தேயிலையின் தரத்தை  உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரத்தை உயர்த்தி சர்வதேசச் சந்தையில் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் சாகுபடியாளர்கள் செயல்பட வேண்டும் என்று மத்திய சிறு குறு நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

குன்னூரில் நேற்று தென்னிந்தியத் தோட்ட அதிபர்களின் 124 ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், நாட்டின் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார். தேயிலை, காபி போன்ற தோட்டப்பயிர்களின் சாகுபடிக்கு அதிக அளவு நீர் தேவைப்படுவதால் பிரதமரின் ஒரு துளி, பல உயிர்கள் என்ற கோட்பாட்டின் படி, சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி அதிக மகசூலை அடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். உற்பத்தியை அதிகரிப்பதற்காக அதிக அளவில் ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் இணையமைச்சர் திரு புருஷோத்தம்   ருபாலா, விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 12 ரூபாய் பிரீமிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயனடைய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

Pin It