நவாஸ் ஷரீஃபின் கூற்றால் பாகிஸ்தானுக்குத் தலைக் குனிவு.

(செய்தி ஆய்வாளர், கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின்

தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்)

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப், தன்னையும், தன் நாட்டின் நிர்வாகத்தையும் ஒரு இக்கட்டான சூழலுக்குக் கொண்டு சென்றுள்ளார். ‘பனாமா ஆவணக் கசிவு’ விவகாரத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் உச்ச நீதி மன்றத்தால் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட திரு.ஷரீஃப் ஏற்கனவே தன்னுடைய அரசியல் வாழ்வைப் பொறுத்தவரை ஒரு போராட்டம் நிறைந்த சூழலில் இருக்கிறார். அவருடைய அரசியல் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் –நவாப் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றம் அவரைத் தகுதி நீக்கம் செய்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அவரது கட்சி ஒரு முன்னணி கட்சியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நவாஸ் ஷரீஃப் அளித்த ஒரு பேட்டியில், மும்பை தாக்குதல்களின் சூத்திரதாரிகளான ஹஃபிஸ் சயித் மற்றும் மௌலானா மசூத் அசாரின் ஜமாத்-உத்-தாவா மற்றும் ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் ஆகிய பயங்கரவாதக் குழுக்களின் பெயர்களை பகிரங்கமாக எடுக்காமல், பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்கள் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார். ‘அவர்களை எந்த நாட்டையும் சேர்ந்தவர்களாக எடுத்துக்கொள்ள இயலாது. ஆனால், ”எல்லையைத் தாண்டி மும்பையில் 150 பேரைக் கொல்ல நாம் அவர்களை அனுமதிக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். நாம் இந்த வழக்கு விசாரணையை ஏன் சரியான முறையில் முடிக்கக் கூடாது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிஜமாக நடந்ததையும், நடக்க வேண்டியதையும் தான் ஷரீஃப் கூறியுள்ளார். 2008 நவம்பர் மாதம் 26 ஆம் தேதி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 165 அப்பாவி இந்தியர்களும் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர். இதற்குக் காரணம் பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர், கூட்டு விசாரணையில் ஈடுபட, அவர்களுடைய உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ-யின் தலைவரை இந்தியாவிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டார். ஆனால் அவருடைய இந்தத் திட்டத்தை பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மறுத்து விட்டார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படைகளால், அமீர் அஜ்மல் கஸாப் என்ற பாகிஸ்தான் பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டான். தனக்கு பாகிஸ்தானின் நிறுவனங்களால் பயிற்சி அளிக்கப்பட்டதையும், இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களையும் அவன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டான். எனினும், கூட்டு சதிகாரரான ஸாகி உர் ரஹ்மான் லக்வி மற்றும்  சூத்திரதாரியான ஹஃபிஸ் சயித் ஆகியோரைக் கைது செய்த பிறகு, இந்த வழக்கின் சட்ட நடவடிக்கைகளில் குழப்பமான சூழலை உருவாக்குவதற்கான அனைத்து வேலைகளையும் பாகிஸ்தான் செய்தது. மும்பைத் தாக்குதல்களில், இந்த பயங்கரவாதிகளின் பங்கு மற்றும் ஆதரவைத் தெளிவாக்கும் பல சான்று ஆவணங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்தது. எனினும், பாகிஸ்தான், ‘தேவையான ஆதாரம் இல்லை’ என்றே இன்னும் கூறிக்கொண்டிருக்கின்றது.

லக்வி மற்றும் சயித் ஆகியோரைப் பல ஆண்டுகளாக கௌரவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு, குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு, திரு.ஷரீஃபின் இந்த பகிரங்க ஒப்புதலால் தலைக் குனிவு ஏற்பட்டுள்ளது. எனினும், ஷரீஃபின் கருத்துக்களின் மீது அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 2017 ஆம் ஆண்டின் பாதி வரை, அவர் அதிகாரத்தில் இருந்தார். தற்போது, தாக்குதல்களில் தனது நாட்டிற்கு உள்ள பங்கை அவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் அப்போதே, இந்த சக்திகளுக்கு எதிராக திடமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்பது பலரது கருத்து. பிரதமர் மோதி அவர்கள், லாஹூருக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் சில நாட்களுக்குப் பிறகு, பதான்கோட் விமானப் படைத் தளத்தின் மீது தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம். அந்த சமயத்தில் திரு.ஷரீஃப் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர், 1999-ல் திரு. ஷரீஃப் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கார்கில் போர் நடந்தது.

பயங்கரவாதிகளை நேருக்கு நேர் நின்று எதிர்ப்பதில் பாகிஸ்தானுக்கு எந்த உண்மையான உடன்பாடும் இல்லை என்பது இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிந்த விஷயமாகும். தனது நாடு பயங்கரவாதத்தை வெளி நாட்டுக் கொள்கையின் ஒரு கருவியாகவே பார்க்கின்றது என்பதை முன்னாள் பாகிஸ்தான் பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார். பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் இரட்டைப் பேச்சும் அனைவரும் அறிந்த ஒன்றே.

பாகிஸ்தானில் தேர்தல்கள் நடக்கவிருக்கும் இவ்வேளையில், திரு.ஷரீஃப், அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர், ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். தற்போது, மும்பை தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கைப் பற்றிய ஒப்புதலை ஷரீஃப் அளித்திருப்பது, தனது பிரதிநிதிகளின் அனுதாபம் மற்றும் ஆதரவைப் பெறுவதற்கான அவரது தந்திரமாகவும் இருக்கலாம். தன்னை ஒரு தியாகியாகக் காண்பித்துக்கொள்ள அவர் முயற்சித்துள்ளார். ஆனால் அவரது கூற்று அவருடைய பிரச்சனைகளை இன்னும் அதிகப்படுத்தியதாகவே தெரிகின்றது. அவரது கட்சியான பி.எம்.எல்.-என், பாகிஸ்தான் ராணுவம் என இரு தரப்பினருமே அவரது அறிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரு. நவாஸ் ஷரீஃப் அளித்த அறிக்கை, இந்திய ஊடகங்களால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, பாகிஸ்தானின் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களின் ஒரு பிரிவினர், அறிந்தோ அறியாமலோ, அவரது அறிக்கையின் முழுமையான உண்மைகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இந்திய ஊடகங்களின் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்கு நம்பகத்தன்மையை அளித்து விட்டன’ என்று அவரது கட்சியான பி.எம்.எல்.-என் கூறியுள்ளது. முக்கிய தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கும், உயர் சிவில்-ராணுவ அமைப்பான, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கமிட்டி, மும்பை தாக்குதல்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் நடத்தினார்கள் என்ற திரு.ஷரீஃபின் பகிரங்க ஒப்புதலை ‘ஆதாரமற்றது’ எனக் கூறியுள்ளது.

எனினும், ஒரு பொதுக் கூட்டத்தில், ‘பயங்கரவாதச் செயல்களுக்கும், நாட்டின் தற்போதைய நிலைக்கும் யார் காரணம் என்பதை பாகிஸ்தான் தெரிந்துகொள்ள வேண்டும்’ என திரு. ஷரீஃப் கூறியுள்ளார். ‘பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தி, இன்று, பாகிஸ்தான் கூறுவதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலைக்கு, இந்த நாட்டை யார் கொண்டு வந்தது?’ என அவர் கேள்வி எழுப்பினார். கண்டிப்பாக, இவை அனைத்தும் பாகிஸ்தான் நிர்வாகம் விடை கூற வேண்டிய வினாக்களாகும்.

மொத்தத்தில், இந்தியா இது வரை கூறி வந்தது முழுவதும் உண்மையே என்பதும் மும்பை தாக்குதல்களுக்குக் காரணமானவர்களுக்குத் தகுந்த தண்டனையை வழங்க வேண்டிய பொறுப்பு இனி பாகிஸ்தான் நிர்வாகத்தின் கையில் இருக்கிறது என்பதும், திரு.ஷரீஃப் தற்போது அளித்துள்ள இந்த அறிக்கையால் மற்றொரு முறை நிரூபணமாகியுள்ளது.

                                                               ____________

 

Pin It