செய்திச் சுருக்கம் 23 5 2020

1) சவூதி அரேபியா ஈத் பண்டிகையின் முதல் நாளை அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, புனித ரமலான் மாதத்தின் கடைசி நாளாகவும், ஈத் பண்டிகையின் முதல் நாளாகவும் இருக்கும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி, அரச சபை நீதிமன்றம், ரமலானைத் தொடர்ந்து வரும் ஷாவால் மாதத்தின் அமாவாசை காணப்படவில்லையாதலால், சனிக்கிழமை ரமலானின் 30 ஆவது நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை ஷாவால் மற்றும் ஈத் பண்டிகையின் முதல் நாளாகவும் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

ஆசீர்வதிக்கப்பட்ட ஈத் பண்டிகை வருகையை முன்னிட்டு, உச்ச நீதிமன்றம், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர், மகுட இளவரசர், அரசாங்கம் மற்றும் சவுதி அரேபியாவின் மக்கள் மற்றும் நாட்டில் வாழும் முஸ்லீம் வெளிநாட்டவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தது.

2) இங்கிலாந்துக்கு வரும் சர்வதேசப் பயணிகளுக்குக் கடுமையான புதிய நடைமுறை.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக அனுசரிக்கப்பட்ட ஊரடங்கு  படிப்படியாகத் தளர்த்தப்படுவதால், நாட்டிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்குக் கடுமையான புதிய நடைமுறைகளை இங்கிலாந்து அரசாங்கம் வகுத்துள்ளது. 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல்கள் மற்றும் மீறலுக்கு அபராதம் விதிக்கப்படுதல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து, வெள்ளிக்கிழமை பின்னர் வெளியிட உள்ளது.

தினசரி டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கையில், இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள இத் திட்டங்களின் கீழ், ஒரு குறிப்பிட்ட முகவரியில் மக்கள் தாங்கள் தனிமைப்படுத்தலுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, சுகாதார அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்ள முடியும். தவிர, நியதிகளை மீறினால், 1,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்க முடியும்.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் பிரிட்டிஷ் குடிமக்களுக்கும் இது பொருந்தும் புதிய விதிகள் அடுத்த மாதம் வரை நடைமுறைக்கு வரும்.

3) நேபாளத்தில் புதிதாக, மேலும் 30 பேருக்குக் கொரோனா தொற்று பதிவு. மொத்த எண்ணிக்கை 487 ஆக உயர்வு.

நேபாளத்தில் புதிதாக, மேலும் 30 பேருக்குக் கொரோனா தொற்று பதிவானதையடுத்து, அங்கு, பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சகத்தின் கூற்றுப்படி, சர்லாஹி மாவட்டத்தில் 15 பேர், கபிலவாஸ்துவில் ஒன்பது பேர், நவல்பராசியில் (மேற்கு) மூன்று பேர், சிட்வானில் இரண்டு பேர் மற்றும் நவல்பராசி (கிழக்கு) மாவட்டத்தில் ஒருவர், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

நேபாளத்தில் இப்போது 435 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் குணமடைந்துள்ளனர். COVID-19 காரணமாக இதுவரை மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர்.

4) 107 பேரை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானம் கராச்சியில் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.

கராச்சியில், ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே, 107 பேரை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம், மக்கள் அடர்த்தியான குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாகூரிலிருந்து 99 பயணிகள் மற்றும் எட்டு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஏர்பஸ் விமானம், கராச்சியில் தரையிறங்கவிருந்தபோது, மாலிரில் உள்ள மாடல் காலனிக்கு அருகில், ஜின்னா பூங்கா பகுதியில் விழுந்து நொறுங்கியது. உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. ஆனால் பலர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது

 விமானம் விபத்துக்குள்ளாகி, உயிர் இழப்புக்கள் ஏற்பட்டது குறித்து, அதிபர் ஆரிஃப் ஆல்வி வருத்தம் தெரிவித்தார். பிரதமர் இம்ரான் கான், விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்ததுடன், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

 பாகிஸ்தானில் கராச்சி விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டினார்.

5) பங்களாதேஷில் ஆம்ஃபான் சூறாவளியினால் 10 பேர் உயிரிழப்பு. 1,100 கோடி டாகா மதிப்பிலான சொத்துக்கள் சேதம்.

நாட்டின் 26 மாவட்டங்களைப் பாதித்த ஆம்ஃபான் சூறாவளியால் பங்களாதேஷுக்கு டாகா 1100 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த சூறாவளியால் நாடு முழுவதும் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக, மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் எனாமூர் ரஹ்மான் வியாழக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சூறாவளி காரணமாக இறந்த மக்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 5 லட்சம் டாகா அளிக்கப்படும் என்றும், சேதமடைந்த வீடுகள் உள்ளூர் அதிகாரிகளால் புனரமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

ஆம்ஃபான் சூறாவளி, 1.76 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாய அமைச்சர் டாக்டர் அப்துர் ரசாக் வியாழக்கிழமை தெரிவித்தார். சூறாவளியை சரியான நேரத்தில் கணிப்பது பயிர்களின் இழப்பைக் குறைக்க உதவியது. ஆனால் மா மற்றும் லிச்சி பழத்தோட்டங்கள் அதிக அளவில் சேதமடைந்தன என்று அவர் கூறினார்.

6) இந்தியாவில் சமுதாய ரேடியோ வலையமைப்பு விரிவாக்கப்படும் – மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.  

சமூக வானொலியே ஒரு சமுதாயம் என்றும், அவை மாற்றத்தின் முகவர்கள் என்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் கூறியுள்ளார்.  இதுபோன்ற சமுதாய வானொலி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை அமைச்சகம் விரைவில்  கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.

அகில இந்திய வானொலி செய்திகள் மூலம் அனைத்து சமுதாய வானொலி நிலைய  வாசகர்களிடையே உரையாற்றிய அமைச்சர், சமுதாய வானொலியில், விளம்பரங்களுக்கான நேரத்தை, தற்போதுள்ள மணிக்கு 7 நிமிடம் என்பதை 12 நிமிடங்களாக உயர்த்தி, சமுதாய வானொலியை தொலைக்காட்சிக்கு நிகரான நிலைக்கு எடுத்துச் செல்ல, அரசு ஆர்வமாயுள்ளதாகத் தெரிவித்தார்.

தங்கள் தளத்திலிருந்து செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்ற சமுதாய வானொலியின் முக்கியக் கோரிக்கையை அமைச்சர் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். உள்ளூர் ஆதாரங்களைக் கொண்டு சரிபார்ப்பதன் மூலம், போலி செய்தி அச்சுறுத்தலை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்க அவர் நிலையங்களைத் தூண்டினார். அவற்றை அகில இந்திய வானொலியுடன் பகிர்ந்து கொள்ளவும் சமுதாய வானொலி நிலையங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

7) பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, ரிசர்வ் வங்கி கடன் விகிதங்களை குறைத்தும்கடன் திருப்பிச் செலுத்தத் துவங்கும்  கால அவகாசத்தை 3 மாதங்களாக  நீட்டித்தும் அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வெள்ளிக்கிழமை ரெப்போ வீதத்தை 40 அடிப்படை புள்ளிகள், அதாவது, 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைத்து, ரிவர்ஸ் ரெப்போ வீதத்தை 3.35 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஊடகங்களிடையே உரையாற்றியபோது, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு, 40 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க, 5: 1 என்ற பெரும்பான்மை வாக்களித்தது என்று குறிப்பிட்டார்.

அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் என்று கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர், அவை சந்தைகளின் செயல்பாட்டை மேம்படுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை ஆதரித்தல், கடன் சேவைக்கு நிவாரணம் அளிப்பதன் மூலம் நிதி அழுத்தத்தை எளிதாக்குதல் மற்றும் பணி மூலதனத்திற்கு எளிதான அணுகல் மற்றும் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் நிதித் தட்டுப்பாடுகளை  எளிதாக்குதல் ஆகும் என்று குறிப்பிட்டார். கடன் திருப்பிச் செலுத்தத் துவங்கும் காலத்தை ஜூன் 1 முதல்  ஆகஸ்ட் 31 2020 வரை, நீட்டித்து, ஆளுநர் அறிவித்தார்.

8) நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு பணிகளுக்காகமேற்கு வங்கத்திற்கு ரூ1000 கோடியும், ஒடிஷாவுக்கு ரூ 500 கோடியும் உதவித் தொகையைப் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஆம்ஃபான் சூறாவளிக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகளுக்காக, மேற்கு வங்கத்திற்கு முன்கூட்டிய நிதியாக 1,000 கோடி ரூபாய் உதவி வழங்கப்படும். மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பரகனாஸ் மாவட்டங்களில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோதியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இணைந்து, வான்வழி ஆய்வு மேற்கொண்டனர். சூப்பர் சூறாவளிப் புயலால் ஏற்பட்ட சேதங்களின் அளவை மதிப்பிடுவதற்கான நிர்வாகக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

புயல் தொடர்பான சம்பவங்களில் கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும் பிரதமர் அறிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோதி, வெள்ளிக்கிழமை சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவுக்கு ரூ .500 கோடி நிதி உதவி அறிவித்தார். சூறாவளி தாக்கிய பகுதிகளின் வான்வழி ஆய்வுக்குப் பிறகு, அவர் ஆளுநர் கணேஷி லால் மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாய் பிரதமர் அறிவித்தார்.

Pin It