செய்திச் சுருக்கம் 21 11 2020

1) ஸ்காட்லாந்து எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்டுக்கு, ஷக்கி பெயின் என்ற நாவலுக்கான புக்கர் பரிசு.

ஸ்காட்டிஷ் எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட் தனது முதல் நாவலான ஷக்கி பெயின் மூலம் புனைகதைக்கான 2020 புக்கர் பரிசை வென்றுள்ளார். 1980 களில் கிளாஸ்கோவில் ஒரு சிறுவன், போதைப் பழக்கம் கொண்டிருந்த தனது தாயுடன் வளர்ந்து வருவதை இந்த நாவல் விவரித்தது.

நீதிபதிகள் மார்கரெட் பஸ்பி தலைவரால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், 50,000 பவுண்டுகள் பரிசை வென்ற 44 வயதான ஸ்டூவர்ட், பரிசை ஏற்றுக்கொண்டு உரையை நிகழ்த்தினார்.

புக்கர் பரிசுக்காக பட்டியலிடப்பட்ட புனைகதைகளில், இந்திய வம்சாவளி எழுத்தாளர் அவ்னி தோஷி எழுதிய ‘எரிந்த சர்க்கரை’ என்ற நாவலும் அடங்கும்.

முதன்முதலில் 1969 இல் வழங்கப்பட்ட புக்கர் பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இலக்கியலப் புனைகதைகளுக்கான முன்னணிப் பரிசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2) பல தசாப்தங்களாக உலகில் காணப்படாத மிக மோசமான பஞ்சத்தை எதிர்கொள்ளும் ஆபத்தில் யேமன்: ஐ.நா.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யேமன், பல தசாப்தங்களாக உலகில் காணப்படாத மிக மோசமான பஞ்சத்தை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். உடனடி நடவடிக்கை இல்லாத நிலையில், லட்சக்கணக்கான உயிர்கள் இழக்கப்படலாம் என்று அன்டோனியோ குட்டரெஸ் நேற்று தெரிவித்தார். ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் ஐந்தாண்டு காலமாக, யேமன் யுத்தத்தை சந்தித்து வருகிறது.

ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தமளிக்கும் விதமாக, ஹௌதி குழுவை தடுப்புப்பட்டியலில் சேர்க்க அமெரிக்கா அச்சுறுத்திய நிலையில், குட்டரெஸ் அவர்களின் எச்சரிக்கை வந்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கை, உயிர் காக்கும் உதவி வழங்குவதற்குத் தடையாய் இருப்பதோடு, யேமனில் நிலைமையை மெலும் மோசமாக்கும் என்று உதவிப் பணியாளர்கள் அச்சத்தை எழுப்பியுள்ளனர்.

3) டைக்ரே போராளிகளிடமிருந்து இரண்டு முக்கிய நகரங்கள் கைப்பற்றப்பட்டதாக எத்தியோப்பியா கூறுகிறது.

வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் கிளர்ச்சிப் படைகளிலிருந்து எத்தியோப்பியன் படைகள் இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் வளர்ந்து வரும் மனிதாபிமான அவசரத்தை ஏற்படுத்திய இரண்டு வார யுத்தத்தில் சண்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

4) அமெரிக்க தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் முயற்சியில் டிரம்ப் அவர்களுக்கு இரட்டை இழப்பு.

நவம்பர் 3 தேர்தல் முடிவை நிராகரித்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட தீவிர முயற்சி, நேற்று ஜோர்ஜியாவில் அவர் தோல்வியுற்றதாக வெளியான முடிவையடுத்து, மற்றொரு அடி வாங்கியுள்ளது. அதே நேரத்தில், வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென், தனது நிர்வாகத்தில் அதிகப் பணியிடங்களை நிரப்பினார்.

ஜோ பிடென் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கத் தயாராகி வருகிறார். ஆனால், பரவலான வாக்காளர் மோசடி என்று கூறி, டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ள மறுத்து, பல மாநிலங்களில் வழக்குகள் மற்றும் மறுபரிசீலனை விண்ணப்பம் மூலம், முடிவுகளை செல்லாததாக்கி, மாற்றியமைக்க முயல்கிறார்.

5) கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம், நாட்டில் 93.67 சதமாக உயர்வு.

46,232 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளுடன், இந்தியாவின் மொத்த பாதிப்படைந்தோர் எண்ணிக்கை, 90,50,598 ஐத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 564 புதிய இறப்புகளுடன், மொத்த இறப்பு எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது பாதிப்பில் உள்ளோர் எண்ணிக்கை,4,39,747 என, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை, 84,78,124 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 49,715 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் விகிதம், 93.67 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நேற்று வரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 13,06,57,808 என்றும், கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 1,06,57,808 சோதனைகள் இதில் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

6) ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராசெனெகாவின் கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசி வயதானவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசி, 60 மற்றும் 70 வயதிற்குட்பட்ட வயதானவர்களிடையே வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது வைரஸ் தொற்றின் அதிக ஆபத்தில் இருக்கும் வயதானவரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை எழுப்புகிறது.

ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் மற்றும் மோடெர்னா ஆகிய மூன்று தடுப்பூசிகள், ஏற்கனவே மூன்றாம் கட்ட சோதனைகளில் இருந்து நல்ல பூர்வாங்கத் தரவைப் பதிவிட்டுள்ளன. 65 வயதிற்கு மேற்பட்ட 94% மக்களை கோவிட் -19 இலிருந்து பாதுகாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

7) COVID-19 தடுப்பூசி விநியோகம் மற்றும் நிர்வாகத்தின் தயார்நிலையை பிரதமர் திரு மோதி மதிப்பாய்வு.

கோவிட் -19 தடுப்பூசி விநியோகம் மற்றும் நிர்வாகத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் திரு நரேந்திர மோதி ஒரு கூட்டம் நடத்தினார். தடுப்பூசி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றை எளிதாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நேற்று நடந்த கூட்டத்தின் போது பிரதமர் அறிவுறுத்தினார்.

ஐந்து தடுப்பூசிகள் இந்தியாவில் மேம்பட்ட கட்டங்களில் உள்ளன. அவற்றில் நான்கு, இரண்டாம் கட்டம் அல்லது மூன்றாம் கட்டத்திலும், ஒன்று, முதலாம் அல்லது இரண்டாம் கட்டத்திலும் உள்ளன. பங்களாதேஷ், மியான்மர், கத்தார், பூட்டான், சுவிட்சர்லாந்து, பஹ்ரைன், ஆஸ்திரியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இந்திய தடுப்பூசிகளின் தடுப்பூசி மேம்பாட்டிற்கும், அதன் பயன்பாட்டிற்கும் கூட்டுசேர்வதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளன.

8) மிஷன் சாகர் II: இந்திய கடற்படைக் கப்பல் ஐராவத் கென்யாவின் மொம்பசா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

‘சாகர் -2’ என்ற மனிதாபிமானப் பணியின் தொடர்ச்சியாக, இந்திய கடற்படைக் கப்பல் ஐராவத், நேற்று கென்யாவின் மொம்பசா துறைமுகத்தை அடைந்தது. இயற்கைப் பேரழிவுகள் மற்றும் கோவிட்-19 போன்ற தொற்றுநோய்களை சமாளிக்க, நட்பு நாடுகளுக்கு இந்திய அரசு உதவி வழங்கி வருகிறது. அதன்படி, ஐ.என்.எஸ். ஐராவத், தெற்கு சூடான் மக்களுக்கு உணவு உதவிகளை எடுத்து வந்துள்ளது.

9) வருங்காலத்தில், உலகில் செலவு குறைந்த மற்றும் புதுமையான சுகாதாரத் தீர்வுகளை உறுதி செய்வதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது – வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்  திரு பியூஷ் கோயல்.

வருங்காலத்தில், உலகில் செலவு குறைந்த மற்றும் புதுமையான சுகாதாரத் தீர்வுகளை உறுதி செய்வதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது என்று, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு  பியூஷ் கோயல் அவர்கள் கூறியுள்ளார்..

நேற்று, இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் ஆசியா ஹெல்த் 2020 உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார். வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் ஏழைகள் உட்பட, அனைவருக்கும் மலிவு விலையில் கோவிட் -19 நோய்க்கான தடுப்பூசிகளை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார். கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான இந்தப் பொதுவான முயற்சி, உண்மையில் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவில் மேம்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி, விரைவான வேகத்தில் முன்னேறி வருகிறது என்று திரு கோயல் கூறினார்.

10) இன்று தொடங்கும் ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோதி கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று தொடங்கும் 15 ஆவது ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோதி கலந்து கொள்வார். இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாடு, சவுதி அரேபியா தலைமையில் நடைபெறும். “அனைவரும் 21 ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளைப் பெறுதல்” என்பது இக்கூட்டத்தின் கருப்பொருளாகும். கூட்டம் காணொளி வடிவத்தில் நடைபெறும். இது, இந்த ஆண்டின் இரண்டாவது ஜி 20 தலைவர்கள் கூட்டமாகும்.

இதில், COVID-19 நோயிலிருந்து, உள்ளடக்கிய, ஸ்திரமான, நிலையான மீட்பு மீட்பு குறித்து கவனம் செலுத்தப்படும். உச்சிமாநாட்டின் போது, தலைவர்கள் தொற்றுநோய் தயார்நிலை மற்றும் வேலை வாய்ப்புக்களை மீட்டெடுப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவை குறித்து விவாதிப்பார்கள்.

Pin It