சுக்மாவில் மாவோயிஸ்ட் தாக்குதல் – 9 சி ஆர் பி எஃப் வீரர்கள் வீர மரணம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்,  கண்ணிவெடிப் பாதுகாப்பு கொண்ட மத்திய ரிசர்வ் படை வாகனத்தைக் குண்டுவீசி தாக்கியதில், அதில் பயணம் செய்த 9 மத்திய ரிசர்வ் படைக் காவலர்கள் மரணம் அடைந்தனர். 2 வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.  ராய்ப்பூரிலிருந்து, 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஸ்தாராம் வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் படையின் 212-ஆவது பிரிவைச் சேர்ந்தவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.  மாவோயிஸ்ட் தீவிரவாதகிள் சக்திவாய்ந்த ஐ ஈ டி குண்டுகள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து, அப்பகுதிக்குக் கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயம் அடைந்த வீரர்கள் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுக்மா பயங்கரவாத குண்டுவெடிப்பில் காவல்துறையினர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த கவலையை மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.       அவர் தமது டிவிட்டர் பக்கத்தல் நக்சல் தாக்குதலை அடுத்து சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் செல்லுமாறு உள்துறை இணையமைச்சர் திரு ஹன்ஸ்ராஜ்  ஆஹிரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.  அங்கு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறும் திரு ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக மத்திய ரிசர்வ் காவல்படை தலைமை இயக்குரை சத்தீஸ்கர் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.         சுக்மாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.      சுக்மா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த மத்திய ரிசர்வ் காவல்படையின் வீரர்களுக்கு நாடு வீர வணக்கம் தெரிவிப்பதாகப் பிரதமர் திரு நரேந்திரமோதி கூறியுள்ளார்.

Pin It