நகர்ப்புற மையங்களில் முதலீடு – பிரதமர் வலியுறுத்தல்.

 

கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில், உற்சாகமான பொருளாதார வளர்ச்சியின் பிரகாசமான எடுத்துக்காட்டாக விளங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெறும். வரவிருக்கும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் குறித்து பல நம்பிக்கையான கணிப்புக்கள் முன்வைக்கப்படுகின்றன.

3 ஆவது வருடாந்திர ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் பேசுகையில், இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அழைப்பு விடுத்ததை இந்தக் கண்ணோட்டத்தில் காண வேண்டும். துடிப்புமிக்க ஜனநாயகம், வணிக நட்பு சூழ்நிலை, பெரிய சந்தை மற்றும் வணிக சார்புடைய எண்ணம் கொண்ட அரசாங்கம் ஆகியவற்றால் சிறப்புநிலையைப் பெற்றுள்ள இந்தியா, நல்ல வருமானத்திற்கான முதலீட்டாளர்களின் தேடலுக்குத் தீர்வாக அமையும் என்பது உறுதி.

போக்குவரத்து, நகரமயமாக்கல் அல்லது புதுமை என எந்த அம்சமாக இருந்தாலும், இந்தியா, முதலீட்டாளர்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குகிறது என்பது கண்கூடு. கோவிட்-19 தொற்றுநோயானது, வளர்ச்சி இயந்திரங்களாக இருக்கும் நகரங்களை அதிகளவில் பாதித்திருப்பதை உலகம் கண்டுள்ளது. இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோயால் வாய்ப்புக்களும் கிட்டியுள்ளதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியை முன்னிட்டு, பல விஷயங்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பாக இது திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

சந்தேகத்திற்கு இடமின்றி, கோவிட் -19 தொற்றுநோயால், சமூகக் கூட்டங்கள், கல்வி நிறுவங்கள், விளையாட்டு, மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உலகெங்கிலும் வெகுவாக பாதிக்கப்பட்டன. இவை, கோவிட் -19 தொற்று நோய்க்கு முந்தைய சூழ்நிலையில் இருந்ததைப் போல இன்று இல்லை. ஆனால் இவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர, எவ்வாறு மறுதொடக்கம் செய்வது என்பதுதான் கேள்வி. இது தொடர்பாக, பிரதமரின் பதில் தெளிவாக இருந்தது. நகர்ப்புற மையங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவதன் மூலம் மறுதொடக்கம் செய்வது சாத்தியம் என்று அவர் வலியுறித்தினார்.

இதற்கு, வழக்கமான கண்ணோட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியமாகிறது. கோவிட் -19 க்குப் பிந்தைய உலகத்தில் மறுதொடக்கம் செய்வது, செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளை மீட்டமைக்காமல் நடக்காது என்று பிரதமர் திரு மோதி சரியாகக் குறிப்பிட்டார். இதன் மூலம், இந்தியாவின் நகர்ப்புறங்களில், குறிப்பாக ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில் பெருமளவில் இருக்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க பிரதமர் முயற்சி செய்துள்ளார்.

நகரங்களை மக்கள் நிம்மதியாக வாழக்கூடியதாக மாற்றுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு, கோவிட் -19 அரசாங்கங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று பிரதமர் கருதினார். விதிவிலக்காக இல்லாமல், வழக்கமானதாக, தூய்மையான சூழல் தொடர்ந்து நிலவும் வன்ணம், நிலைபெற்ற நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றின் பெரும் பகுதி, இணையவழியில் நடக்கக் கூடியதாக வருங்காலத்தில் இருக்கும் என்று பிரதமர் கூறினார். ஆனால் அதே நேரத்தில், நகர்ப்புற மையங்களில் ஒரு நகரத்தின் அனைத்து வசதிகளும், ஒரு கிராமத்தின் ரம்மியமான சூழலும் இணைந்து இடம் பெற்றுள்ள இந்தியாவை அவர் காண விரும்புகிறார்.

சந்தேகத்திற்கு இடமின்றி, பிரதமர் அத்தகைய விருப்பத்தை முன்வைப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சிக்கான சூழலில் மாற்றம் கண்டுள்ள இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்து, முதலீட்டாளர்களுக்கு உணர்த்துவதேயாகும்.

 

டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, மலிவுவிலை வீட்டுவசதி, ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் ஆகியவை, இந்தியாவின் நகர்ப்புறச் சூழலை முற்றிலும் மாற்றியமைக்க உதவியுள்ளன. இப்போது, 2022 ஆம் ஆண்டுக்குள், 1000 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் கட்டமைப்பை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம், இந்தியாவுக்கு இரட்டைப் பலன்கள் கிட்டும். ஒன்று, நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. இரண்டாவதாக, இந்திய நகரங்களை நவீன, சுத்தமான, முறையான மற்றும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவது.

இரண்டு கட்ட செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஸ்மார்ட் நகரங்களின் விஷயத்தில் இத்தகைய அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது, கூட்டுறவு மற்றும் ஆரோக்கியமான போட்டியுடனான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தும் நாடு தழுவிய போட்டியை நகரங்களிடையே உருவாக்கியது. ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் துடிப்புடன் செயல்படும் என்ற செய்தியை முதலீட்டாளர்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்துடன், இந்த ஸ்மார்ட் நகரங்கள், கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய், அதாவது 3000 கோடி டாலர் மதிப்புள்ள திட்டங்களைத் தயாரித்துள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.

தவிர, ரூ.1,40,000 கோடி (2000 கோடி டாலர்) மதிப்புள்ள திட்டங்கள் நிறைவடைந்துள்ளன அல்லது நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகள் குறித்த விரிவான நிலையை முன்வைப்பதன் மூலம், நகரமயமாக்கலில் இந்தியாவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்ற வலுவான செய்தியை பிரதமர் மோதி அவர்கள் வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே, ஏழைகளுக்கு வீடு கட்டுதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல், நகர்ப்புறங்களில் சுத்தமான குடிநீரை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் இந்திய நகரங்களில் வசிப்பர் என்ற எதிர்பார்ப்புக்கிணங்க, 2030 வரை, ஆண்டொன்றுக்கு, 80கோடி சதுர மீட்டர் அளவிற்கு, தங்கும் வசதி மேம்படுத்தப்பட வேண்டும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  பி.குருமூர்த்தி.)

****************************************

 

 

Pin It