ஜனநாயகப் பரீட்சையை எதிர்கொள்ளும் இலங்கை.

(அரசியல் விமர்சகர் எம்.கே. டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

இலங்கையில் பிரதமராகப் போகும் நபர் யார் என்பதை முடிவு செய்ய இம்மாதம் 14 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், வாக்கெடுப்பின் முடிவைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தான் அடுத்த சில நாட்களுக்கு அனைவரது கவனமும் இருக்கும். அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா, பதவியிலிருந்த திரு. ரனில் விக்ரமசிங்கேவை திடீரெனப் பதவி நீக்கம் செய்து, முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். 14 ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டம், அங்கு தற்போது நிலவும் அரசியமைப்பு குறித்த நிச்சயமற்ற சூழலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகின்றது.

பிரதமருக்கான இந்தப் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இரு வேட்பாளர்களுக்கும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சரி சமமாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி, 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், திரு. விக்ரமசிங்கேவிற்கு 102 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. திரு. ராஜபக்சேவிற்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இது ஒரு நுண்ணிய நெருக்கடியான நிலையாகத் தெரிகின்றது. சில உறுப்பினர்கள் தங்கள் தரப்பிலிருந்து மாற நினைத்தாலும், இந்த நிலைமை மாறலாம். தங்கள் தரப்பை விட்டு, ராஜபக்சே தரப்பிற்குச் சென்ற ஐந்து நபர்களில், நால்வருக்கு ஏற்கனவே அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டு விட்டன. பணப்பரிமாற்றமும் அதற்கான தூண்டுதல்களும் நடப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நடப்பாட்சியில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி, சில திருப்தியற்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்க முடியும் என்பதிலும் திரு. ராஜபக்சே நம்பிக்கையுடன் இருக்கிறார். எனினும், தன்னுடைய உறுப்பினர்களின் பலம் தன் பின்னே உறுதியுடன் இருக்கிறது என்றும், இதற்கு மேல் எதிர்த் தரப்பிற்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்றும் திரு. விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

மீதமுள்ள 22 உறுப்பினர்களில், சிங்கள தேசியவாதக் கட்சியான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஜெ.வி.பி எனப்படும் விமுக்தி பேராமுனா, இரு தரப்பிற்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை என்றும், அதனால், தான் எந்தத் தரப்பிற்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் ஏற்கனவே கூறியுள்ளது. ஆகவே, நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ள டி.என்.ஏ எனப்படும் தமிழ் தேசியக் கூட்டணிதான், பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் தற்போது மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

ஆனால், இங்கும் அனைத்தும் அவ்வளவு எளிதாக நடக்கக்கூடியவை அல்ல. 2015 ஆம் ஆண்டின் தேர்தல்களுக்குப் பிறகு, சிரிசேனா – விக்ரமசிங்கே கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்துவரும் தமிழ் தேசியக் கூட்டணியே தற்போது ஒரு ஒருங்கிணைந்த கட்சியாக இல்லை. வட மாகாணங்களின் முதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஷ்வரன் தன்னுடைய தனிக் கட்சியைத் துவக்குவதற்காக, தமிழ் தேசியக் கூட்டணிக் கட்சியிலிருந்து வெளியேறியபோது, அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. நவம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழ் கூட்டணியின் இரு தரப்புகளின் சாய்வும் ஒரே பக்கத்தில் இருக்கின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கையாளும் முறைகளில், அதிபருக்கும் சபாநாயகருக்கும் இருக்கும் அதிகாரத் தொடர்புகளை வெளிக்காட்டும் கருத்துகளும் தற்போதைய போட்டிக்கு அடித்தளம் அமைக்கின்றன. இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் திரு. கரு ஜெயசூர்யா, திரு. ராஜபக்சே அதிபராகப்  பதவிப் பிரமாணம் செய்துவிக்கப்பட்டாலும், அவரைப் பிரதமராக அங்கீகரிக்க மறுத்து விட்டார். அடுத்த புதன்கிழமையன்று நாடாளுமன்றம் கூடும்போது ராஜபக்சேவை சபா நாயகர் எப்படி எதிர்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திரு. ராஜபக்சே சீனாவிற்கு நெருக்கமானவர் என்பது, இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை சர்வதேச சமூகம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். அவர் அதிபராக இருந்த சமயத்தில்தான் இலங்கையில் சீனாவால் அதிக அளவில் திடமாக கால் பதிக்க முடிந்தது. சீன முதலீடுகளின் காரணமாக, இன்று இலங்கை கழுத்தளவு கடனுடன் திண்டாடிக் கொண்டிருக்கின்றது என்பது மற்றொரு விஷயமாகும். இலங்கையால் சில கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், அதற்குப் பதிலாக, ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவிற்கு வாடகைக்கு விட வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆளானது. ஆகையால், ராஜபக்சே பிரதமரானவுடன் அவரை வரவேற்று வாழ்த்த, சீன அதிபர் ஸீ ஜின்பிங்க் அதிக ஆர்வம் காட்டியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு சிக்கலான சூழலில் தற்போது அந்நாடு சிக்குண்டு இருக்கிறது என்றே பல அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மேலும், தெற்காசியப் பகுதியில், அதிக காலத்திற்கு ஜனநாயக முறைப்படி நிர்வகிக்கப்பட்ட நாடு என்ற வரலாற்றுப் பின்னணியும் இலங்கைக்கு உள்ளது. அண்டை நாடான மாலத்தீவுகளில் நடந்தவற்றை வைத்துப்பார்த்தால், மக்களின் பிரதிநிதிகளால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் வெளிக்காட்டப்படும் அவர்களின் உறுதியான இசைவுதான் அரசியலைப்பு புதைகுழியிலிருந்து வெளிவருவதற்கான வழியைக் காண்பிக்க முடியும் என்பது தெளிவாகிறது. இம்மாதம் 14 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பு அந்த வழிக்கான ஒரு நம்பிக்கையையே அளிக்கின்றது. இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை இந்தியா கவனமாகக் கண்காணித்து வருகிறது. மிகவும் அருகில் இருக்கும் அண்டை நாடு என்ற வகையில், அங்கு நடக்கும் மாற்றங்கள், இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 

 

 

Pin It