சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் இந்திய – அமெரிக்க பேச்சுவார்த்தை.

(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, பாதுகாப்பு மற்றும் செயல் உத்தி சார்ந்த பேச்சுவார்த்தையின் ஒன்பதாவது சுற்று நடத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையே நிலவும் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டிய நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் எதிரான அமெரிக்காவின் தடைகள், அத்தடைகளுக்கு  ட்ரம்ப் அரசாங்கத்தால் இந்தியாவிற்குக் கொடுக்கப்பட்ட விதிவிலைக்கை நீட்டிப்பதற்கான தேவை, விருப்பங்களுக்கான  பொதுவான அமைப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்க அமெரிக்கா எடுத்த முடிவு, வெனிசுலாவில் இருந்து எரிபொருள் எண்ணையை வாங்க கூடாது என்று இந்தியாவின் மீது அமெரிக்கா வைக்கும் கோரிக்கை, தொடரும் வர்த்தக உராய்வுகள், H 1B  விசா பிரச்சனை ஆகியவை இருதரப்பின் முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன.

பாதுகாப்பு மற்றும் செயலுத்தி குறித்த இந்த இருதரப்புப் பேச்சு வார்த்தையை  நடத்துவதை முன்னிட்டு, இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே அவர்கள் அமெரிக்கா பயணித்தார். வாஷிங்டனில், குறிப்பாக, அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் துணை செயலர் ஏண்ட்ரியா தாம்சன் அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த அவர் திட்டமிட்டார்.

அதேபோல், இந்திய அமெரிக்க விண்வெளி பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்றில் பங்கேற்கவும், அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாடு சரிபார்ப்பு மற்றும் இணக்கம் துறையின் துணை செயலர் டாக்டர் யலீம் டி எஸ் பொப்லீட் அவர்களுடன் இணைந்து தலைமை தாங்கவும் , வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆயுத பரவல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு துறையின் துணை செயலர் இந்திரா மணி பாண்டே அவர்களும் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்த ஒன்பதாவது இந்திய, அமெரிக்க பேச்சுவார்த்தை, சந்தேகமில்லாமல் நட்பு மற்றும் சுமுகமான சூழ்நிலையில் நடைபெற்றது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு, அத்தகைய ஆயுதங்களை பயங்கரவாதிகள் அணுகவொட்டாமல் தடுப்பது, அமெரிக்க அணு உலைகளை இந்தியாவில் நிறுவி, அதன் மூலம் அணுவாயுத ஒத்துழைப்பை மேலும் விரிவு படுத்துவது, அணுவாயுத விநியோகக் குழுவில் (என் எஸ் ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்காவின் தொடர் ஆதரவு, போன்ற முக்கிய விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல் சம்பந்தமான தகவல்கள் மற்றும் விண்வெளி சம்பந்தமாக இருதரப்பு ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை வெளிக்கொணர்வது போன்றவை பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில், சிஆர்பிஎஃப் வாகனத்தின் மீது, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டுள்ள ஜெயிஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில், இந்திய அமெரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. டிரம்ப் அவர்களின் நிர்வாகம் இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாக கண்டித்துள்ளது. அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கிய எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவிற்கு எதிராக சட்டவிரோதமாக பாகிஸ்தான் பயன்படுத்தியதற்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் செயல் உத்தி குறித்த பரந்த பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலைக் கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த சம்பவம் குறித்து தனிப்பட்ட குறிப்பு எதுவும் வெளிபிடப்படவில்லை. ஆனால் எஃப் 16 ரக விமானத்தை பாகிஸ்தான் தவறாக உபயோகித்தது என்பதற்கான ஆதாரத்தை இந்திய வெளியுறவுத் துறை செயலர் சமர்ப்பித்திருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் செயல்படாமல் இருப்பதற்கு டிரம்ப் நிர்வாகம், சமீப காலத்தில் பாகிஸ்தான் மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தெளிவு.  மேலும், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த பொருளாதார உதவிகளையும் நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் பல பகுதிகளில், பலதரப்பட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் கொள்கையை பாகிஸ்தான் தொடர்ந்து  பின்பற்றி வருவதைத் தடுக்க, அமெரிக்காவின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. புல்வாமா தாக்குதல், ஆஃப்கானிஸ்தானில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவை, தெற்காசியாவில் இந்திய, அமெரிக்க நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தானின் கை இருப்பதற்கான தெளிவான ஆதாரங்களாகும்.

தெற்கு ஆசியா பகுதியில் பயங்கரவாதத்தை கையாள்வதில், சீனா ஒத்துழைப்பதில்லை என்ற பிரச்சினையை இந்தியா முன்வைத்தது. சீனாவின் ஸின்ஜியாங்  மாகாணத்தில் பயங்கரவாதம் வளர்ந்து வருவதை முன்னிறுத்தும் சீனா, மசூத் அஸரை  சர்வதேச பயங்கரவாதி என்று ஐ நா பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றும் விஷயத்தில் மெத்தனம் காட்டுகிறது. தனது வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்து இதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்திய, அமெரிக்க வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பாதுகாக்க, இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம்  தொடர்பான வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது..

எக்கு மற்றும் அலுமினியம் மீதான கட்டணத்தைத் தன்னிச்சையாக உயர்த்தியது, H 1B விசாவிற்கான கட்டுப்பாடுகளை அதிகரித்தது, அறிவுசார் சொத்து உரிமைப் பிரச்சினையில் இந்தியாவிற்கு கெடுபிடி அதிகரித்தது போன்ற பிரச்சனைகள் தவிர, தற்போது, விருப்பங்களுக்கான  பொதுவான அமைப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கப் போவதாக அமெரிக்கா  அச்சுறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி, 500 கோடி டாலர் அளவிற்குப் பாதிக்கப்படும்.

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கான சரியான  தீர்வுக்கு முதிர்ந்த பேச்சு வார்த்தை தேவைப்படுகிறது. இந்திய, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் செயல் உத்தி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையும் நடைபெற வேண்டும். நிகழ்காலத்தில், உலகில் பொருளாதாரமும், பாதுகாப்பும் ஒன்றையொன்று சார்ந்துள்ளதை நாம் காணமுடிகிறது.

 

Pin It