தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை இரண்டு மாதங்களில் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் – மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை இரண்டு மாதங்களில் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களில் மேல்மட்ட ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு வழிவகை செய்யும்  லோக் ஆயுக்தாவை அமைக்கக் கோரி,  வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா கடந்த 2016 ஆம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழக சட்டப் பேரவையில்  லோக்  ஆயுக்தா சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள்  ரஞ்சன் கோகாய், ஆர் பானுமதி, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சட்டப் பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற இரண்டு மாதங்கள் ஆகும்  என்பதால், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், இரண்டு மாதங்களுக்குள் காலதாமதமின்றி, லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

Pin It