ஜி-20 மாநாட்டில் புத்துயிர் பெற்ற ரஷ்ய-இந்திய-சீனா முத்தரப்புச் சந்திப்பு

ரஷ்ய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தாலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி.

ரஷ்ய அதிபரின் முயற்சியால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அண்மையில் பியுனஸ் அயர்ஸ் –ல் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் போது சந்தித்தனர்.

மூன்று நாடுகளும் ஒத்துழைக்க வாய்ப்புள்ள பல விவகாரங்கள் குறித்தும் இம்மூன்று நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர். இந்தச் சந்திப்பை இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி மிக அருமையான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ளார். உலக அமைதியை மேம்படுத்தவும் இம்மூன்று நாடுகளின் நட்புறவை வலுப்படுத்தவும் இந்தச் சந்திப்பு உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச மேடைகளிலும் இந்த ஒத்துழைப்பு வலு சேர்க்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ நா, உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற  சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சீர்திருத்தங்கள் மற்றும் வலுப்படுத்தலின் முக்கியத்துவம்  குறித்தும் இந்தத் தலைவர்கள் ஒத்த கருத்தை வெளியிட்டனர். இந்த சர்வதேச அமைப்புகள் மிகவும் பலனளிப்பதாகவும் இவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். உலகளாவிய வளர்ச்சி மற்றும் வளமைக்குத் தடையில்லா உலகப் பொருளாதாரம் மற்றும் பல்தரப்பு வர்த்தக முறை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் இவர்கள் வலியுறுத்தினர்.

 

பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, கிழக்காசிய உச்சி மாநாடு போன்ற பல்தரப்பு அமைப்புகள் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்தவும் வழக்கமான கூட்டு ஆலோசனைகளுக்கும் இந்த மூன்று தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இவற்றின் மூலம், சர்வதேச சவால்களான பயங்கரவாதம், பருவ நிலை மாற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் சர்ச்சைகளுக்கான சுமுகமான தீர்வுகளை எட்டவும் பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகள் பெறவும்  முடியும் என்றும் இவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் தங்கள் உறுதிப்பாட்டிலிருந்து தளர்வதால், குறிப்பாக பருவநிலை மாற்றம் குறித்த நிலையான வளர்ச்சி  இலக்குகளை எட்டுவதில் சுணக்கம் ஏற்படுவது குறித்துப் பிரதமர் கவலை வெளியிட்டார்.

மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஐயத்தைப் போக்கும் நோக்கத்தில், இம்மூன்று நாடுகள் ஒன்றிணைத்திருப்பது எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இல்லை என்றும் உலக நன்மைக்காக மட்டுமே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இம்மூன்று நாடுகளின் தனிப்பட்ட வலிமைகள் சர்வதேச நிலைத்தன்மைக்கும் பொருளாதார நிர்வாக ஊக்கத்துக்கும் உதவும் என்று இம்மூன்று தலைவர்களும் கருதுகின்றனர்.

RIC அமைப்பு மிகவும் துடிப்புடன் செயல்படாமல் இருந்த நிலையில், வருங்காலத்தில் இது போன்ற முத்தரப்புச் சந்திப்புகளும் உச்சி மாநாடுகளும் நடத்த மூன்று நாடுகளும் இந்தச் சந்திப்பில் உறுதியளித்துள்ளன. ஒருங்கிணைந்த செயல்பாடு, கருத்தொற்றுமை, வலுவான ஒத்துழைப்பு இவற்றின் மூலம் உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்குக் கூட்டாகப் பங்களிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

ஜி-20 மாநாட்டின் போது இம்மூன்று நாடுகளும் ஒன்றாக இணைந்து சந்திப்பை நிகழ்த்தியிருப்பது, தன்னிச்சையான போக்கு, ஐ நா- வால் விதிக்கப்படாத பொருளாதாரத் தடைவிதிப்புகள், குழுக்களாகப் பிரிந்திருப்பது, வர்த்தகப் பாதுகாப்புவாதம் ஆகியவற்றுக்கு எதிரான குறியீடாகக் கருதப்படுகிறது. மூன்று தலைவர்களும் பலதரப்புவாதம், சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்தல், சட்டங்கள் அடிப்படையிலான உத்தரவுகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கின்றனர்.

ஜி – 20 மாநாட்டின் போது, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடனும் இந்தியா விவாதங்கள் நிகழ்த்தியது. JAI  என்றழைக்கப்படும் இந்த முத்தரப்புச் சந்திப்பு முதல் முறையாக நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின் போது, இந்தோ பசிபிக் பிராந்தியத்தைப் பொருளாதார வளர்ச்சிப் பிராந்தியமாக உருவாக்க இந்தியா தனது உறுதியை வலியுறுத்தியது. இந்த அமைப்புக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று பிரதமர் மோதி உறுதியளித்தார்.

மாறி வரும் புவி சார் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் அனைத்து வல்லரசுகளுடனும் சமநிலையான உறவுகளைப் பேணிக்காப்பது இந்தியாவிற்கு அவசியமாகும்.

Pin It