செய்திச் சுருக்கம். 2 7 2020.

1) ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் அமோக வெற்றி.

ஆரம்ப கட்ட முடிவுகளின்படி, நாட்டின் அரசியல் நிலையைத் தற்போதைய நிலையிலேயே தக்க வைக்க ரஷ்யர்கள் பெருமளவில் ஆதரவளித்து வாக்களித்ததால், அடுத்த தசாப்தத்தின் நடுப்பகுதி வரை தனது ஆட்சியை நீட்டிக்கும் முயற்சியில் அதிபர் விளாடிமிர் புடின் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான நாடு தழுவிய வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்காக ரஷ்யர்கள் நேற்று வாக்களித்தனர். இரண்டு தசாப்தங்களாக ஆட்சி செய்த புடின் 2036 வரை அதிபராக இருக்க இந்த வாக்கு வழி வகுக்கிறது. ஆரம்ப கால முடிவுகள் 2018 அதிபர் தேர்தலை நினைவூட்டுகின்றன. புடின் அந்த மறுதேர்தலில் முக்கால்வாசி வாக்குச்சீட்டுகளுடன் மாபெரும் வெற்றி பெற்றார்.

2) கோவிட்-19 தொற்றுநோயை சமாளிக்க மோதல் மண்டலங்களில் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கோரிக்கை.

சிரியா, ஏமன், லிபியா, தெற்கு சூடான் மற்றும் காங்கோ உள்ளிட்ட முக்கிய மோதல் மண்டலங்களில் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கோரியுள்ளது. உலக சுகாதார அமைப்பைக் குறிப்பிடுவது தொடர்பாக அமெரிக்காவும் சீனாவும் ஒரு நீண்ட சர்ச்சையைத் தீர்த்த பின்னர் ஐ.நா.வின் மிக சக்திவாய்ந்த பாதுகாப்புக் கவுன்சில் நேற்று ஒருமனதாக வாக்களித்தது.

பிரான்ஸ் மற்றும் துனிசியா முன்மொழிந்த இத்தீர்மானம், ஐ.எஸ் மற்றும் அல்-கைதா தீவிரவாதக் குழுக்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது.

3) ஆகஸ்ட் 3 வரை, பங்களாதேஷ் கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது.

முந்தைய கட்டுப்பாடுகள் நேற்று முடிவடைந்த பின்னர், பங்களாதேஷில், நாடு முழுவதும் பொது நடவடிக்கைகள் மற்றும் இயக்கம் குறித்த கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. அமைச்சரவைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

4) புலிட்சர் விருது பெற்ற சித்தார்த்த முகர்ஜியும், பேராசிரியர் ராஜ் செட்டியும் ‘2020க்கான சிறந்த குடியேறியவர்கள்’ என அறிவிப்பு.

கோவிட்-19 நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளுக்குப் பங்களித்த இரண்டு புகழ்பெற்ற இந்திய-அமெரிக்கர்கள், இந்த ஆண்டு அமெரிக்க சுதந்திர தினத்திற்கு முன்னதாக, கௌரவிக்கப்பட்ட 38 புலம்பெயர்ந்தோரில் அடங்குவர். புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளரும் புற்றுநோயியல் நிபுணருமான சித்தார்த்த முகர்ஜியும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ராஜ் செட்டியும் நியூயார்க்கின் கார்னகி கார்ப்பரேஷனால் ‘2020 க்கான சிறந்த குடியேறியவர்கள்’ என கௌரவிக்கப்பட்டதாக, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

5) 59 சீன செயலிகளைத் தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவை அமெரிக்கா வரவேற்பு.

59 சீன செயலிகளைத் தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வரவேற்றுள்ளார். இந்தியாவின் நடவடிக்கையைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசியப் பாதுகாப்பை உயர்த்தும் என்றார்.

6) இந்திரா மணி பாண்டே, ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

மூத்த தூதர் இந்திரா மணி பாண்டே, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவாவில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளின் இந்தியாவின் அடுத்த தூதராகவும், நிரந்தரப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

1990, ஐ.எஃப்.எஸ் அதிகாரி திரு பாண்டே தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக உள்ளார். அவர் விரைவில் இந்தப் பணியை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7) நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களை பங்கேற்க இந்தியா அனுமதிக்காது – மத்திய அமைச்சர் திரு.கட்கரி.

நெடுஞ்சாலைத் திட்டங்களில், கூட்டு நிறுவனங்கள் உட்பட, சீன நிறுவனங்களைப் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்தார். இது இந்தியாவுக்கு, தற்சார்பு அளிக்கும் ஒரு படி என்று அவர் கூறினார். சீனப் பங்காளர்களைக் கொண்ட கூட்டு நிறுவனங்களுக்கு சாலை அமைக்க அனுமதி வழங்கப்படாது என்று அமைச்சர் கூறினார். நெடுஞ்சாலைத் திட்டங்களில் பங்கேற்பதற்கான தகுதிகளை விரிவுபடுத்துவதற்காக, சீன நிறுவனங்களைத் தடைசெய்வது, இந்திய நிறுவனங்களுக்கு விதிமுறைகளை தளர்த்துவது ஆகியவை உள்ளிட்ட ஒரு கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

8) கோவிட்-19 மீட்பு வீதம் 59.43 சதவீதமாக உயர்வு. இதுவரை 3, 47, 000 பேர் குணமாகியுள்ளனர்.

கோவிட்-19 நோயாளிகளின் மீட்பு விகிதம் 59.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 13,157 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இதன் எண்ணிக்கை 3,47,978 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, ​​2,20,114 பேர் பாதிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்.
கோவிட்-19 நோய்க்கான தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கு, மாநிலங்களுடன் இணைந்து, மத்திய அரசு எடுத்துள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் விளைவாக, பாதிப்பில் உள்ள நோயாளிகளை விட 1,27,864 பேர் அதிக எண்ணிக்கையில் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு அறிக்கையில், சுகாதார அமைச்சகம் நாட்டில் சோதனை ஆய்வக வலையமைப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. அரசுத் துறையில் 764 ஆய்வகங்கள் மற்றும் 292 தனியார் ஆய்வகங்கள் உள்ள நிலையில், நாட்டில் மொத்தம், 1,056 ஆய்வகங்கள் தற்போது உள்ளன.

9) எல்லையில் பதட்டங்களைக் குறைக்க இந்தியாவும் சீனாவும் உறுதி.

ஜூன் 6 ஆம் தேதி, எல்லையிலிருந்து வாபஸ் ஆவது குறித்து எட்டப்பட்ட புரிந்துணர்வை செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எல்லையில், விரைவாகவும், கட்டம் வாரியாகவும் வாபஸ் ஆவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை இந்தியாவும் சீனாவும் வலியுறுத்தியுள்ளன. நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக இரு தரப்பினரும் நிறுவப்பட்ட இராணுவ மற்றும் இராஜதந்திர சேனல்கள் மூலம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

10) பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், லடாக் வருகை.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமை ஜெனரல் மனோஜ் நாரவனேயுடன் நாளை காலை லடாக்கிற்கு வருவார்.
கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15 ஆம் தேதி நடந்த மோதலின் போது சீனப் படைகளை பின்னுக்குத் தள்ளிய இந்திய ராணுவத்தின் துணிச்சல் மிக்க வீரர்களை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Pin It