நம்பிக்கையூட்டும் இந்தியாவின் வளர்ச்சி பாதை

(நியூயார்க்கைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர்  வீர.வியட்நாம்)

2017ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் கணக்கீட்டின்படி, இந்தியா, உலகிலேயே ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் ஐந்து பெரிய பொருளாதாரங்களாகும்.. இந்தியா, ஃபிரான்ஸை ஏழாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2.597 லட்சம் கோடி டாலர்களாகும். ஃபிரான்ஸின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2.582 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான பிரிட்டனின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2.62 லட்சம் கோடி டாலர்களாகும். இது இந்தியாவை விட 2500 கோடி டாலர்கள் அதிகம். இன்னும் சில காலாண்டுகளில், இந்தியா, பிரிட்டனையும் விஞ்சி வளர்ந்து ஐந்தாவது பெரிய பொரளாதாரமாக வளர்வது,  சாத்தியம். இதற்கான காலம் மிக அருகாமையில்தான் உள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள் டாலர் விகிதத்தில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஜப்பானையும் ஜெர்மனியையும் விஞ்சி வளரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள். அடுத்த தசாம்சத்தில் உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரமாக, 6 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலண்டனைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆரய்ச்சிக்கான உலகப் பொருளாதார லீக் டேபிள், 2018ஆம் ஆண்டு வெளியிட்ட கணக்கின்படி, இந்தியா பிரிட்டனையும், பிரான்ஸையும் எட்டித்தாண்டி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் பத்து இடங்களில் உள்ள மற்ற  மூன்று நாடுகள் பிரேஸில், இத்தாலி மற்றும் கனடா ஆகியவையாகும். சென்ற மாதம் உலக வங்கி வெளியிட்ட உலகளாவிய பொருளாதார வளங்கள் அறிக்கையின்படி, இந்தியா 2018 ஆம் ஆண்டு 7.3 சதவீதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இது 7.5 சதவீதமாகும். 2016ஆம் ஆண்டு ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாகவும் 2017ஆம் ஆண்டு 6.7 சதவீதமாகவும்  இருப்பதை ஒப்பிடும்போது,  வளர்ச்சி விகிதக் கணக்கீடானது வெகு வேகமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கின்றது.

உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டபடி, 2015 ஆம் அண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.2 சதவிதமாக இருந்தது என்பது சுவாரசியமானது. 8 சதவீத வளர்ச்சிக்குத் திரும்ப, சந்தைகளில் நிதி ஸ்திரத்தன்மை, பொது முதலீடு உள்ளிட்ட நிதி மற்றும் பணக் கொள்கைகள் ஆகியவற்றை இந்தியா வலுப்படுத்த வேண்டும். நீண்ட காலத்தில், இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியதும் திவால் சட்டம் அறிமுகப்படுத்தியதும் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) அறிக்கையும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதை குறித்து நிர்ணயித்துள்ளது. ஐஎம்எஃப் அறிக்கையின்படி, இந்தியா 2018 ஆம் ஆண்டு 7.4 சதவிதமும் 2019 ஆம் ஆண்டு 7.8 சதவீதமும் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2018 ஆம் ஆண்டு 6.6 சதவீதமும் 2019 ஆம் ஆண்டு 6.4 சதவீதமும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக இருக்கும் என்று இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையும் தெரிவித்துள்ளது. உயர் வளர்ச்சி விகிதத்தை நீடிக்கச் செய்ய பொருட்கள் மற்றும் சேவை வரியை எளிமையாக்கி ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிக்கைகள் ஆலோசனை கூறியுள்ளன. வங்கிகளின் இரட்டை இருப்புநிலைக் குறிப்பு நெருக்கடியை சுத்தமாக்கும் நடைமுறையும் தேவை என்று அவை ஆலோசனை கூறியுள்ளன. அதாவது, வங்கித்துறையில் பெருநிறுவன கடன் மற்றும் என்பிஏக்கள் எனப்படும் செயல்படாத சொத்துக்கள் ஆகியவை குறித்த சீர்திருத்தங்கள் மற்றும் சரியான வளர்ச்சிக்கு நில சீர்திருத்தங்கள், தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஆகியவை  தேவை என அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தியா வேகமாக வளர்ந்தாலும், வருமான சமமின்மை குறித்த விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டும். ஐஎம்எஃப் தரவுகளின்படி, தனிநபர் வருமானத்தில் இந்தியா 126ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 134 கோடியாகும். இந்தியாவின் மக்கள்தொகை 2024ஆம் ஆண்டு சீனாவை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் உயர் வளர்ச்சிப் பாதைக்கு, மாநிலங்களுக்கிடையில் பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியம்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்தியா 7 சதவீதம் வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு,தெம்பளிக்கிறது. ஏனெனில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது , 2018 ஆம் ஆண்டு வெறும் 3.1 சதவீதமாகவே இருக்கும். அதீத வறுமையை சமாளிக்க, வேகமான பொருளாதார வளர்ச்சி மட்டும் போதாது என்று உலக வங்கி வலியுறுத்தியுள்ளது. உற்பத்தித் திறனை வளர்ப்பதிலும், தொழிலாளர்கள் பங்கினை அதிகரிப்பதிலும், பெரும் பொருளாதாரக் கொள்கை வடிவமைப்பாளர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம் திடமாகத் தோன்றினாலும், பொருளாதாரச் சறுக்கலுக்கான அபாயமும் கணிசமாக உள்ளது. வளர்ந்துவரும் சர்வதேச வர்த்தகத் தற்காப்பு, உலகமயமாக்கலிலிருந்து பின்வாங்குதல், சர்வதேச நிதி சந்தையின் நிச்சயமற்ற தன்மை, வளரும் பெருநிறுவனக் கடன்கள் ஆகியவை இதற்குக் காரணிகளாக அமைகின்றன.

 

 

 

Pin It