செய்தித் துளிகள் 16 10 2020

1) ஜெர்மனி, முதன்முறையாக, 7,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்புக்களை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது நாளாக, அதிகளவிலான தினசரிப் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில், 7,334 புதிய பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மனியின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமான ராபர்ட் கோச் நிறுவனம் வெள்ளிக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.

2) வியட்நாமில் மீட்புப் படையினர், 11 இராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு பேரின் புதையுண்ட சடலங்களை நிலச்சரிவில் இருந்து மீட்டனர். மற்றொரு நிலச் சரிவில் சிக்கிய நபர்களை செவ்வாயன்று மீட்கச் சென்ற இராணுவ வீரர்கள், ஒரு வன ரேஞ்சர் புறக்காவல் நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து அவர்கள் இருந்த கட்டிடத்தை பூமி, பாறை மற்றும் குப்பைகளால் மூழ்கடித்தது.

3) கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் ஒழுங்குமுறை குறித்து இலங்கை, புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் இருப்பது மற்றும் சமூக தூரவிலகலைப் பராமரிக்கத் தவறுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். இக் குற்றங்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும். வியாழக்கிழமையன்று, இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ், முகக் கவசம் அணிவது எல்லா நேரத்திலும் கட்டாயமானது. இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீட்டருக்கு குறையாத சமூக தூரத்தைப் பராமரித்தலும் கட்டாயமானது.

4) உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோதி, 75 ரூபாய் மதிப்புள்ள நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டார். இன்று அறிமுகப்படுத்தப்பட்ட நினைவு நாணயம், ஊட்டச்சத்துக் குறைபாட்டின் விளைவுகளைத் தணிக்க, எஃப்ஏஓ (FAO) ஆற்றிய முக்கியப் பங்கை நோக்கி, 130 கோடி இந்தியர்களின் மரியாதையைக் குறிக்கிறது  என்று பிரதமர் கூறினார். சமீபத்தில் எட்டு பயிர்களில் உருவாக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட 17 பயோஃபோர்டிஃபைட் பயிர்வகைகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

5) அண்மைக் காலமாக, புதிய கோவிட் -19 பாதிப்புக்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்திற்கு உயர் மட்டக் குழுக்களை அனுப்பியுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு கூட்டுச் செயலாளர், பொது சுகாதார அம்சங்களைக் கவனிக்க ஒரு பொது சுகாதார நிபுணர் மற்றும் ஒரு மருத்துவர் இடம் பெற்றுள்ளனர்.

6) இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா, நீண்ட கால உடல்நலக்குறைவால், மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. 1983 ஆம் ஆண்டு காவியமான “காந்தி” திரைப்படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற அத்தையா, தூக்கத்தில் நிம்மதியாகக் காலமானார். அவரது மகள் ராதிகா குப்தாவின் கூற்றுப்படி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அத்தையாவின் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக, அவரது உடல் முடங்கிப்போனதால் அவர் படுக்கையில் இருந்தார்.

7) இந்தியாவிற்கும் கஜகஸ்தானுக்கும் இடையில் ஒரு வெபினார் இணையவழி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதன் கருப்பொருள், “மேக் இன் இந்தியா ஃபார் தி வேர்ல்ட், இந்தியா – கஜகஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு: வெபினார் மற்றும் எக்ஸ்போ”. இது ஃபிக்கி (FICCI)  மூலம், பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வெபினார், பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 கோடி டாலர் பாதுகாப்பு ஏற்றுமதி இலக்கை அடைவதற்கும், நட்பு நாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடரின் ஒரு பகுதியாகும்.

8) பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம், அதன் புகைப்படம் மற்றும் வீடியோ மேடை வாயிலாக, சமூக ஊடக செல்வாக்கு  மிக்கவர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் மறைக்கப்பட்ட விளம்பரங்கள்  வெளிவருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை  எடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்த செய்தியை பிரிட்டனின் போட்டி மற்றும் சந்தை ஆணையம் (சி.எம்.ஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இன்ஸ்டாகிராமில் ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்த, நிறுவனங்களிடமிருந்து பெரிய கட்டணங்களை அவர்கள் பெற வாய்ப்புண்டு

.

9) இந்தியாவின் சிறந்த பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க் ஓபனின் காலிறுதிக்கு முன்னேறினார். ஏழு மாத கால கொரோனா வைரஸ் கட்டாய இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் செயல்பட்ட, தரவரிசையில் ஐந்தாவது இடத்திலுள்ள இந்த இந்திய வீரர், தனது கனடிய எதிராளியை 21-15 21-14 என்ற செட் கணக்கில் 33 நிமிடங்களில் வென்றார். இந்த ஆண்டு, பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பின் கீழ் நடக்கும் ஒரே ஒரு போட்டியான சூப்பர் 750 போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், அவர் இந்த வெற்றியைப் பெற்றார்.

Pin It