செய்திச் சுருக்கம் 5 1 21

1) சவூதி அரேபியாவில் இன்று நடைபெறும் ஜி.சி.சி உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் கத்தார் அமீர்.

சவூதி அரேபியாவில் இன்று நடைபெறும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) உச்சி மாநாட்டில், கத்தார் நாட்டின் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி கலந்து கொள்வார் என்று கத்தாரின் அரசு தொடர்பு அலுவலகம் (ஜி.சி.ஓ) உறுதிப்படுத்தியுள்ளது.

குவைத் வெளியுறவு அமைச்சர் திங்களன்று சவூதி அரேபியா தனது வான்வெளியையும், அதன் நிலம் மற்றும் கடல் எல்லையையும் கத்தாருடன் மீண்டும் திறப்பதாக அறிவித்ததை அடுத்து, ஷேக் தமீமின் பங்கேற்பு சாத்தியமாகியுள்ளது. இது கத்தாருடன் அரசியல் மோதலைத் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு வழி வகுக்கிறது.

ஜூன் 2017 இல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் ஈரானுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி, அந்நாட்டுடன் பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தன.

2) ஜூலியன் அசாங்கே யை அமெரிக்காவுக்குத் திருப்பியனுப்பும் மனுவை பிரிட்டிஷ் நீதிபதி நிராகரிப்பு.

உளவுச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் நீதிபதி திங்களன்று தீர்ப்பளித்தார். அவரது மனநல பிரச்சினைகளால் அவர் தற்கொலைக்கு ஆளாக நேரிடும் என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான அசாங்கேயைத் திருப்ப ஒப்படைக்க தொடர்ந்து முயற்சிப்பதாக அமெரிக்கா கூறியது. அமெரிக்க. வழக்குரைஞர்கள் திங்களன்று லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

3) அமெரிக்க பங்குச் சந்தைப் பட்டியலில் இருந்து நீக்கும் திட்டம் – சீனாவின் மூன்று பெரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 150 கோடி டாலர் நஷ்டம்.

சீனாவின் மூன்று பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள், நியூயார்க் பங்குச் சந்தையின் பட்டியலிலிருந்து நீக்கப்படும் திட்டம் தொடர்பான கவலைகள் காரணமாக, 150 கோடி டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளன. சீனா டெலிகாம் கார்ப் லிமிடெட், சீனா மொபைல் லிமிடெட் மற்றும் சீனா யூனிகாம் ஹாங்காங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நீக்கப் போவதாக நியூயார்க் பங்குச் சந்தை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

4) Tk 2,276 கோடி பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை பங்களாதேஷ் வகுத்துள்ளது.

நாட்டில் பேரழிவு மேலாண்மைப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, நாடு தழுவிய திட்டத்தை பங்களாதேஷ் அரசு தயாரித்துள்ளது. இயற்கைப் பேரழிவுகளால் எழும் அவசர காலங்களில் விரைவான பதில் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், நவீன உபகரணங்களை வாங்க Tk 2,276 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

5) அர்ஜென்டினா திரைப்படத் தயாரிப்பாளர் பப்லோ சீசர், 51 ஆவது இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச நடுவர் மன்றத்திற்குத் தலைமை வகிப்பார்.

இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் 51 ஆவது பதிப்பிற்கு, உலகெங்கிலும் உள்ள பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய சர்வதேச ஜூரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூரி தலைவராக அர்ஜென்டினாவின் பப்லோ சீசர் விளங்குவார். இலங்கையின் பிரசன்னா விதானகே, ஆஸ்திரியாவின் அபுபக்கர் ஷாக்கி, இந்தியாவின் பிரியதர்ஷன் மற்றும் பங்களாதேஷின் ரூபாயத் ஹொசைன் ஆகியோர் ஜூரியில் அடங்குவர் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) புதிய கொரோனா வைரஸின் மரபுத் திரிபு காரணமாக அதிகரித்துள்ள தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு அறிவிப்பு.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் ஒரு புதிய நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் மரபுத் திரிபு காரணமாக, தொற்று அதிகரிப்பதால், மக்களை வீட்டிலேயே தங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசியமற்ற கடைகள் தொடர்ந்து மூடப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் இன்று முதல் மூடப்படும்.

7) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பங்களாதேஷ் ஒப்புதல்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டிற்கு பங்களாதேஷ் அரசு அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான ஒப்புதலை பங்களாதேஷின் மருந்து நிர்வாக இயக்குநரகம் (டிஜிடிஏ) திங்கள்கிழமை பிற்பகுதியில் பெக்ஸிம்கோ பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் (பிபிஎல்) நிறுவனத்துக்கு வழங்கியது.

8) அண்டார்டிகாவிற்கு 40 ஆவது அறிவியல் பயணத்தை இந்தியா துவக்கம்.

திங்கள்கிழமை, அண்டார்டிகாவிற்கு 40 ஆவது அறிவியல் பயணத்தை இந்தியா துவக்கியது. தென்துருவ வெண்மைக் கண்டமான அண்டார்டிக்காவில் விஞ்ஞான ஆய்வுகளுக்கான முயற்சியில் நான்கு தசாப்தங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 40 ஆவது பயணம் கோவாவிலிருந்து நாளை 43 உறுப்பினர்களுடன் துவங்கும்.

9) நாட்டில் கோவிட் – 19 தொற்றுநோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.32 சதமாக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் 29,091 நோயாளிகள் குணமடைந்ததைத் தொடர்ந்து, தொற்றுநோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.32 சதமாக உயர்ந்துள்ளது. மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 99,75,958 ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10) வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு 3 நாள் பயணம்.

புத்தாண்டின் முதலாவது உயர்மட்ட இருதரப்பு ஈடுபாட்டின் வெளிப்பாடாக, வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் இலங்கைக்கு 3 நாள் அரசுப் பயணம் மேற்கொள்கிறார். கோவிட் தொற்று நோய் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையே கட்டுப்பாட்டு ஏற்பாட்டுடன், இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 7 ஆம் தேதி முடிவுறும் இப்பயணத்தின் போது, இலங்கை அதிபர் திரு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் திரு மஹிந்தா ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் திரு தினேஷ் குணவர்தன ஆகியோரை டாக்டர் ஜெய்ஷங்கர் சந்திப்பார்.

 

Pin It