செய்தித் துளிகள் 9 am 23 5 2020

1) இந்தியாவின் மொத்த  கோவிட் 19 பாதிப்புக்களில், 80 சதவிகிதம், 5 மாநிலங்களில் மட்டுமே பதிவாகி உள்ளன. மற்ற மாநிலங்களில் மிகக் குறைவான அளவிலேயே பதிவாகியுள்ளன. பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் இப்போது, 13.3 நாட்கள் என்று அரசு கூறியுள்ளது.

2) கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்க, ஊரடங்கு பலனளித்துள்ளது என்று அரசு கூறியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின்படி, இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் இப்போது 40.97% ஆக உள்ளது.

3) மே 1 முதல், 2371 ரயில்களில் இந்திய ரயில்வே 31 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

4) இந்தியாவின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், உலக சுகாதார அமைப்பின் 34 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவில் வாரியத் தலைவராக இணைந்துள்ளார்.

5) சூப்பர் சூறாவளி ஆம்ஃபான் காரணமாக, மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வான்வழி ஆய்வை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன்,  மேற்கொண்டார். பிரதமர் மோதி அவர்கள், மேற்கு வங்க மாநிலத்திற்கு முன்கூட்டிய உதவித் தொகையாக, ரூ1000 கோடி அறிவித்துள்ளார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.

6) சூறாவளியின் தாக்கத்தால், கொல்கத்தாவில் 5500 க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. நகரின் பல பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன. மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

7) ஒடிஷாவுக்கு விஜயம் செய்த பிரதமர் மோதி அவர்கள், அம்மாநிலத்தில் அம்ஃபான் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவர் முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கலந்துரையாடினார். ஒடிஷாவுக்கு உடனடி உதவியாக ரூ .500 கோடியை மத்திய அரசு அறிவித்தது.

8) லாகூரிலிருந்து 90 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் வந்த பாகிஸ்தான் விமானம், கராச்சியில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.

9) கர்நாடகாவில் தனிமைப்படுத்தப்படும் விதிகள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஊர் திரும்பியவர்களுக்கு, 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் மட்டுமே இனி இருக்கும்.

10) தென் அமெரிக்கா, கொரோனா வைரஸின் புதிய மையமாக உருவெடுத்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Pin It