ஜெருசலம் நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் அங்கீகரிப்பு – உலகத் தலைவர்கள் கண்டனம்

ஜெருசலம் நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்துள்ளார்.  இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலத்திற்கு மாற்றும் நடவடிக்கையைத் தொடங்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.  ஜெருசலம் புனித நகரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கொண்டிருந்த நீண்ட காலக் கொள்கையை இந்த முடிவு மாற்றி அமைத்துள்ளது.   இதனை அடுத்து மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே நிலவும் மோசமான நிலைமை மேலும் தீவிரமடையும் என்று அரபுத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜெருசலத்தை இஸ்ரேல் நாட்டின் தலைநகரம் என்று அங்கீகாரம் அளிக்க  அமெரிக்க அதிபர்  செய்துள்ள முடிவுக்கு ஐ நா தலைமைச் செயலாளர் திரு அண்டோனியோ குட்ரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.  ஜெருசலம் நகரம் தான் இறுதியான அந்தஸ்து பிரச்சினை என்றும் இதனை நேரடிப் பேச்சுக்கள் மூலம் தான் தீர்க்க வேண்டும் என்றும் நேற்று நியூயார்கில் ஐ நா தலைமை இடத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பல்வேறு மக்களின் இதயங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள ஜெருசலம் இரண்டு நாடுகள் தீர்வின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்பட வேண்டும், இதற்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறினார்.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவுக்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்த நடவடிக்கை புதிய வன்முறைகளைத் தோற்றுவித்து இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரச்சினையைத் தீர்க்கும் நம்பிக்கையைப் புதைத்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் டொனல்டு டிரம்பின் முடிவை வரவேற்பதாக இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமீன் நேத்தன்யாஹூ கூறியுள்ளார்.  இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது,  நியாயமானது,  தைரியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.   ஜெருசலம் நகரின் புனிதத் தன்மை குறித்த உணர்வுப் பூர்வ நிலைமையை எவ்வகையிலும் மாற்றப் போவதில்லை என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Pin It