தாலிபான் – அமெரிக்கா மீண்டும் பேச்சு – காத்திருக்கும் கடும் சவால்கள்.

(ஹிந்து பத்திரிக்கையின் சிறப்பு நிருபர் கல்லோல் பட்டசார்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நன்றி தெரிவிக்கும் நிகழ்வு விழா ஒன்றில் கலந்துகொள்ள, பக்ராம் விமான தளத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர் தாலிபானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்து சில நாட்களுக்குள்ளேயே, புதன்கிழமையன்று, அதே விமான தளத்திற்கு வெளியே இருந்த ஒரு மருத்துவ வசதி மையம், சக்திவாய்ந்த தாலிபான் தற்கொலை குண்டு வெடிப்புத்  தாக்குதலுக்கு ஆளானது. அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் உள்ள சிரமங்கள் இந்த்த் தாக்குதல் மூலம் வெளிப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், தாலிபான் அரசியல் குழு ஒன்று, அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபரைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது, இந்த இயக்கம், காபூலில் இருந்த ஒரு நேடோ ராணுவ முகாமை தாக்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர், பேச்சு வார்த்தைகளை நிறுத்தி வைத்தார் என்பது நினைவிருக்கலாம். செப்டம்பர் மாதம் நடந்த அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தாங்கள் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக தாலிபான் கூறி வருகிறது. போர் நிறுத்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டவுடன், போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் தாலிபான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவைத் தொடர்ந்து, தாலிபான், சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இந்த செய்தியுடன் சென்றது.

சிறிய தாமதம் ஏர்பட்டாலும், எந்தத் தடையுமின்றி, அமெரிக்கா தாலிபான் இடையிலான பேச்சுவார்த்தை துவங்கியது என, தாலிபானின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறினார். இஸ்லாமிய குடியரசு என்ற ஆஃப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிய அமீரகம் என மாற்ற வேண்டும் என தாலிபான் வற்புறுத்தியுள்ளது. அதிபர் அஷ்ரஃப் கானி தலைமையிலான தற்போதைய ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அடிப்படை அடையாளத்தை விட்டுக் கொடுக்கும் எந்தக் கருத்துக்களையும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பல முறை கூறியுள்ளார்.

செப்டெம்பர் மாதம் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதற்கு முன்னர், பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டன என தாலிபான் கூறியது. ஆனால், போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் மற்றும் ஆஃப்கான் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆகியவை இன்னும் நிலுவையில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய விஷயங்களாகும். வரவிருக்கும் வாரங்கள் அல்லது மாதங்களில், அமெரிக்கா, தாலிபான் மற்றும் ஆஃப்கான் அரசாங்கம் எதிர்கொண்டு சரி செய்ய வேண்டிய கடும் சவால்களாக இவை இருக்கும்.

காபுல் அரசாங்கத்தின் நிலை குறித்த தர்மசங்கடமான கேள்வியையும் தாலிபான் எழுப்பும். செப்டம்பர் 28 ஆம் நாளன்று, ஆஃப்கான் அதிபருக்கான தேர்தல் நடந்தது. ஆனால், இதுவரை, அதன் முடிவுகள் வெளிவரவில்லை. இதற்கிடையில், டாக்டர் கானிக்கு சவால் விடும் டாக்டர் அப்துல்லா அப்துல்லா, வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மையும் நியாயமும் இருக்க வேண்டும் எனக் கோரி, ஆஃப்கானிஸ்தானில் போராட்ட சந்திப்புகளை நடத்தி வருகிறார். தேர்தல் பிரச்சனைகளால் ஏதாவது வன்முறை வெடித்தால், அது, ஏற்கனவே சிக்கலில் உழலும் தாலிபான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளுக்கு, புதிய பிரச்சனைகளைக் கிளப்பலாம்.

கானி அரசாங்கத்திற்கு அதிகப் படியான வாக்குகள் மூலம் மக்கள் ஆதரவு கிடைக்காவிடில், தாலிபான் கானி அரசாங்கத்தின் சட்டப்பூர்வத் தன்மை மீது கேள்வி எழுப்பலாம். தாலிபான், தான் தான் அந்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி என்ற எண்ணத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஃப்கானிஸ்தானின் அதிகாரக் கட்டமைப்பில் தாலிபானுக்கும் பங்கு இருக்கும் வகையிலான ஒரு தீர்வை பல நாடுகள் எதிர்பார்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃப்கான் பகுதிகளுக்குள் ஐ.எஸ். படைகள் நுழைந்து விட்டதால், அரசியல் அதிகார நிலைகளில் அதிகாரப் பங்கீட்டில் தாலிபானை சேர்ப்பது தவிர்க்க இயலாதது என, சமீபத்தில் ரஷ்யா தரப்பிலிருந்து கருத்து வெளி வந்துள்ளது. ஆஃப்கானிஸ்தானில் ஐ.எஸ். போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அதனால், மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்ற கவலை ரஷ்யாவிற்கும், ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தின் நிலையும் மோசமாகலாம் என்ற கவலை சீனாவிற்கும் உள்ளது. ஐ.எஸ் தரப்பிலிருந்து எந்தவித நீண்டகால பிரச்சனையயும் எழாமல் தடுக்க, தாலிபான் ஒரு பன்னடுக்கு அதிகார பகிர்வு ஏற்பாட்டில் சேர்க்கப்பட வேண்டும் என சீனாவும் ரஷ்யாவும் விரும்புகின்றன. ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் தாலிபான் போர் நிறுத்தத்தை அறிவித்தவுடனேயே, இதில் தொடர்புடைய மற்ற நாடுகளும், ஆஃபகானிஸ்தானின் அனைத்துப் பிரிவுகளுடனும் முழுமையான இணைப்புகளை வைத்துக்கொள்ள முயற்சி செய்யும் எனத் தெரிகிறது.

அமைதிக்கான ஆக்கப்பூர்வமான சூழல் இல்லாததால், ஆஃப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நிலை மேலும் கடினமாகும் என்றே தோன்றுகிறது.  நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சில தரப்பினர் அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளனர். தாலிபானின் நம்பிக்கையைப் பெற, ஆஃப்கானிஸ்தானில் தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு, முன்னாள் ஆஃப்கான் அதிபர் ஹமித் கர்ஸாய் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் சீரமைப்புப் பணிகளில் இந்தியா முழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. ஆஃப்கானிஸ்தானின் பல்வேறு பணித்திட்டங்களுக்காக, இதுவரை, இந்தியா சுமார் 200 கோடி டாலர் நிதியுதவி செய்துள்ளது.

அமெரிக்க, தாலிபான் மற்றும் ஆஃப்கான் அரசாங்கம் என பல்வேறு தரப்பினரும், ஆஃப்கானிஸ்தானில் உள்நாட்டு அமைதிக்கு எவ்வாறு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் பேச்சு வார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றங்களை பிராந்திய மற்றும் மற்ற நாடுகளும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும்.

*******************************************************************

 

 

 

 

 

 

Pin It