நாடாளுமன்றத்தில் சென்ற வாரம்.

(பத்திரிக்கையாளர் வி. மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்.)

நவம்பர் 26 ஆம்  தேதி, 1949 ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பு சபை, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுகொண்டது.   அதனைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 26 ஆம் தேதியை  இந்திய அரசியலமைப்பு தினமாக, கடந்த செவ்வாய் கிழமை கொண்டாடப்பட்டது.

அரசியலமைப்பு ஏற்றுகொள்ளபட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது, 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாள், இந்தியா குடியரசாக மாறியது.  அன்று முதல் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.  கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில்,   இரு அவைகளின் கூட்டமர்வு நிகழ்ந்தது.   கூட்டமர்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், உரிமைகளும் கடமைகளும் ஒரு  நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனவும்,   குடிமக்கள் தங்களது கடமைகள் குறித்த உணர்வுடையவர்களாக இருக்கவேண்டும் எனவும் கூறினார். மக்கள் தங்களது கடமைகளை சரிவர ஆற்ற வேண்டும் எனவும், அதன் மூலம் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய சூழ்நிலைகளை வலுவாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  மாநிலங்களவையின் 250 ஆவது அமர்வைக் குறிக்கும் வகையில், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு எனும் தொகுதியையும்,  நினைவு நாணயம் ஒன்றையும், முத்திரை ஸ்டாம்ப் ஒன்றையும் குடியரசுத் தலைவர் வெளியிட்டார். நாடாளுமன்றம் குறித்த  டிஜிட்டல் கண்காட்சி ஒன்றையும் அவர் துவக்கி வைத்தார்.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த முக்கிய சிற்பியான டாக்டர் பி.ஆர் அம்பேத்காரின் அபிலாஷைகளை பிரதமர் திரு நரேந்திர மோதி நினைவு கூர்ந்தார்.  அரசியலமைப்பை  இந்தியாவை வழி நடத்தி செல்லும் ஒளி தீபம் என்றும் நாட்டின் புனித புத்தகம் என்றும் அவர் கூறினார்.   அரசியலமைப்பின் வலிமை மற்றும் உள்ளடக்கம் குறித்துப் பேசிய அவர்,  குடிமக்களின் உரிமைகள், கடமைகள் இரண்டையுமே முன்னிலைபடுத்துவதே அதன் சிறப்பம்சம் என்று எடுத்துரைத்தார்.  மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு பேசுகையில், கடந்த 70 ஆண்டுகளில், நாடானது, ஜன நாயக அரசியலமைப்பு வழியில் செல்வது மட்டுமல்லாமல்,  அதற்கு மேலும் உயிர் கொடுப்பதிலும்,  ஜனநாயக நெறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதிலும் மிகப் பெரும் முன்னேற்றமடைந்துள்ளது என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது ஐ.நா.சபை,  மனித உரிமை ஆணையம் மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு போன்ற சர்வதேச மன்றங்களில் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தவறான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டது என்று, மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் மறு சீரமைக்கப்பட்டதை அடுத்து, அந்த வட்டாரத்தில் ஆபத்தான, கவலைக்கிடமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரமையை உருவாக்க முயற்சித்த பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் இந்தியா முறியடித்துவிட்டதாக, கடந்த புதனன்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உலக நாடுகள், பாகிஸ்தானை, தனது எல்லைக்குள் எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

உள்துறை அமைச்சக இணை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய வான் படை  நடத்திய வான் வழித் தாக்குதல்களினால் நிலை குலைந்த பாலாகோட் பயங்கரவாத முகாமை, மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு, பாகிஸ்தானை மையமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக, மாநிலங்களவையில் கடந்த புதனன்று தெரிவித்தார்.   பாலாகோட் முகாமை மீண்டும் செயல்படவைக்கவும்,  இந்தியாவுக்கு எதிரான ஜிஹாத் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவும் பயங்கரவாத அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் எந்த ஒரு மந்த நிலையையும் எதிர்கொள்ள வில்லை எனவும்,  அதனை மேலும் வலுப்படுத்த அரசு வலுவான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் நிதி அமைச்சர்   நிர்மலா சீதாராமன் கடந்த புதனன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து மாநிலங்களவையில் நிகழ்ந்த குறுகிய கால விவாதத்திற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.  பொருளாதாரத்தை வலுவாக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தில்லியை சேர்ந்த, அணி சேரா ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் அழைப்பின் பேரில், பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு, அக்டோபர் 28 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வருகை தந்ததாக, மாநிலங்களவையில் வியாழன்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் கூறினார்.  “இந்தியாவை பயங்கரவாதம் எவ்வாறு பாதிக்கிறது என்று புரிந்து கொள்வதற்காக காஷ்மீர் சென்று பார்க்க அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.  எனவே அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதே போல் முன்னமும் சில வெளிநாட்டுப் பிரமுகர்களுக்குப் பிரயாண ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இந்தப் பயணத்தின்போது, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவுக்கு பயங்கரவாதம், முக்கியமாக ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எப்படி  அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று உணர்ந்து கொண்டனர்.  இத்தகைய பரிமாற்றங்கள் மக்களுடனான மக்கள் தொடர்பை வலுப்படுத்தி ஊக்குவிக்கும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களுடன் ஒத்திருக்கின்றன. இந்தியா மற்ற நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளை இது மேலும் வளர்த்து ஊக்குவிக்கும்” என்று அவர் கூறினார்.

Pin It