நாடாளுமன்றத்தில் சென்ற வாரம்

(மூத்த பத்திரிக்கையாளர் நிரந்தரா நாராயண தேவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – வீர.வியட்நாம்)

இந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்வு, மக்களவையில் இரயில்வேத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதுதான். விவாதத்தின்போது பதிலளித்த இரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, இரயில்வேயின் தன்னாட்சி எக்காரணம் கொண்டும் சமரசம் செய்யப்படமாட்டாது என்று கூறினார். பொது பட்ஜெட்டுடன் இரயில்வே பட்ஜெட்டை இணைத்ததால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். அதனை பல்வேறு சேவைகளுக்கும் கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார். ரூ.3,50,000 கோடி முதலீட்டில் பணி புரிய இரயில்வே ஏற்கனவே தயாராகியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ராஜதானி மற்றும் பிற இரயில்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஃப்லெக்ஸி ஃபேர் சிஸ்டம் எனப்படும் வளைவுத் தன்மை கொண்ட கட்டண முறையைப் பரிசீலிக்க வேண்டும் என்று சில உறுப்பினர்கள் இரயில்வே அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்கள். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விவசாய அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் குறித்து மக்களவையில் விவாதம் நடந்தது.

பாதுகாப்பு அமைச்சகத்தின்  மானியக் கோரிக்கைகளுக்கான விவாதத்தைத் துவக்கி வைத்துப் பேசிய பாஜக உறுப்பினர் ஆர்.கே.சிங், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தானுக்கு நல்ல தெளிவான சமிக்ஞையை அளித்துள்ளது என்று கூறினார். இப்போதுள்ள அரசு என்றால் செயல்பாடு என்று பொருள் என்ற விளக்கத்தை உலகிற்கே இந்தியா உணர்த்தியுள்ளது. முக்கியமாக, தேசியப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தியா நன்றாக செயல்படுகிறது என்று அவர் கூறினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், அவரது அபார செயல்பாட்டால், பல முறை செய்திகளில் இடம் பெற்றார் என்று பல்வேறு உறுப்பினர்கள் கூறினர். திரு. பாரிக்கர் தற்போது கோவா முதலமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பல ஆண்டுகளாக பாதுகாப்புத்துறையில் காலாவதியாகிப்போன பணத்தையெல்லாம் சேர்த்து ஒரு நிதியம் உருவாக்க வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து அபாரமானது என்று பிஜு ஜனதா தள உறுப்பினர் பினாக்கி மிஷ்ரா தெரிவித்தார். தீவிரவாத முகாம்களுக்கு எதிராக அதிரடித் தாக்குதல் நடத்தியதற்கான பெருமை நம் சிப்பாய்கள், பிரதமர் மோதி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் ஆகியோரையே சாரும் என்று, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் கூறினார். இவர்கள் இதற்கான திட்டத்தைக் கூர்மையாகத் தீட்டினார்கள் என்றார் அவர். விவசாய அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். இதற்கான திட்டம் என்ன என்று ஆர்.எஸ்.பி. கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேமச்சந்திரனும் வேறு சில உறுப்பினர்களும் கேள்வியெழுப்பினர்.

சமீபத்தில் முடிவடைந்த மாநிலத் தேர்தல்களில், பாஜக வின் வெற்றிக்குக் காரணகர்த்தாவாக இருந்த சாதனையாளர், பிரதமர் மோதி, இரு அவைகளுக்கும் வந்தபோது, உணர்ச்சிபூர்வமான கோஷங்களும், கரவொலியும் அவரை வரவேற்றன. மாநிலத் தேர்தல் முடிவுகள் மார்ச் மாதம் 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் இந்த வாரம் இரு அவைகளுக்கும் வருகை தந்தார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குறித்த அறிக்கையை அவர் அளித்தார். வெளிநாடுகளில், குறிப்பாக, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அரசு விழிப்புடன் உள்ளது; அவர்களைப் பாதுகாக்கத் தேவைப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் அங்கும், இங்கும் ஒரு சில இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாலேயே, அந்நாட்டினர் இந்தியர்களுக்கு எதிரான மனப்பான்மையுடையவர்கள் என்று கருதிவிட முடியாது என்று அவர் கூறினார்.

மீனவர்கள் பாதுகாப்பு குறித்தும், அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மாநிலங்களவையில் அவர் சமர்ப்பித்த மற்றொரு அறிக்கையில், பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மாநிலங்களவையில் கோவா மற்றும் மணிப்பூர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. கோவாவிலும், மணிப்பூரிலும் பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இதனால், சிறிய இடைவேளைக்குப் பிறகு, மூன்று முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் வெளிவந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மக்களவையில் எதிரொலித்தன. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தர்மேந்திர யாதவ் பேசும்போது, எங்கள் தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம், ஆனால் உண்மையைப் பேசத் தயங்கமாட்டோம் என்று கூறினார். புதிய சுகாதாரக் கொள்கை, 2017 ஐ சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்தார். 2018ஆம் ஆண்டுக்குள் தொழுநோயையும், காலா அஸார் வியாதியையும் முற்றிலும் ஒழிப்பதென்று அரசு இலக்கு வைத்திருப்பதாக அவர் கூறினார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 சதவிகிதத்தை சுகாதாரம், யோகா துறைகளுக்கு ஒதுக்க, புதிய சுகாதாரக் கொள்கை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

இடதுசாரித் தீவிரவாதிகளை அழிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் தவற விடப்படாது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மார்ச் 11 ஆம் தேதி நடைபெற்ற சுக்மா தாக்குதல் குறித்து மக்களவையில் அவர் ஓர் அறிக்கையளித்தார். இத்தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீர்ர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய தாக்குதலில் இடதுசாரித் தீவிரவாதிகளின் விரக்தி வெளிப்படுகிறது என்று அவர் கூறினார்.

Pin It