சீனாவுடன் இந்தியாவின் பொறுமைமிக்க, அமைதியான அணுகுமுறை

(சமூக அறிவியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே, டோக்லாம் பீடபூமியில் தொடந்து வரும் சர்ச்சைகளும், சீனாவின் சண்டையிடும் மனோபாவமும் அதிக குழப்பமான, சிக்கலான நிலையை உருவாக்கியுள்ளன. சீன ஊடகங்களின் பகிரங்கமான, கடுமையான விமரிசனங்களை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுவரை கண்டிராத அளவில் அங்கே சீனத் துருப்புக்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று, தெற்கு பூட்டான் பகுதிக்குள் சாலைகளை நிர்மாணிக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுடன் சீனத் துருப்புக்களும் நுழைந்ததிலிருந்து, இந்த சர்ச்சைக்குரிய நிலை உருவானது. இந்தியாவுடன் நெருக்கமான ராணுவ மற்றும் பொருளாதார உறவைக் கொண்டுள்ள பூட்டானின் வேண்டுகோளுக்கு இணங்கி, அங்கே சீனாவின் ராணுவ நடவடிக்கைகளைத் தடுக்கும் பணியில் இந்தியா, தனது துருப்புக்களை அனுப்பியுள்ளது.

சீனாவில், ஊடகங்களின் இந்தியாவுக்கு எதிரான பசப்புரைகளுக்குப் பின்னே சில சக்திகளின் தூண்டுதல் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், இந்தியா, பதற்றத்தைத் தணிக்கும் வகையிலேயே பதில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சீனப் பிரதமர் ஸீ ஜின்பிங்கின் தலைமையில், சீனா, தனது அண்டைநாடுகளுடன் பகைமையுணர்வுடன் கூடிய எதிர்மறை அணுகுமுறையைக் கையாண்டு வருவதால், அந்நாட்டின் நடவடிக்கைகள் ஆச்சரியமளிக்கவில்லை. தெற்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் விரோத மனப்பான்மையால் அண்டைநாடுகள் அவதிக்குள்ளானது தெரிந்ததே.

சீனத் தலைமையிடையே, ”பொறுமை காத்து, நம்மை வளர்த்திக் கொள்வதில் கவனம் செலுத்துவோம்” என்ற குறிக்கோளும், “ஒளிர்வினை மறைத்து தெளிவற்ற நிலையை முன்னிறுத்துவோம்” என்ற குறிக்கோளும் முடிந்த சகாப்தங்களாகி விட்டன. அமைதியான முறையில், சீரான வளர்ச்சி கண்போம் என்று எப்போதும் பறைசாற்றி வந்த கோட்பாட்டில் சீனா முனைப்பு காட்டவில்லை என்பதும் தெளிவாகிறது. அண்டைநாடுகளுடன், அங்கீகரிக்கப்பட்ட வழக்கமான அணுகுமுறையை விடுத்து, அத்துமீறும் வெளியுறவுக் கொள்கையை சீனா கடைப்பிடித்து வருகிறது என, ஐரோப்பாவின் நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் திரு.ரைஸார்ட் ஸார்னெக்கி அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் அமைதியான வளர்ச்சி என்ற வாக்குறுதியை சர்வதேச நாடுகள் நம்பத் தயாராக இல்லை.

சீனாவில் மாபெரும் மறுமலர்ச்சி என்ற கனவின் பின்னர், அதிபர் ஸீ ஜின்பிங்கின் முழு வலிமையுடன் கூடிய அழுத்தங்களை உலகம் கண்டு கொண்டுள்ளது. சிறிய அண்டை நாடுகள் மீது, பழங்கால சீன அரசர்கள் எடுத்த அதிரடி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுடன், தற்காலத்தில் சீனா, தனது அண்டைநாடுகளுடன் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒத்துப் போவதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீனப் பேரரசின் ராணுவ வெற்றிகள், ஒருபோதும் மன்னிப்புக்கோரும் மனப்பான்மையை வெளிப்படுத்தியதில்லை.

சீனாவின் தற்போதைய மோதல் மனப்பான்மைக்கு, உள்நாட்டுக் காரணிகளும் முன்வைக்கப்படுகின்றன. தனது முக்கியத்துவம் வாய்ந்த, வலிமைமிக்க தலைமையை அதிபர் ஸீ ஜின்பிங் நிலைநாட்டியுள்ளார். 2012 ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து, பொருளாதார, ராணுவத் துறைகளை அவர் சீரமைத்தார். அவரது தொடர் சாளர சாலைத் திட்டம், சர்வதேச அளவில் அவருக்கு உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. வரவிருக்கும் 19 ஆவது தேசியக் கூட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி, அவருக்கு ஆட்சிப் பொறுப்பைத் தொடரும் வாய்ப்பை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு, அவருக்கு இந்திய, சீன, பூட்டான் எல்லையில், மோதலைத் தூண்டும் அணுகுமுறையைக் கையாளும் தைரியத்தைக் கொடுத்துள்ளது என்று நம்பப்படுகிறது.

சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்தியா, பொறுமையான, அளவுடன் கூடிய, முதிர்ந்த பதில் நடவடிக்கையைக் கையாள்கிறது. இந்திய ஊடகங்கள், இவ்விவகாரத்தை கட்டுக்கோப்பான முறையில் அணுகியுள்ளன. ராஜீய வழிமுறைகளில் இந்த நிலையை எதிர்கொள்ள இந்தியா தயார் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இருநாடுகளும் நிலைமையை எதிர்கொள்ள இயலாதிருக்க எந்தக் காரணமும் இல்லை என, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் திரு.ஜெய்ஷங்கர், அண்மையில் தெரிவித்தார். இருநாடுகளும் வேற்றுமைகளை ஊதிப் பெருக்கி சர்ச்சைக்குரியவைகளாக்கக் கூடாது என  அவர் கூறியிருந்தாலும், சீன ஊடகங்கள் இந்நிலையைப் பரபரப்புக்குள்ளாக்கி வருகின்றன. இந்தியத் துருப்புக்களைத் திரும்பச் செய்யும் வரை, பேச்சு வார்த்தைகளுக்கு இடமில்லை என்ற கடுமையான சீனாவின் நிலைப்பாடு, சர்ச்சைகளைத் தீர்க்க உதவும் வகையில் அமையவில்லை.

எனினும், இருதரப்பிலும் நிலவும் மாபெரும் வர்த்தக உறவுகளை நினைவில் கொண்டு, இருதரப்புக்களும் நிலைமையைச் சற்று தணிக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டியுள்ளது. அரசுகளின் அதரவுடன், முறைசாரா பேச்சுவார்த்தைகளின் மூலம், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவின் மூத்த அமைச்சர்கள், பீஜிங்கில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கு கொண்டனர். ஹாம்பர்க் நகரில், அதிபர் ஸீ ஜின்பிங்கைச் சந்தித்து, பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி, பிரதமர் மோதி அவர்கள் பேசினார். பீஜிங்கில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அவர்கள் பங்கு கொள்ளவிருக்கிறார். நிலைமையை இந்தியா, அமைதியான முறையில், பொறுமையுடன் கையாளும் என்று எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் அரசு உறுதியளித்துள்ளது. உப்பைத் தின்றவன், தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்ற கூற்றுக்கிணங்க, உந்துசக்திகளின் விளைவால், சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் மோதல் மனப்பான்மை வெளிப்படுகிறது என்று கூறினால் அது மிகையல்ல.

Pin It