செய்தித் துளிகள் 2 pm 23 5 2020

1) நாட்டில் 51,784 பேர் கோவிட் 19 நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 41.37% ஆக உயர்ந்துள்ளது.

2) 100,000 பேருக்கு 7.9 கோவிட் 19 நோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது. நாட்டில் இந்நோயால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 3.2%. சுகாதார வசதிகளைக் கொண்ட முன்னேறிய நாடுகளை விடவும், இந்தியாவின் குணமடைந்தோர் விகிதம், உலகிலேயே சிறந்தவற்றுள் ஒன்று என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

3) நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக, நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைப்பதில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்று நிதி ஆயோக் கூறியுள்ளது.

4) இந்தியாவில் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, ஒரு கோவிட் 19 நோய் கூடப் பதிவாகாத ஒரே மாநிலமான சிக்கிமில், ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.

5) மே 25 முதல் இயக்கப்படவுள்ள விமான சேவைகளுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு துவங்கியுள்ளது. உள்நாட்டுப் பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று பல மாநிலங்கள் கூறியுள்ளன.

6) மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோதி அவர்கள் உறுதியளித்துள்ளார். அம்ஃபான் சூப்பர் சூறாவளியால் இரு மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கோவிட் 19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட சூறாவளி, மக்களின் பிரச்சினைகளை மேலும் அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார். இரு மாநிலங்களிலும் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

7) மார்ச் மாதம் தில்லியில் நடைபெற்ற தப்லீகி ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 850 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை விசாரித்துள்ளது. 916 ஜமாதிகள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளனர்.

8) இஸ்லாமிய வெறுப்பு தொடர்பாக இந்தியாவைத் தணிக்கை செய்ய முயலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) நடவடிக்கையை மாலத்தீவு நிராகரித்தது. இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்று மாலத்தீவு கூறியது. இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், தெற்காசியாவில் நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் மாலத்தீவு தெரிவித்தது.

9) ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்களைக் கையாள்வதற்கான சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் மக்களுக்கு எதிரானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்க-சீனா உறவுகளை மேலும் மோசமாக்கக் கூடும்.

10) விண்வெளி வீரர்கள் குழுவுடன், மே 27 ஆம் தேதி விண்கலத்தை ஏவும் விண்வெளி எக்ஸ் என்ற நிறுவனத்தின் திட்டத்துக்கு, நாசா ஒப்புதல் அளித்துள்ளது.

Pin It