஆம் தேதிக்குள், ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மறு பரிசீலனை செய்ய சந்தர்ப்பம் அளிக்கவோ அல்லது அவரது தண்டனையைக் குறைப்பதற்கோ பாகிஸ்தான் முன்வர வாய்ப்பில்லை. பாகிஸ்தான், சர்வதேச நீதிமன்ற ஆணையைப் புறக்கணித்து, தனது கண்துடைப்பு மறுவிசாரணையை முன்னெடுத்துச் செல்லக் கூடும். தவிர, தன்வழியில் சென்று, ஜாதவுக்கு நீதி வழங்கியதாக, உலக நாடுகளைத் தவறாக நம்பவைக்கக் கூடும்.

எனினும், குறைந்தபட்சம், பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரம் வரை, ஜாதவின் மரண தணடனையை நிறுத்தி வைத்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகச் செயல்படும் என்று எதிர்பார்ப்போம்.

Pin It