செய்திச் சுருக்கம் 20 11 2020

1) கோவிட்-19 தொற்று நோயின் இரண்டாவது அலையைத் தடுப்பூசிகள் இல்லாமல் போராட வேண்டியிருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலைகளைத் தோற்கடிக்க தடுப்பூசிகள் சரியான நேரத்தில் பயன்பாட்டுக்கு வராமல் போகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக்கேல் ரியான் எச்சரித்துள்ளார். தடுப்பூசிகளை மாயத் தீர்வாகப் பார்க்கக் கூடாது என்றும், வைரஸின் மீள் எழுச்சியை எதிர்த்துப் போராடும் நாடுகள் மீண்டும் அவை இல்லாமல் போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். கணிசமான அளவில் தடுப்பூசி கிடைக்கக் குறைந்தபட்சம் நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று அவர் கூறினார்.

2) பசுமை பருவநிலை நிதியம், பங்களாதேஷுக்கு 25.6 கோடி டாலர் அளிக்க ஒப்புதல்.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், அதன் பசுமைக் குடில் வாயு (ஜிஹெச்ஜி) உமிழ்வு குறைப்பு இலக்குகளைப் பூர்த்தி செய்ய, பங்களாதேஷுக்கு, பசுமை பருவநிலை நிதியம், மானியங்கள் மற்றும் கடன்கள் வடிவில், 25.6 கோடி டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கார்பன் உமிழ்வில் மிகப்பெரிய தொழில்துறைப் பங்களிப்பாளர்களான பங்களாதேஷின் ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகள் துறைகளுக்கான ஒருங்கிணைந்த தொகுப்பாக இந்த நிதி வழங்கப்படுகிறது.

3) சர்வதேச எரிசக்தி விவகாரங்களின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது – ஐ.இ.ஏ நிர்வாக இயக்குனர்.

இந்தியா, சர்வதேச எரிசக்தி விவகாரங்களின் மைய நிலைக்கு நகர்ந்துள்ளது என்றும், பிற முக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என்றும் சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக இயக்குனர் ஃபடி பீரோல் அவர்கள் கூறினார். வியாழக்கிழமை எரிசக்தி தொழில்நுட்ப முன்னோக்குகள் 2020 இன் காணொளி துவக்க விழாவில் பேசிய திரு.பிரோல், உஜ்ஜவாலா மற்றும் உஜாலா போன்ற திட்டங்களின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு சுத்தமான எரிசக்தி வழங்குவதில் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

4) சவூதி அரேபிய அரசரின் அழைப்பின் பேரில், 5 ஆவது ஜி -20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு மோதி பங்கேற்பு.

சவூதி அரேபிய அரசரின் அழைப்பின் பேரில், 5 ஆவது ஜி -20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோதி கலந்து கொள்ளவுள்ளார். நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் காணொளி வடிவத்தில், 21 ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டிற்கு சவுதி அரேபியா தலைமை தாங்குகிறது.

நேற்று மாலை ஊடகங்களுக்கு விளக்கமளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா அவர்கள், இது 2020 ஆம் ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ஜி 20 தலைவர்கள் கூட்டமாக இருக்கும் என்றார். கோவிட் 19 இலிருந்து உள்ளடக்கிய, ஸ்திரமான மற்றும் நிலையான மீட்பு மீது வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டின் கவனம் இருக்கும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தலைவர்கள் தொற்றுநோய்க்கு எதிரான தயார்நிலை மற்றும் வேலை வாய்ப்புக்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிப்பார்கள். உள்ளடக்கிய, நிலையான மற்றும் ஸ்திரமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பார்வையும் தலைவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

5) சட்டவிரோத நிதி வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியும், ஜமாத் உத் தாவாவின் தலைவருமான ஹபீஸ் சயீத் சட்டவிரோத நிதி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இரண்டு பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் அவரை குற்றவாளி என்று அறிவித்ததாகவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டில் சயீத் கடந்த ஜூலை 17 அன்று கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதிகளில் ஹபீஸ் சயீத்தும் ஒருவர். அமெரிக்கா அவர் தலைக்கு1 கோடி டாலர் இனாம் அறிவித்திருந்தது.

6) ரூபே கார்டு இரண்டாம் கட்டம் – இன்று பூட்டானில் இருநாட்டுப் பிரதமர்கள் துவக்கி வைப்பு.

பிரதமர் திரு நரேந்திர மோதியும், பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங் அவர்களும், காணொளி மூலம், பூட்டானில் ருபே கார்டு இரண்டாம் கட்டத்தைத் இன்று தொடங்கவுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், திரு மோதியின் பூட்டான் பயணத்தின் போது இரு பிரதமர்களும் கூட்டாக திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினர்.

பூட்டானில் ருபே அட்டைகளின் கட்டம் 1 ஐ அமல்படுத்தியது பூட்டானில் இந்தியர்களுக்கு, பூட்டான் முழுவதும் ஏடிஎம்களையும் விற்பனை முனையங்களையும் அணுக உதவியுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் தெரிவித்தார். கட்டம் -2 இப்போது பூட்டானிய அட்டைதாரர்களுக்கு இந்தியாவில் ரூபே நெட்வொர்க்கை அணுக அனுமதிக்கும்.

7)  கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் நாட்டில் 93.60 சதவிகிதமாக உயர்வு.

45,882 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளுடன், இந்தியாவின் மொத்த பாதிப்புக்கள் 90,04,366 ஆக உயர்ந்துள்ளன என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 584 புதிய இறப்புகளுடன், மொத்த இறப்பு 1,32,162 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 84,28,410 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 44,807 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தோர் விகிதம் 93.60 சதவீதத்தை எட்டியுள்ளது. நாட்டில் பாதிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 4,43,794 ஆக உள்ளது.

8) பிரதமர் திரு நரேந்திர மோதி, லக்சம்பர்க் பிரதமருடன் காணொளி  உச்சிமாநாட்டில் பங்கேற்பு.

லக்சம்பர்க் பிரதமருடன் காணொளி உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோதி, இருதரபு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும் லக்சம்பேர்க்கிற்கும் இடையில் பொருளாதாரப் பரிமாற்றங்களை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன என்று பிரதமர் திரு நரேந்திர மோதி கூறினார். நேற்று மாலை இந்தியா லக்சம்பர்க் காணொளி உச்சி மாநாட்டில் உரையாற்றிய திரு மோதி, எஃகு, நிதி, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் களங்கள், இரு நாடுகளும் நல்ல ஒத்துழைப்பைக் கொண்டுள்ள துறைகளாகும். இந்த துறைகளில் மேலும் அதிக சாத்தியங்கள் உள்ளன. கோவிட்-19 தொற்றுநோயால் விளைந்த இந்தக் கடினமான நேரத்தில், லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டல் அவர்கள் வெளிப்படுத்திய திறமையான தலைமைக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய லக்சம்பர்க் பிரதமர், விண்வெளி மற்றும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை வரவேற்றார். இந்தியாவின் 2021-22 காலத்திற்கான ஐ.நா.பாதுகாப்புச் சபை உறுப்பினர் பதவிக்கு, லக்சம்பர்க்கின் ஆதரவையும், வரவேற்பையும் அவர் தெரிவித்தார்.

9) எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத் தொடர்ந்து உதவும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. அமைதியைப் பேணுவதற்காக 2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்த போதிலும், பாகிஸ்தான் படைகள் ஊடுருவல்களுக்கு ஆதரவாக, எல்லையில் அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.

ஊடகக் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா அவர்கள், பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான ஊடுருவலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் ஆயுதங்கள் கடத்தலும் தடையின்றித் தொடர்கின்றன என்று கூறினார். பாகிஸ்தான் படைகளின் ஆதரவு இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கைகள் சாத்தியமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

10) இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கடுமையாகக் கண்டிக்கின்றன.

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான 12 ஆவது பயங்கரவாத எதிர்ப்பு உரையாடல் நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய செயலுத்திக் கூட்டாட்சியின் இந்த முக்கியமான அங்கம் குறித்து, நெருக்கமான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் தொடர உரையாடல் ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பரஸ்பரம் ஆதரவளிக்கத் தீர்மானித்தன.

அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாகக் கண்டித்தன.

 

 

 

Pin It