துபாயில் ஸ்டார்ட்டப் இந்தியா உச்சி மாநாடு.

சிஜிஐ துபாய் மற்றும் அபுதாபியிலுள்ள இந்திய தூதரகமும், ஐஸ்பிரிட் என்ற தன்னார்வு ஆலோசனை நிறுவனமும் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில், மே மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில், ஸ்டார்ட்டப் இந்தியா உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த உச்சி மாநாட்டிற்கு, துபாயிலுள்ள டிஐஈ நிறுவனம் உதவியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஸ்டார்ட்டப் உச்சி மாநாடு இதுவே. இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்குமிடையே, கல்வியாளர்களின் கருத்துப் பரிமாற்றம், முதலீட்டாளர்களின் கூட்டு மற்றும் அமீரகத்திலிருந்து முதலீடுகள் ஆகியவை நிறைவேற ஒரு பொதுவான மேடை அமைத்துக் கொடுப்பதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும். செயற்கை நுண்ணறிவு, நிதிநுட்பம், மின்னணு மருத்துவம், உடல்நலம் சார்ந்த தொழில்நுட்பம், மென்பொருள் நுட்பம் ஆகிய துறைகளைச் சார்ந்த 17 ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து பங்கு பெறுவதாக, துபாயின் தூதரகத் தலைமை அதிகாரி விபுல் அவர்கள் தெரிவித்தார். இந்தியத் தொழில்முனைவோரை ஊக்குவிக்க, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் உருவாக்கியுள்ள தலையாய திட்டம், ஸ்டார்ட்டப் இந்தியா திட்டம் என்று, அமீரகத்தின் இந்தியத் தூதர் திரு. நவ்தீப் சூரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பன்னாட்டு நிறுவங்களின் பின்னணிப் பணியாளராக மட்டுமே இந்தியர்கள் உள்ளனர் என்ற தவறான கருத்தை மாற்றி, அவர்கள், நவீன உத்திகளில் சிறந்து விளங்கி, மறுமலர்ச்சி உண்டாக்கத் தகுந்த திறமை பெற்றவர்கள் என்பதை நிரூபிக்க இந்த உச்சி மாநாடு உதவும். ஸ்டார்ட்டப் சூழல் கொண்டு, தொழிநுட்பத்தில் சிறந்து விளங்கும் உலக நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வருங்காலத்தில், உலகத்தின் தொழில்நுட்ப மையமாக விளங்க அமீரகம் முனைந்துள்ளது.

Pin It