செய்திச் சுருக்கம் 1 2021

1) டோக்கியோவில் அவசரகால நிலை அறிவிப்பு குறித்து அரசு பரிசீலிக்கும் – ஜப்பான் பிரதமர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், கிரேட்டர் டோக்கியோ பெருநகரப் பகுதிக்கு அவசரகால நிலையை அறிவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று ஜப்பானியப் பிரதமர் திரு யோஷிஹைட் சுகா, திங்களன்று தெரிவித்தார். முன்னதாக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால், அவசரகால நிலை அறிவிப்பு குறித்து பிரதமர் தயக்கம் காட்டினார்.

2) ரோஹிங்கியாக்கள் தொடர்பான ஐ.நா. தீர்மானம் குறித்து பங்களாதேஷ் மகிழ்ச்சி.

வியாழக்கிழமை, ஐ.நா.வின் 75 ஆவது பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோஹிங்கியாக்கள் தொடர்பான தீர்மானம் குறித்து பங்களாதேஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் இதை ஒரு இராஜதந்திர வெற்றியாகப் பார்க்கிறது என்று பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ கே அப்துல் மோமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

3) 51 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள முதல் திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டென்மார்க்கின் ‘இன்னொரு சுற்று’ என்ற திரைப்படம்.

கோவாவில் 51 ஆவது சர்வதேச திரைப்பட விழா, ஐ.எஃப்.எஃப்.ஐ, ஜனவரி 16 ஆம் தேதி திறக்கப்படுகிறது. தாமஸ் வின்டர்பெர்க் இயக்கிய ‘இன்னொரு சுற்று’ என்ற திரைப்படம் முதல் படமாகத் திரையிடப்படவுள்ளது. இந்த விழா, கோவாவில் ஜனவரி 16 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4) சீனாவில் முக்கியக் குழுக்களுக்குப் பெருமளவில் தடுப்பூசி அளிக்கும் செயல்முறை துவக்கம்.

சீனாவில், தடுப்பூசியின் 3 ஆவது கட்ட மருத்துவ சோதனைத் தரவுகள் இல்லாததால், அதன் செயல்திறன் குறித்து எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில், வெகுஜன தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் முழுவதும் 220 தடுப்பூசி நடைபெறும் இடங்களில் 70000 க்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று, பெய்ஜிங் நகராட்சி சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.

சீனத் தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து, உலகளாவிய மருத்துவ சமூகம், பெருங்கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

5) அதிகரித்து வரும் கோவிட் நோய்த் தொற்றைத் தடுக்க, இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் கடினமாக இருக்கும் – பிரதமர் போரிஸ் ஜான்சன்.

அதிகரித்து வரும் கோவிட் நோய்த் தொற்றைத் தடுக்க, இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் கடுமையானதாக இருக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். வரும் வாரங்களில் நாட்டின் சில பகுதிகளில் வலுவான நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்றார் அவர். அடுத்த மூன்று மாதங்களில் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விடுவதால், வசந்த காலத்தில் நிலைமை சீரடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

6) பாகிஸ்தான் – பலூசிஸ்தானின் மேக் பகுதியில், 11 சுரங்கப் பணியாளர்கள் கடத்திக் கொலை.

பாகிஸ்தானில், பலூசிஸ்தான் மாகாணத்தின் மாக் பகுதியில் நேற்று நடந்த பயங்கர தாக்குதலில், குறைந்தது 11 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தொழிலாளர்களைக் கடத்திச் சென்று ஆயுதமேந்திய போராளிகள் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்கள் ஹசாராவின் சிறுபான்மை ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழு இத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7) இந்தியாவும், சீனாவும் முன்னணித் துருப்புக்களை விடுவிப்பதில் கவனம்.

எட்டாவது சுற்று கோர் கமாண்டர் நிலையிலான பேச்சுவார்த்தைகளத் தொடர்ந்து, இந்தியாவும் சீனாவும் ஆலோசனைகளைப் பேணுவதற்கும், துருப்புக்களின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் முன்னணித் துருப்புக்களை விடுவிப்பதில் கவனம் செலுத்தியுள்ளன. சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் டான் கெஃபி பெய்ஜிங்கில் நடந்த ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் துருப்புக்கள் விடுவிப்பது குறித்து விவாதிக்க, இராணுவத் தளபதி மட்ட பேச்சுவார்த்தையின் ஒன்பதாவது சுற்று நடத்த இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

8) நாட்டில் கோவிட்-19 தொற்று நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.19 சதவிகிதமாக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில், 19,000 க்கும் மேற்பட்டோர் குணமடைந்ததையடுத்து, நாட்டில் கோவிட்-19 தொற்று நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.19 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை, 99,46,000 க்கும் மேல் என்று  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9) அவசரநிலை பயன்பாட்டிற்காக, இரு தடுப்பூசிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்ததை மருத்துவ நிபுணர்கள் வரவேற்பு.

நாட்டில் அவசரகாலப் பயன்பாட்டிற்காக இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அரசின் முடிவை மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் சிங் குலேரியா, உள்நாட்டுத் தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் இந்திய ஆய்வகங்கள் மேற்கொண்ட பணிகளைப் பாராட்டியுள்ளார். இதற்கான ஆராய்ச்சி உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டது என்றும், இது உண்மையிலேயே ஒரு இந்திய தடுப்பூசி என்றும் டாக்டர் குலேரியா கூறினார். இந்தத் தடுப்பூசிகள் செலவு குறைந்தவை மற்றும் நிர்வகிக்க எளிதானவை. ஏனெனில் அவை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் வைத்திருக்க முடியும்.

10) பிரதமர் திரு மோதி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் வழங்கியது, ஆரோக்கியமான மற்றும் கோவிட் இல்லாத தேசத்திற்கான பாதையை துரிதப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

தேசத்தையும், கடின உழைப்பாளி விஞ்ஞானிகளையும், நாட்டின் கண்டுபிடிப்பாளர்களையும் வாழ்த்திய திரு மோதி, தனது டுவிட்டர் செய்தியில், கோவிட் – 19 தொற்றுநோய்க்கு எதிரான, துடிப்பான போராட்டத்தை வலுப்படுத்த இது ஒரு தீர்க்கமான திருப்புமுனை என்று கூறினார்.

 

Pin It