செய்திச் சுருக்கம் 17.10.20

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
வறுமையில் வாழும் மக்களின் சிரமங்களையும், அவற்றை களைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கான வாய்ப்பாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வறுமை என்பது பலவித பரிணாமங்களைக் கொண்டது என்றும், வறுமையில் வாடும் மக்கள் வித்தியாசமான அனுபவங்களை கொண்டிருக்கிறார்கள் என்றும், ஐ நா வளர்ச்சித் திட்டத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி திருமதி.நடியா ரஷீத், அகில இந்திய வானொலிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

முறையான சந்தைப்படுத்துதலும், நவீன தொழில்நுட்பமும் வேளாண் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் -நரேந்திரசிங் தோமர்

முறையான சந்தைப்படுத்துதலும், நவீன தொழில்நுட்பமும் வேளாண் துறையில் மகத்தான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று மத்திய உணவு பதன தொழில்கள் துறை அமைச்சர் திரு நரேந்திரசிங் தோமர் தொpவித்துள்ளார்.
இந்தியா – சர்வதேச உணவு மற்றும் வேளாண் வாரத்தை நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசிய அவர், கோவிட்-19 நோய் தொற்று காலத்திலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்துறை பெரும் பங்களிப்பை செய்துள்ளது என்றார்..

உணவு புரட்சிக்கான அரசின் முயற்சிகளுக்கு விவசாயிகள் முக்கியமான தூணாக திகழ்கின்றனர்- பிரதமர்.

உணவு புரட்சிக்கான அரசின் முயற்சிகளுக்கு நாட்டில் உள்ள விவசாயிகள் முக்கியமான தூணாக திகழ்கின்றனர் என்று பிரதமர் திரு நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான  உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நேற்று காணொலி காட்சி மூலம் வெளியிட்டார்.
உலக உணவு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த திரு நரேந்திரமோடி, அண்மையில் உருவாக்கிய எட்டு தானியங்களின் ஊட்டச்சத்து செரிவூட்டப்பட்ட 17 ரகங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து நாட்டை காப்பதில் விவசாயிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்றார்.
ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பங்களிப்புக்கு 130 கோடி இந்தியர்களின் மதிப்பை வெளிப்படுத்துவதாக இன்று நினைவு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ள பல வகையான முன் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர், ஒரு பக்கம் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், மறுபக்கம் சுகாதாரம் மற்றும் தூய்மை தரங்களை விரிவுபடுத்த சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
2014-ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு ஒரே ஒரு ரகத்தில் மட்டுமே விதைகள் கிடைத்து வந்ததாகவும், தமது ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளில் 45 புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 காலத்தில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
2014-ஆம் ஆண்டு வரை 11 மாநிலங்கள் மட்டுமே உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியதாக கூறிய பிரதமர், தற்போதுள்ள அரசின் காலத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய உணவு பாதுகாப்பை மேம்படுத்த தேவையான சீர்திருத்தங்களை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திரசிங் தோமர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், இயற்கை உணவு மற்றும் தோட்டக்கலை அமைப்புகளில் ஒளிபரப்பப்பட்டது.
Pin It