சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா எதிர்ப்பு.    

அருணாச்சல் பிரதேஷில் ஆறு இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, அண்டை நாட்டு மாநிலங்களின் பெயர்களை மாற்றி அறிவிப்பதால், சட்ட விரோத ஆக்கிரமிப்பு, சட்டபூர்வமானதாகிவிடாது என்று கூறியுள்ளது.  கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, அருணாச்சல் பிரதேஷ் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அது எப்போதும் அவ்வாறே இருக்கும் என்று கூறினார்.  வடகிழக்கு மாநிலத்தின் ஆறு இடங்களின் பெயர்களை தரப்படுத்தியிருப்பதாக சீனா புதன் கிழமையன்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்த ஆத்திரமூட்டும் செயலை சட்டபூர்வமான நடவடிக்கை என்றும் கூறியிருந்தது.  எல்லை மாநிலத்திற்கு, தலாய் லாமா வருகை புரிந்ததற்கு பெய்சிங் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சில நாட்களுக்கெல்லாம், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  குல்பூஷண் ஜாதவ் குறித்த ஊடக கேள்விக்கு பதில் அளித்த பாக்லே, புதன் கிழமையன்று, பாகிஸ்தானியத்  துணை ஹை கமிஷனரை புது தில்லி வரவழைத்துப்  பேசியதற்குப்  பின்னர், பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பதிலுக்கு இந்தியா காத்திருக்கிறது என்று கூறினார்.  குல்பூஷணுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் தவறானவை என்றும் பாகிஸ்தான், சர்வதேச சமுதாயத்திடம் தவறான தகவலைப்  பரப்ப முயல்கிறது என்றும் அவர் சொன்னார்.

H1-B விசா பிரச்னை குறித்து பேசிய பாக்லே, இது, இந்தியாவிற்கு ஒரு குடியேற்றப்  பிரச்னை அல்ல; ஆனால், பரஸ்பர வர்த்தகம் மற்றும் சேவை தொடர்பானது என்று கூறினார்.  இது, அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ள ஒரு வெறும் நிர்வாக உத்தரவுதான்; எனவே, H1-B விசா மீதான விளைவுகள் குறித்து தற்போது யூகிப்பது தேவையற்றது என்று அவர் மேலும் கூறினார்.

Pin It