சிங்கப்பூருக்கு முதல் பெண் அதிபர் தேர்வு.

ஹலிமாஹ் யாகோப், சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய வேட்பு மனு பரிசீலனைக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையுடன் 47 ஆண்டுகளுக்குப் பிறகு, மலாய்  இனத்தைச் சேர்ந்த  ஒருவர், சிங்கப்பூரின் அதிபராகிறார் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

இன்று மாலை இஸ்தானாவில் ஹலிமாஹ்,  சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகப் பதவியேற்பார்  என அந்நாட்டுப் பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.  சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் இவரது மனு மட்டுமே தகுதி பெற்றிருந்ததாலும் இவருக்குப் போட்டியாக யாரும் இல்லாததாலும் இவர் தேர்தல் இன்றி, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அதிபருக்கான தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவ்வாண்டுக்கான அதிபர் தேர்தல் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு ஜூன் மாதம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், குறைந்தது 50 கோடி சிங்கப்பூர் டாலர் அளவுக்குப் பங்குதாரர்களின்முதலீடு உள்ள   ஒரு நிறுவனத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு இவரது தேர்வு இருந்தது. இவர் சபாநாயகராக மூன்றாண்டுகள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It