செய்திச் சுருக்கம் 2. 1. 21

1) தாமதமான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 இல் நடைபெறும் – ஜப்பான் பிரதமர் சுகா.

தாமதமான டோக்கியோ ஒலிம்பிக்  போட்டிகள் இவ்வாண்டு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகா அவர்கள் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் இந்த கோடையில் நடைபெறும் என்று புத்தாண்டுக்கான எழுத்துப்பூர்வ அறிக்கையில் சுகா அவர்கள் கூறினார்.  டோக்யோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை உலக ஒற்றுமையின் அடையாளமாக  அவர் விவரித்தார். பாதுகாப்பான வகையில் போட்டியை நடத்த ஜப்பான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்றார் அவர்.

2) காங்கோவில் ஏ.டி.எஃப் கிளர்ச்சியாளர்களால் 25 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

புத்தாண்டு துவக்கத்தில் காங்கோவின் கிழக்கு பெனி பிரதேசத்தில், கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.

டிங்வே கிராமத்தில் வயல்களில் வேலை செய்யச் சென்ற விவசாயிகள் மீது ஏ.டி.எஃப் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக, அப்பகுதியில் உள்ள ஆளுநரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். சில சடலங்கள் நேற்று புதர்களில் மீட்புக் குழுக்களால் கண்டுபிடிக்கப்பட்டன  என்றார் அவர்.

3) சர்வதேச கண்டனத்தையடுத்து, போஸ்னியா, அகதிகளுக்குக் கூடாரங்கள் அமைக்கத் துவங்கியது.

தீக்கிரையான அகதிகள் முகாமில், உறைய வைக்கும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வசதிகள் இன்றி சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு போஸ்னிய இராணுவம் கூடாரங்களை அமைக்கத் தொடங்கியுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர், குரோவேஷியாவுடனான வடமேற்கு எல்லைக்கு அருகே லிபா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிக்கித் தவித்த சுமார் 1,000 புலம்பெயர்ந்தோருக்கு தங்குமிடம் அளிக்காத்தற்கு, போஸ்னியா சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டது. இதனையடுத்து, வெள்ளியன்று, 150 ராணுவத் துருப்புக்கள் அகதிகள் முகாமுக்கு வந்து, கூடாரங்களை அமைக்கத் துவங்கினர். புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு இந்த முகாமை நடத்தும்.

4) அமெரிக்காவில் பாதுகாப்பு செலவு மசோதாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் அவர்கள் தனது வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதை அமெரிக்க காங்கிரஸ் மீறல்.

பாதுகாப்பு செலவு மசோதா குறித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் உபயோகித்த வீடோ அதிகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் ரத்து செய்துள்ளது. இது அவரது பதவிக் காலத்தில் முதல் முறையாக நடந்துள்ளது.

ஒரு அரிய புத்தாண்டு தின அமர்வில், தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்திற்கான அதிபர் டிரம்பின் வீட்டோவை மீறுவதற்குத் தேவையான 81 க்கு 13 என்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் செனட் வாக்களித்தது.

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இணைந்து 74,000 கோடி டாலர் பாதுகாப்பு மசோதாவை ஆதரித்தனர். இது அமெரிக்காவின் இராணுவ மற்றும் செயலுத்தித் திசையை வரும் ஆண்டில் நிர்ணயிக்கும். ஒரு புதிய அமெரிக்க காங்கிரஸ் பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இது நடந்தேறியுள்ளது.

5) காபூல் பல்கலைக் கழகத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட நபருக்கு மரண தண்டனை.

காபூல் பல்கலைக்கழகத் தாக்குதலின் சூத்திரதாரியான முகமது ஆதில் என்ற நபருக்கு ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தாக்குதலில் பங்கு பெற்ற மேலும் ஐந்து கூட்டாளிகளுக்கு, தேசத் துரோகம், வெடிபொருட்களைக் கை மாற்றியது மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடனான ஒத்துழைப்பு ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் பல்வேறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

6) ஜம்மு – காஷ்மீர் எல்லையில் நவ்ஷேரா பிரிவில் பாகிஸ்தான் துருப்புக்கள் ஒரே நாளில் இரண்டாவது முறையாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு.

வெள்ளியன்று, முதலாவதாக, 1530 மணியிலும், பின்னர் இரண்டாவது முறையாக, 1730 மணியிலும், பாகிஸ்தான் துருப்புக்கள் தன்னிச்சையாக, ஜம்மு – காஷ்மீர் எல்லையில் நவ்ஷேரா பிரிவில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி கர்னல் தவீந்தர் ஆனந்த் அவர்கள் தெரிவித்தார். எல்லையில் தயார்நிலையில் இருந்த பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் படுகாயமடைந்த வீரர்  சுபேதார் ரவீந்தர், சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார்.

7) கோவிட் -19 தடுப்பூசிக்கான நாடு தழுவிய பயிற்சி ஓத்திகை இன்று நடத்தப்பட உள்ளது

கோவிட் -19 தடுப்பூசிக்கான நாடு தழுவிய பயிற்சி ஓத்திகை இன்று நடத்தப்படும். இந்தத் தடுப்பூசிப் பயிற்சி ஓத்திகையின்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாதிரியளவில் தடுப்பூசின் வழங்கும் செயல்முறை நடத்தப்படும். இதன் மூலம், தடுப்பூசி அளிப்பதற்கான ஆயத்த நிலை சோதிக்கப்படும். இந்தப் பயிற்சி ஓத்திகை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படும். ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறைந்தபட்சம் மூன்று அமர்வுகளில் பயிற்சி ஓத்திகை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

8) இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே, விமானப் போக்குவரத்தை வரும் ஜனவரி 8 ஆம் தேதி மீண்டும் துவக்க அரசு முடிவு.

இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு மேலும் பரவாமல் தடுக்க இந்த சேவைகள் கடந்த மாதம் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் ஜனவரி 23 வரை வாரத்திற்கு 30 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், தில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மட்டுமே வாரத்திற்குத் தலா 15 விமானங்களை இந்திய, இங்கிலாந்து விமான நிறுவனங்கள் இயக்கவுள்ளன.

9) சீனத் துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட 2 இந்தியக் கப்பல்களை அனுமதிக்க, இந்தியத் தூதரகம் சீனாவுடன் தொடர்பு – வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்.

பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம், எம்.வி.ஜாக் ஆனந்த் மற்றும் எம்.வி.அனஸ்தேசியா ஆகிய கப்பல்களுக்குத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு, பணியாளர்களை மாற்ற அனுமதி அளிப்பது குறித்து சீனத் தரப்புடன் பலமுறை விவாதிக்க எடுத்துக் கொண்டது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த இரு கப்பல்களின் நிலை குறித்த ஊடகக் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திரு அனுராக் ஸ்ரீவாஸ்தவா, எம்.வி.ஜாக் ஆனந்த் சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகத்திற்கு அருகே நங்கூரத்தில் உள்ளது என்றும் 23 இந்திய பிரஜைகள் கப்பலில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மற்றொரு கப்பலான எம்.வி. அனஸ்தேசியாவில் 16 இந்தியர்கள் உள்ளனர். இது சீனாவின் காஃபீடியன் துறைமுகத்திற்கு அருகே நங்கூரத்தில் உள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் விதித்த பல்வேறு கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த துறைமுகங்களில் இருந்து குழு மாற்றத்தை அனுமதிக்க முடியாது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று, திரு ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

10) இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாடுகளில் உள்ள மற்ற நாட்டு சிவிலியன் கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியல் பரிமாற்றம்.

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாடுகளில் உள்ள மற்ற நாட்டு சிவிலியன் கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை தூதரகங்கள் மூலம்  பரிமாற்றம் செய்து கொண்டன. இது குறித்து, 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுதோறும், ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் பட்டியல் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

இந்தியாவிலுள்ள 263 பாகிஸ்தான் சிவில் கைதிகள் மற்றும் 77 மீனவர்கள் பட்டியலை இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்தது. அதேபோல், பாகிஸ்தான் 49 இந்திய சிவிலியன் கைதிகள் மற்றும் 270 மீனவர்கள் பட்டியலை இந்தியாவுக்கு அளித்தது.

11) பாகிஸ்தானில் மீண்டும், மீண்டும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நிகழ்வது குறித்து, இந்தியா, பாக் ஹைகமிஷனரிடம் கவலை தெரிவித்தது.

பாகிஸ்தானில் மீண்டும், மீண்டும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நிகழ்வது குறித்து, இந்தியா, பாக் ஹைகமிஷனரிடம் கவலை தெரிவித்தது. அந்நாட்டில் இந்துக் கோவில்களை சிதிலப்படுத்திய நபர்கள் மீது விரைவில் விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று இந்தியா நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் விசாரணை அறிக்கையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

Pin It