செய்திச் சுருக்கம் 3 7 20

1) மியான்மர் ஜேட் சுரங்க சரிவில் குறைந்தது 162 பேர் கொல்லப்பட்டனர்.

மியான்மரில், வடக்கு கச்சின் மாகாணத்தில் ஒரு ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் கொல்லப்பட்டனர். உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான ஜேட் சுரங்கத் தொழிலின் மையமான ஹபகாந்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மியான்மர் தீயணைப்பு சேவைத் துறை தெரிவித்துள்ளது. மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனுக்கு வடக்கே 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சின் மாநிலத்தில் உள்ள ஹபகாந்த் ஒரு கடினமான மற்றும் தொலைதூரப் பகுதியாகும். காயமடைந்த 54 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தெரியாத எண்ணிக்கையிலான மக்கள் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. உடல்களை மீட்டெடுக்க அவசரகாலப் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியிருந்தது.

ஐ.நா. தலைமைச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் அவர்கள், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், மியன்மார் அரசுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

2) இந்தியா-பங்களாதேஷ் இடையே, ஜூன் மாதத்தில், சாதனை அளவில் சரக்கு ரயில்கள் இயக்கம்.

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே, ரயில்வே, 2020 ஜூன் மாதத்தில், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு,
100 க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்கி சாதனை படைத்தது. மக்கள் மற்றும் பொருட்களின் நடமாட்டத்தில் கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுக்கு மத்தியில், ஜூன் மாதத்தில், இந்திய ரயில்வே 103 சரக்கு ரயில்களை தொழில்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை ஏற்றிக்கொண்டு, பங்களாதேஷ் ரயில்வேக்கு வழங்கியது. இரு நாடுகளின் ரயில்வே ஜூன் மாதத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது என்று பங்களாதேஷில் உள்ள இந்திய தூதரகம், வியாழக்கிழமை ஒரு டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

3) இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்புறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்பின் பழைய நாகரிக உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திரு அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை சீராக நடத்துவதை உறுதி செய்ய இரு தரப்பினரும் கடுமையாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்றியுள்ளனர் எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் மிகவும் கடுமையான கோவிட் -19 ஊரடங்கு நடவடிக்கைகளின் காலங்களில் கூட,  பொருட்களின் வர்த்தகத்தின் இயக்கம் சீராக தொடர்கிறது என்று அவர் கூறினார்.

4) இந்தியா-சீனா எல்லையில் சீன அத்துமீறல் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைக்கு, சீன அத்துமீறலே காரணம் என, அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை உறுதிப்படுத்துகின்றன என்றும், உலகின் பிற பகுதிகளில் சீனா அரங்கேற்றி வரும் அத்துமீறல்களைப் போன்றதுதான் இதுவும் எனவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேலே மெக்இனானி அவர்கள் கூறினார். முன்னதாக, சீன செயலிகளை இந்தியா தடை செய்ததை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அவர்கள் வரவேற்றார்.

5) 38,900 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்புக் கொள்முதலுக்கு அரசு அனுமதி.

பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (டிஏசி), நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இந்திய ஆயுதப்படைகளுக்குத் தேவையான பல்வேறு தளங்கள் மற்றும் உபகரணங்களின் மூலதனக் கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்தது. 38,900 கோடி ரூபாய் செலவுக்கான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுதேச வடிவமைப்பு மற்றும் மேம்பாடு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்த ஒப்புதல்களில் இந்திய தொழில்துறையிலிருந்து 31,130 கோடி ரூபாய் அளவில் கொள்முதல் இருக்கும்.
பிரதம விற்பனையாளர்களாக, பல சிறு,குறு, நடுத்தரத் தொழில்களை ஈடுபடுத்தி, இந்திய பாதுகாப்புத் தொழில் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்களில் சிலவற்றில் உள்நாட்டு உள்ளடக்கம் திட்ட செலவில் 80 சதவீதம் வரை உள்ளது.

6) சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அனைத்து இந்தியப் பிரதேசங்களையும் காலி செய்யுமாறு இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 627 இந்தியர்கள், அட்டாரி ஒருங்கிணைந்த செக் போஸ்ட் மூலம் திரும்பி வந்துள்ளனர். ஜூன் 25, 26, 27 தேதிகளில் அவர்கள் திரும்பி வந்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். சுமார் 100 பேர் இன்னும் பாகிஸ்தானில் தங்கியுள்ளனர் என்றும், இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது என்றும், அவர்கள் திரும்புவதற்கான அனுமதிகளுக்காகக் காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

கில்கிட் பால்டிஸ்தானில் பொதுத் தேர்தல் குறித்துப் பேசுகையில்,  இந்தியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றின் உண்மை நிலையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது என்றும், இத்தகைய நடவடிக்கைகள், பாகிஸ்தான் சட்டவிரோதமாக இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளதை மறைக்கும் நோக்கில் எடுப்கப்பட்டுள்ளன என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார். சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அனைத்து இந்தியப பிரதேசங்களையும் காலி செய்யுமாறு இந்தியா பாகிஸ்தானைப் கேட்டுக் கொண்டுள்ளது.

7) வந்தே பாரத் மிஷன் திட்டம் நான்காவது கட்டத்திற்குள் நுழைகிறது.

வந்தே பாரத் மிஷன் நேற்று முதல் நான்காவது கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ,ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவுக்கு திரும்பிவரப் பதிவு செய்த மொத்தம் 5,83,109 நபர்களில், 4,75,000 க்கும் மேற்பட்டோர் இத் திட்டத்தின் கீழ் திரும்பியுள்ளனர் என்று, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறினார். இதில், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து, தரை வழியாக நாடு திரும்பிய 90,000 பேரும் அடங்குவர். இத்திட்டத்தின் நான்காவது கட்டத்தில், ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் 500 விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

8) எல்லைப் பகுதிகளில்  அமைதியை விரைவாக மீட்டெடுப்பதை சீனத் தரப்பு உறுதி செய்யும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது – இந்திய வெளியுறவு அமைச்சகம்.

இந்தியாவும்,  சீனாவும்  எல்லைப் பகுதிகளில்  நிலைமையை சரி செய்ய நிறுவப்பட்ட இராஜதந்திர மற்றும் இராணுவ சேனல்கள் மூலம் கலந்துரையாடி வருகின்றன. இரு தரப்பு மூத்த தளபதிகள் ஜூன் 6, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சந்தித்தனர் என்று இத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இரு தரப்பினரும், கட்டம்  வாரியாக, எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர் என்று,  வெளியுறவு செய்தித் தொடர்பாளர்  திரு அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறினார். ஒட்டுமொத்த நிலைமை ஒரு பொறுப்பான முறையில் கையாளப்படும் என்றும், இரு தரப்பினரும் ஜூன் 6 ஆம் தேதி, எல்லையில் இருந்து வாபஸ் ஆவது குறித்து மேற்கொண்ட புரிந்துணர்வை நேர்மையாக நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் ஜூன் 17 அன்று, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்  இது அமையும் என்றும் அவர் கூறினார்.

9) கோவிட் மீட்பு வீதம் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை எட்டியுள்ளது.

இதுவரை 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கோவிட்-19 நோயாளிகளின் மீட்பு விகிதம் நாட்டில் 60 சதவீதத்தைத் தொடும் வகையில் வேகமாக நகர்கிறது. தற்போது, ​​மீட்பு விகிதம் 59.52 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 11,881 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3. 59 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. தற்போது, ​​2,26,947 பேர் பாதிப்பில் உள்ளனர்.  அனைவரும் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்.

Pin It