ஜாட் ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஹரியானா முதலமைச்சர் மனோஹர் லால் கட்டர் மற்றும் ஜாட் சமூகத்தின் தலைவர்களிடையே நடந்த சந்திப்புக்குப் பிறகு, தில்லியில் இன்று நடைபெறுவதாக இருந்த ஜாட் இனத்தவருக்கு இடஒதுக்கீடு கோரும் ஆர்ப்பாட்டம்  விலக்கிக் கொள்ளப்பட்டது. ஹரியானா பவனின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர், மனோஹர் லால் கட்டர், அரசியல்சாசனத்துக்கு உட்பட்ட பல்வேறு வழிமுறைகளில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வாய்ப்பிருப்பதாகச் சொன்னார். அப்போது பேசிய ஜாட் சமூகத் தலைவர் யஷ்பால் மாலிக், ஜாட் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்துக்காக இன்று தில்லிக்கு செல்லப்போவதில்லை என்றார்.  கல்வி மற்றும் அரசு வேலைகளில் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று அகில இந்திய ஜாட் இடஒதுக்கீட்டு அமைப்பு கோரிவருகிறது. நாடாளுமன்றத்தை முற்றுகை இடவும் தில்லியை வெவ்வேறு இடங்களுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளில் இன்று போக்குவரத்தை முடக்கவும் முன்னர் இந்த அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இப்போது ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, மெட்ரோ ரயில், பேருந்து மற்றும் உள்ளூர் ரயில் போக்குவரத்து தில்லியில் வழக்கம் போல் நடைபெறும்.  எனினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தில்லியில் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Pin It