செய்திச் சுருக்கம் 30 6 2020.

1) டாக்கா அருகே புரிகங்காவில் படகு மூழ்கி 28 பேர் உயிரிழந்தனர்.
திங்கள்கிழமை காலை டாக்காவின் ஷியாம்பஜார் பகுதிக்கு அருகே புரிகங்கா ஆற்றில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இருந்து இதுவரை 28 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் பி.எஸ்.எஸ். தெரிவிக்கிறது. திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் முன்ஷிகஞ்சிலிருந்து டாக்கா புறப்பட்ட படகு, மற்றொரு படகுடன் மோதி, மூழ்கியது என்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு சேவை அதிகாரி கூறினார். இப்படகில் 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மீட்பு நடவடிக்கையை பங்களாதேஷ் உள்நாட்டு நீர் போக்குவரத்து ஆணையம் (BIWTA), தீயணைப்பு சேவை, நதி போலீஸ், கடலோர காவல்படை மற்றும் பங்களாதேஷ் கடற்படையின் டைவிங் குழு நடத்தி வருகின்றன.

2) இந்தியா – பிரான்ஸ் வெளியுறவு செயலாளர் நிலை ஆலோசனைகள் வீடியோ மாநாடு மூலம் நடைபெற்றது.

வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா மற்றும் ஐரோப்பா மற்றும் பிரான்சின் வெளியுறவு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் பிரான்சுவா டெலாட்ரே, திங்களன்று வெளியுறவு செயலாளர் நிலை ஆலோசனைகளை வீடியோ மாநாடு மூலம் நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். பரஸ்பர நலன் குறித்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பேரழிவைத் தடுக்கும் உள்கட்டமைப்பிற்கான கூட்டணியில் பிரான்ஸ் இணைந்ததை இந்தியா வரவேற்றது. 2021-22ல் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியா பங்கேற்பதை பிரான்ஸ் வரவேற்றது.

3) கராச்சி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறிய கருத்துக்களை இந்தியா நிராகரிக்கிறது.
கராச்சி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறிய கருத்துக்களை இந்தியா நிராகரித்து, அது அபத்தமானது என்று கூறியுள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்த ஊடகக் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திரு. அனுராக் ஸ்ரீவஸ்தவா,  பாகிஸ்தான், அதன் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இந்தியா மீது குற்றம் சாட்ட முடியாது என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானைப் போலல்லாமல், கராச்சி உட்பட, உலகில் எங்கும் பயங்கரவாதத்தைக் கண்டிக்க இந்தியாவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று குறிப்பிடடார். திரு. ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், பாகிஸ்தானின் பிரதமர், உலக பயங்கரவாதியை ஒரு “தியாகி” என்று வர்ணிக்கும் சூழ்நிலையில், அதன் அரசாங்கத்தின் நிலைப்பாடு உட்பட, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் சுய ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

4) பூட்டானில் நீர் மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

பூட்டான் அரசாங்கத்துக்கும் கோலோங்சு ஹைட்ரோ எனர்ஜி லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையிலான 600 மெகாவாட் கோலோங்சு (கூட்டு முயற்சி) நீர்மின் திட்டத்திற்கான சலுகை ஒப்பந்தம், திம்புவில் திங்களன்று, , இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பூட்டான் வெளியுறவு அமைச்சர் டாக்டர் டாண்டி டோர்ஜி ஆகியோரின் காணொளி முன்னிலையில் கையெழுத்தானது. கிழக்கு பூட்டானில் உள்ள டிராஷியாங்சே மாவட்டத்தில் உள்ள கோலோங்சு ஆற்றின் கீழ் பாதையில் 600 மெகாவாட் ரன்-ஆஃப்-ரிவர் திட்டம் அமைந்துள்ளது. பூட்டானின் ட்ரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவின் சட்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனமான கோலோங்சு ஹைட்ரோ எனர்ஜி லிமிடெட் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5) ஜம்மு காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில், இந்திய முகாம்கள் மீது, பாகிஸ்தான் அத்து மீறி துப்பாக்கி சூடு – இந்திய ராணுவம் கடுமையான பதிலடி.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் தங்தார் செக்டரில், கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள இந்திய நிலைகளின் மீது, பாகிஸ்தான் துருப்புக்கள் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தின.  பாகிஸ்தான் தாங்தாரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில், போர் நிறுத்த ஒம்பந்தத்தை மீறி, தூண்டப்படாத வகையில், அத்துமீறி, குண்டு வீசியது என்று, பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார். இதற்கு இந்திய இராணுவம் கடுமையாக, தகுந்த பதிலடி கொடுத்தது. கடைசி அறிக்கைகள் வந்தபோது, யாருக்கும் எந்தவிதமான சேதங்களும் காயங்களும் ஏற்படவில்லை.

6) கோவிட்-19 நோயிலிருந்து இதுவரை 3.21 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீண்டுள்ளனர், மீட்பு வீதம் 58.67% ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்தம் 3, 21,723 பேர் இதுவரை நாட்டில் குணமாகியுள்ளதாக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் -19 நோயிலிருந்து 12,010 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் மீட்பு விகிதம் 58.67 சதவீதத்தை எட்டியுள்ளது.  நாட்டில் மொத்தம் 19,459 கோவிட் -19 பாதிபபுக்கள், கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 5,48,318 ஆக உள்ளது. ஒரே நாளில், 380 இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை, 16,475 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, ​​நாட்டில் பாதிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,10,120 ஆகும். கொரோனா வைரஸுக்கு 1,70,560 மாதிரிகள், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு ஆய்வகங்களால் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

7) இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் டிக்டோக், ஹலோ, விசாட் உள்ளிட்ட 59 கைப்பேசி செயலிகளை அரசு தடை செய்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மற்றும் பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் 59 கைப்பேசி செயலிகளை அரசாங்கம் தடை செய்துள்ளது. மின்னணு மற்றும் தகவல்  தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயலிகள், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு,  பாதுகாப்பு  மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளன என்ற தகவலைக் கருத்தில் கொண்டு இவை தடை செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட செயலிகளில்  டிக்டோக், ஹெலோ மற்றும் விசாட் ஆகியவை அடங்கும். இந்தியாவின் இறையாண்மைக்கும்  குடிமக்களின் தனியுரிமைக்கும் தீங்கு விளைவிக்கும் செயலிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பரவலாகக் கோரிக்கைகள் எழுந்தன.

8)கிழக்கு லடாக்கில் பதற்றத்தைக் குறைக்க இந்தியாவும் சீனாவும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

கிழக்கு லடாக்கில் பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் இந்திய மற்றும் சீன ராணுவம், இன்று மற்றொரு சுற்று லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன. முக்கியமான பிராந்தியத்தில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும் இந்த சந்திப்பு இறுதி செய்யும். இது லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்றாக இருக்கும்.  இது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தியப் பக்கத்தில் சுசுல் பகுதியில் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டம் காலை 10:30 மணிக்கு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் இந்திய தூதுக்குழுவிற்கு 14 கோர் கமாண்டர்,
லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் அவர்களும், சீனக் குழுவுக்கு திபத் ராணுவப் பிரிவின் கமாண்டரும் தலைமை தாங்குவர்.
முதல் இரண்டு சந்திப்புக்கள், சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் நடைபெற்றன. ஜூன் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தையின் போது, கிழக்கு லடாக்கில் பிரச்சனைக்குரிய பகுதிகளில் இருந்து துருப்புக்களை வாபஸ் பெறுவது என ஒப்புக் கொள்ளப்பட்டது.

9) இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோதி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.  இரண்டாவது ஊரடங்குத் தளர்வுக்கு வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஒரு டுவிட்டர் செய்தியில் பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. கோவிட்19 தொற்றுநோய் பரவியதிலிருந்து இது, பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றும் ஆறாவது உரையாகும். கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து மீண்டு வரும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பை அறிவித்தபோது, ​​திரு மோதி கடைசியாக மே 12 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Pin It