நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்.

(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)

நடந்து வரும் நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத்தொடரின் போது, மேலவையான மாநிலங்களவையில் மின் சிகரெட்டுகள் தடைச் சட்டம், 2019 நிறைவேற்றப்பட்டது. சிறப்புப் பாதுகாப்புக் குழு (திருத்தம்) சட்டம், 2019, தாத்ரா நகர் ஹவேலி, தமன் தியு (யூனியன் பிரதேச இணைப்பு) சட்டம், 2019 ஆகியவையும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

கீழ் சபையான மக்களவையில், வரி விதிப்பு  சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2019 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறுவன வரிகளை வெகுவாகக் குறைத்துள்ளது. அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்கா – சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப்போரின் பின்னணியில், சீனாவுக்கு மாற்றை விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு, ஒரு பாதுகாப்பான நாடாக இந்தியாவை முன்னிறுத்தும்  நோக்கமும் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார். அக்டோபர் 1-க்குப்பிறகு தொடங்கப்பட்டு, உற்பத்தித் தொழிலில் முதலீடு செய்துள்ள எந்த ஒரு   நிறுவனமும், எந்த விலக்குகளும் பெறாத வரை, 2023 மார்ச் 31-க்குள் உற்பத்தியைத் துவக்கும் பட்சத்தில், 15% வரி செலுத்தலாம். செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் இந்த வரி மொத்தம் 17 சதவிகிதமாக இருக்கும் என்று அவர் விளக்கமளித்தார். இந்த வரிக் குறைப்பை அனைத்து தொழில்துறை ஜாம்பவான்களும் வெகுவாக வரவேற்றுள்ளனர். இது,  இந்திய நிறுவனங்களைச் சந்தையில் போட்டியிடத் தயார் படுத்த, மோதி அரசு எடுத்த  ஒரு நல்ல நடவடிக்கையாகக் கருதுகின்றனர்.

மாநிலங்களவையில் மின்னணு சிகரெட்டுகள் தடைச் சட்ட மசோதா, 2019 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் கீழ், மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, சேமிப்பு, விளம்பரம் அனைத்தும் தடை செய்யப்படுகிறது.  நிகோடின் மற்றும் பிற ரசாயனப் பொருட்களின் மூலம் சுவாசிக்க ஒரு ஆவியை உருவாக்கும் எதையும் மின்னணு சிகரெட்டுகள் என இச்சட்டம் வரையறுக்கிறது. இச்சட்டத்தை மீறினால், ஒரு வருடம் வரை சிறைத் தண்டனையும் பத்து லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும். விவாதத்தின் போது பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், புகையிலை கட்டுப்பாட்டில் உள்ள சவால்களைச் சந்திக்கவும், தேவையான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்பதை இது காட்டுவதாகக் கூறினார்.

மாநிலங்களவையில், சிறப்புப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா, 2019 நிறைவேற்றப்பட்டது. சென்ற வாரம், மக்களவையில் சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்புச் சேவை பிரதமருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் தவிர, முன்னாள் பிரதமர் மற்றும் குடும்பத்தாருக்கு ஐந்தாண்டுகள் வரை மட்டுமே அளிக்கப்படும் என்று திருத்தப்பட்ட சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தாத்ரா, நகர் ஹவேலி மற்றும் தமன், தியு ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் ஒரே யூனியன் பிரதேசமாக இணைக்கப்படும் சட்ட மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  இணைக்கப்பட்ட புதிய யூனியன் பிரதேசம், தாத்ரா, நகர் ஹவேலி மற்றும் தமன், தியு யூனியன் பிரதேசம் என்று அழைக்கப்படும். கப்பல்கள் மறு சுழற்சி சட்ட மசோதா, 2019-ம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கப்பல் கட்டுமானத்தில் ஆபத்தான பொருட்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் இந்தச் சட்டம், கப்பல்களின் மறு சுழற்சியையும் முறைப்படுத்துகிறது.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவிருக்கும் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை மத்திய அமைச்சரவைக் குழு அங்கீகரித்துள்ளது. நாடுமுழுவதும் தேசிய குடியுரிமைப் பதிவேடு முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஆளும் பாரதீய ஜனதா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்,  டிசம்பர் 4 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கான அமைச்சரவை ஒப்புதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும், குறிப்பாக, ஹிந்து, சீக்கிய, ஜைன, புத்த, பாரசீக, கிறிஸ்தவ அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது இச்சட்டத்தின் நோக்கம். முறையான பயண  ஆவணங்கள் இல்லையென்றாலோ அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாகத் தங்கியிருந்தாலோ அது சட்ட விரோதக் குடியேற்றம் என்று கூறும் 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்திலிருந்து இது மிகப்பெரிய மாற்றத்தைக் கொன்டுள்ளது.

நடப்புக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள தனி நபர் தரவுப் பாதுகாப்புச் சட்ட மசோதாவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தரவுத் திரட்டல், சேமிப்பு, பயன்பாடு, தனிநபர் ஒப்புதல்,அபராதங்கள், இழப்பீடு, நடத்தை விதிமுறைகள், அமலாக்கம் ஆகியவை குறித்த விரிவான வழிமுறைகளுக்கு இந்த மசோதா வழிவகுக்கும். நிதி , உடல்நலம் ஆகிய முக்கிய தகவல்கள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுப் பயனாளர்கள் குறித்த நெறிமுறைகள் மசோதா தாக்கல் செய்யப்படும் போது முன்வைக்கப்படும்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் திருத்தம் குறித்துப் பரிந்துரைக்க, மத்திய அரசு ஒரு கமிட்டியை அமைத்திருப்பதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் அவையில் தெரிவித்தார். மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய உள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அவர்கள், நாட்டிலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது குறித்த கடுமையான விதிமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

 

 

 

 

Pin It