செய்திச் சுருக்கம் 16.9.20

எல்லைப்பகுதிகளில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது – திரு ராஜ்நாத்சிங்

இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனைகள் மூலம் தீர்வுகாண மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய – சீனா இடையேயான எல்லை பகுதியில் உள்ள நிலைமை குறித்து நேற்று மக்களவையில் அறிக்கை சமர்ப்பித்து பேசிய அவர், மிகவும் மோசமான வானிலையிலும், உயரமான மலை சிகரங்களிலும் பணியில் ஈடுபட்டு தாய்நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
லடாக் பகுதியில் சுமார் 38,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு சீன ராணுவத்தினரின் அத்துமீறல்கள் இருந்தபோதும், அமைதியான தீர்வு காண்பதில் இந்தியா உறுதியுடன் இருந்ததாக திரு ராஜ்நாத்சிங் கூறினார்.
இருப்பினும் எல்லையில் எந்த நிலையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்டை நாடுகளுடனான அமைதியான உறவுகளுக்கு பரஸ்பர மரியாதையும், பரஸ்பர உணர்வுகளுமே அடிப்படை என்பதை இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சீனா-வுடன் தொடர்ச்சியாக, தூதரக மற்றும் ராணுவ நிலையிலான உறவுகளை இந்தியா பராமரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா – சீனா எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதம் நடத்த கோரியது ஏற்கப்படாததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பீகாரில் 540 கோடி ரூபாய் மதிப்பிலான 7 நகர்புற அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

பீகாரில் 540 கோடி ரூபாய் மதிப்பிலான 7 நகர்புற அடிப்படை கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சி பேசிய பிரதமர், நாட்டின் மகத்தான பொறியாளர் எம் விஸ்வேஸ்வரய்யா-வின் பிறந்த நாளை குறிக்கும் பொறியாளர்கள் தினத்தில்  நடப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
நாட்டை கட்டமைப்பதில் பொறியாளர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
கங்கை தூய்மை திட்டத்திற்காக பீகாருக்கு 6,000 கோடி ரூபாய் மதிப்பில் 50-க்கும் அதிகமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
நமாமி கங்கா திட்டம் மக்களின் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு மற்றும் பீகார் அரசின் கூட்டு முயற்சியின் காரணமாக குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற அடிப்படை வசதிகள் மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் மேம்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தற்போது ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறிய பிரதமர், தூய்மையான குடிநீர் என்பது சிறந்த வாழ்க்கைக்கு மட்டுமன்றி, பலவிதமான நோய்களை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், டிஜிட்டல் கட்டமைப்பு பீகார் மாநிலத்தை வலுப்படுத்தியுள்ளது என்றும், பாரத் நெட் மூலம் 8,743 பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.
2014-15-ல் பீகாரில் 8 லட்சம் பேர் மட்டுமே இணையதளத்தை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 3.93 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் கூறினார்.
பீகாருக்கு முழுமையான ஆதரவை பிரதமர் திரு நரேந்திரமோடி வழங்கி வருவதாக அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் தெரிவித்தார்.
குறிப்பிட்ட கால வரம்புக்குள் மத்திய அரசின் திட்டங்களை பூர்த்தி செய்ய தமது அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.

ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிப்பு குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை.

இந்தியா – அமெரிக்கா பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் இன்று காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளனர். ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இரு நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கி கூட்டாக உற்பத்தி செய்வது உள்ளிட்ட ராணுவத் தளவாட தொழில் ஒத்துழைப்பு குறித்து இந்த ஆலோசனையின்போது முக்கியமாக விவாதிக்கப்படயுள்ளது.  இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பில் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கிய இடம் பெறுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு கூறியுள்ளது.லடாக் எல்லையில்  இந்தியா – சீனா இடையே அசாதாரண சூழல் நிலவும் வேளையில்  அமெரிக்காவுடனான இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

ஆசிரியர் கல்விக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் – மத்திய கல்வித்துறை அமைச்சர்.

ஆசிரியர் பயிற்சிக்கான கல்விக்கு தேசிய அளவிலான புதிய பாடத் திட்டம் விரைவில உருவாக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங் கூறியுள்ளார். ஆசிரியர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் விதமாக  புதிய கல்விக் கொள்கையின்படி இந்த பாடத்திட்டம் உருவாக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.பொறியாளர் தினத்தையொட்டி அகில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியர் விருதுகளை காணொளிக்காட்சி வாயிலாக வழங்கிப் பேசிய அவர் விஸ்வேஸ்வரய்யா போன்ற தலைசிறந்த பொறியாளர்கள் மற்றும் அறிஞர்களின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாகவே புதிய கல்விக்  கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.  மேலும் உயர்கல்வியில் முழுமையான மற்றும் பன்னோக்கு கல்வி முறை ஊக்குவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். எனினும் தரமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்குவதுதான் உயர்கல்வி நிறுவனங்களின் வெற்றிக்கு மிகவும் அவசியமானது என்றும்  திரு.ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டார்.  தலைசிறந்த ஆசிரியர்களை அடையாளம்கண்டு அவர்களது தனிச்சிறப்புகளை அங்கீகரிக்கும் விதமாகவே விஸ்வேஸ்வரய்யா விருது ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  .

Pin It